புனித வேதாகமத்தின் வரலாறு

1 2 3 12

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2018)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

மோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.

அதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் உபயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.

1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.

(முற்றிற்று)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

1927-ம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. லார்சனின் மொழிபெயர்ப்பு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், இம்மொழிபெயர்ப்புக்கெதிராக மாதா மாதம் நல்ல சமாரியன் எனும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளேயாகும். இக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட நியாயங்களைத் தொகுத்து, “புதிய தமிழ் மொழி பெயர்ப்பு அச்சிடாமலும் அதை உபயோகிக்காமலும் விடுவதற்கு ஒரு மனு” எனும் தலைப்பில் ஒரு ஆங்கில நூல் 1939-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், லார்சன் குழுவினர் வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றியுள்ளனர்; அதில் பல வசனங்கள் விடப்பட்டுள்ளதோடு பல புதிய வசனங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், மொழிபெயர்ப்புக் குழுவில் கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்த ஒருவர் இருக்கிறார் என்றும், இது 1611-ல் வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமத்தைத் தழுவி மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், புதிய மொழிபெயர்ப்பில் இந்தியாவில் உபயோகிக்கப்படாத யாழ்ப்பாணத் தமிழ் கலந்திருக்கிறது என்றும், அம் மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாய் இருந்த சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகள் ஆதாரமற்றவை என்றும் சொல்லப்பட்டிருந்தது. மக்கள், லார்சன் மொழிபெயர்ப்பை வாசித்திராதபடியால், நல்ல சமாரியன் சுட்டிக்காட்டியவை உண்மை என நம்பினர். எனினும், லார்சன் மொழிபெயர்ப்பில் வாக்கிய அமைப்புகளே மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, வசனத்தின் கருத்தை மாற்றவில்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் உள்ளது எனும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பு, யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனைப்படி திருத்தப்பட்டபோதே யாழ்ப்பாணத் தமிழ், வேதாகமத்தில் புகுந்தது. ஆனால், லார்சன் மொழிபெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் புகுவதற்கு இடமிருக்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு தமக்குப் பழக்கமற்ற நல்ல தமிழ் நடையாய் இருந்தமையே, அது யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்லப்பட்டதற்கான காரணமாகும். கிறிஸ்தவர்கள், தாம் அதுவரை காலமும் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பில் பழக்கப்பட்டுவிட்டதால், அதைவிட சிறந்த தமிழை இவ்வாறு குறை கூறினர். மொழிநடை திருத்தப்படும்போது, வசனத்தின் கருத்து மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே நாம் ஒரு மொழிபெயர்ப்பை நிராகரிக்கவேண்டும். லார்சனின் மொழிபெயர்ப்பு வேதவசனங்களின் கருத்தை மாற்றவில்லை. அப்படியிருந்தும், வேதத்தை மாற்றிவிட்டார்கள் எனும் பிரச்சாரம் அம்மொழிபெயர்ப்பைப் பிரபல்யமற்றதாக்கிவிட்டது. 1936-ம் ஆண்டு, லார்சன் குழுவினர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து முழுவேதாகமமாக வெளியிடப்பட்டது.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமைக்கு இன்னுமொரு காரணம், மக்கள் ஹென்றிபவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பில் பழகிப்போனமையேயாகும். லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபையினரும் இம் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், அதுவே மக்கள் அறிந்திருந்த ஒரே ஒரு மொழிபெயர்ப்பாயிருந்தது. நாளடைவில், வேதாகமம் அதற்கும் முன்பே மொழிபெயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது என்பதை மக்கள் மறந்துபோயினர். தாம் உபயோகித்த வேதாகமத்தின் வசனங்களையே கிறிஸ்தவர்கள் மனனம் செய்து வந்தமையினால், அதன் மொழிநடையை மாற்ற எவரும் விரும்பவில்லை. ஹென்றி பவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தபோது, அதுவரைகாலமும் மக்கள் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பின் வசனநடை மக்களை எவ்வாறு கவர்ந்துள்ளது என்பதை அறிந்து, வேதாகம மொழிநடை திருத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்திடாத வண்ணம் புதிய மொழிபெயர்ப்பை செய்தமையினால், எல்லோரும் அவருடைய புதிய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொண்டனர். லார்சன் குழுவினர் இதைக் கருத்திற்கொள்ளாதமையினால் அவர்களது மொழிபெயர்ப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

