அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(2) சீன மொழிபெயர்ப்பு

1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தி யடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார். 1810 ஆம் ஆண்டு அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களது வேதநூல் என்பதை அரசு அதிகாரிகள் அறியாதிருப்பதற்காக, வேறு அட்டைகளுடன் பிரசுரிக்கப்பட்டு புத்தக வியாபாரிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

அவர்கள் அவற்றை விற்று அதிக பணம் சம்பாதித்து வந்தனர். அவ் வருடம் 6 மாதங்களின் பின் மொரிசன் வழக்கம் போல மெக்கவ்விற்குச் சென்றார். அச்சமயம் தான் மரப்பலகையில் செய்த சீன அச்செழுத்துக்கள் அரசு அதிகாரிகளின் கண்களில் தென்படாமலிருப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் புதைத்து விட்டுச் சென்றார்.

ஆனால் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்கு வந்து அவற்றைத் தோண்டியெடுத்த போது அவை அனைத்தும் கறையான்களுக்கு உணவாகியிருப்பது தெரிய வந்தது. வருடத்தில் 6 மாதங்கள் மனைவியின் பிரிவு, அவரது தேக ஆரோக்கியத்தின் வீழ்ச்சி என்பன மொரிசனை வெகுவாகப் பாதித்தாலும் அவர் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். இதன் பயனாக 1814 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதையும் சீன மொழியில் அவரால் வெளியிடக் கூடியதாயிருந்தது.

மொரிசனது மொழிபெயர்ப்