லார்சன் மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டதன்பின் அதை மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகத் தொடங்கியது. நல்ல சமாரியன் குழுவினர், ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகிக்க வேண்டும் எனக்கூறி வந்தனர். எனினும் அம்மொழிபெயர்ப்பு, 16-ம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தமையினால் திருப்திகரமான மொழிபெயர்ப்பு அல்ல என்பதே வேத பண்டிதர்களின் கருத்தாயிருந்தது. லார்சன் மொழிபெயர்ப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும் அது, மிகவும் நம்பகமான சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளை ஆதாரமாய்க் கொண்டிருந்தமையினால், அதுவே மூலமொழிக்கு ஏற்றமொழிபெயர்ப்பு என்பதை மூலமொழியை அறிந்திருந்த அனைவரும் நன்கறிந்திருந்தனர். எனவே, நம்பகமான பிரதிகளை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை ஏற்றுக்கொள்ளாமல், ஆதாரக் குறைவான மூலப்பிரதியை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை உபயோகிப்பது நல்லதல்ல என பலர் கருதத் தொடங்கினர். ஆனால், லார்சன் குழுவினரது மொழிபெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமையினால், அதை, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டுமென்று 1939-ல் சென்னை வேதாகமச் சங்கம் தீர்மானித்தது.

லார்சன் மொழிபெயர்ப்பு ஹென்றி பவரின் மொழிநடையில் திருத்தப்பட வேண்டும் என வேதாகமச் சங்கம் கூறியது. ஹென்றி பவரும் இதேவிதமாகவே தனது மொழிபெயர்ப்பைத் திருத்தியிருந்தார். அவருடைய காலத்தில் மக்கள் பெப்ரீஷியசின் மொழிநடையில் பழகிப்போயிருந்தமையினால், ஹென்றிபவர் அம்மொழிநடையை மாற்றவில்லை. புதிய திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பை மக்கள் வாசித்தபோது, தாம் பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே வாசிக்கின்றோம் எனும் உணர்வு ஏற்படும் வண்ணம் ஹென்றிபவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இதனாலேயே, லார்சன் மொழி பெயர்ப்பு ஹென்றிபவரின் மொழி நடையில் திருத்தப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, லார்சன் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெகோவா எனும் பதத்தை, பழைய மொழிபெயர்ப்பிலுள்ளது போன்று கர்த்தர் என்றே மாற்றவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய மொழி பெயர்ப்புக் குழுவுக்குப் பொறுப்பாக சி.எச்.மோனஹன் என்பவர் நியமிக்கப்பட்டார். அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவராவார். தான் அதுவரைகாலமும் பணியாற்றிய மிஷனிலிருந்து 1940 இல் ஓய்வு பெற்றபோது, இவர் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார்.

மோனஹன் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப்பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாவதற்குள் அதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டுவந்த வேதப்பிரதிகளைவிட பழைமையானதும் நம்பகமானதுமான இரு வேதப்பிரதிகள் கண்டுபடிக்கப்பட்டமையேயாகும். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வல்கேட் என அழைக்கப்படும் ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தபின், அதையே ரோம சபை உபயோகித்து வந்தது. கி.பி. 1453இல் கான்ஸ்டன்டிநோபிள் எனும் நகரைத் துரக்கியர்கள் கைப்பற்றியபோது, கிரேக்க மொழியை அறிந்திருந்த பல பண்டிதர்கள் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர்.

இதனால் 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் கிரேக்க மொழியறிவு அதிகரித்தபோது, லத்தீன் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்குமுன் உபயோகத்தில் இருந்த பல கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் மக்கள் உபயோகிக்கத் தொடங்கினர். எனினும், இவற்றில் பல வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் இருந்தமையினால், இரஸ்மஸ் என்பவர், தனக்கு கிடைத்த 20 கிரேக்க வேதப்பிரதிகளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய கிரேக்க வேதப்பிரதியைத் தயாரித்தார். இதுவே, அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட மூலப்பிரதியாக எல்லா மொழி பெயர்ப்பாளர்களினாலும் கருதப்பட்டது. இதிலிருந்தே 250 வருடங்களாக ஆங்கில உலகை ஆக்கிரமித்திருந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இவ்வாங்கில மொழிபெயர்ப்பைத் தழுவிய மொழி பெயர்ப்பாகவே இருந்தது.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்தபின், வேதாகமத்தின் இரு முக்கியமான கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று 1859இல் சீனாய் மலையிலுள்ள புனித கத்தரின் துறவுமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாகும். அதேசமயம் வத்திக்கான் நூலகத்திலிருந்த வேதச்சுவடியும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். இச்சுவடி 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தாலும், 1843 இலேயே இதை உபயோகிப்பதற்கு ரோம சபை அனுமதியளித்தது. இவ்விரு வேதச் சுவடிகளையும் ஆராய்ச்சி செய்த பண்டிதர்கள், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டு வந்த அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதியைவிட, இவையிரண்டும் சிறப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டனர்.

இதன்பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் இரஸ்மஸ் தயாரித்த மூலப்பிரதியை ஆராய்ச்சியாளர்கள் நம்பகமானதாகக் கருதவில்லை. இதிலிருந்து, அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் எல்லாம் பிழையானவை என நாம் எண்ணலாகாது. கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளில் சில வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் ஏற்பட்டிருந்தன. இது பிரதிபண்ணியவர்களினால் ஏற்பட்ட தவறாகும். எனவே, கிடைக்கக்கூடிய எல்லா பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நம்பகமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில், சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதற்கும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த கிரேக்க பிரதியை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் திருத்தப்படவேண்டியது அவசியமாகிறது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் வெளிவந்த காலத்தில், 1611 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் ஆங்கில உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அதை அடிப்படையாய்க்கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் திருத்தப் பட வேண்டும் எனும் கருத்து உருவானது.

ஹென்றி பவரின் மொழிபெயர்ப்பில் சில பிழைகள் இருப்பதனால் அது திருத்தப்படவேண்டும் என சென்னைக் கிறிஸ்தவப் பிரதிநிதிச் சங்கம் 1915இல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க வேதப் பிரதியை 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த வேதப்பண்டிதர்கள், அதைவிட சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பதை அறியத்தந்தமையினால், தற்சமயம் பல கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்தோடு, வேதாகமத்தில் பவுல் போன்றவர்களை அவன் என்று மரியாதைக் குறைவாக அழைக்கக்கூடாது என்றும் இச்சங்கம் தெரிவித்தது. இக்கருத்துக்கள் அனைத்தும் இச்சங்கத்தினால் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பிரதிநிதிச்சங்கத்தின் கருத்துக்களை ஆராய்ந்த சென்னை வேதாகமச் சங்கம், லூத்தரன் சபை ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளாதமையினால், அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதாகமத்தைத் திருத்த வேண்டுமென 1917இல் தீர்மானித்து அதற்கென ஒரு குழுவை நியமித்தது. 1920இல், புதிய ஏற்பாட்டில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை இக்குழு வேதாகமச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டியது. எல்.பி.லார்சன் என்பவர் இக்குழுவுக்குத் தலைவராக இருந்தார். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இவர், 1889ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்தார். 1910இல் பெங்களூரில் புதிதாக ஒரு இறையியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது லார்சன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்த இவர், 1924இல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். 1925ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷமும் பின்னர் மாற்கு, யோவான் சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட இப்பதிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்பதற்குப் பதிலாகக் கடவுள் எனும் வார்த்தையை லார்சன் உபயோகித்திருந்தார். லூத்தரன் சபை தேவன் எனும் பதத்தை விரும்பாதமையினால் கடவுள் எனும் பதம் அவர்களைத் திருப்திப்படுத்தும் என வேதாகமச் சங்கம் எண்ணியது. அதேசமயம், தேவன் என்ற சொல் மூலப்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1927ஆம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது.

(தொடரும்)

1 2 3 12
சத்தியவசனம்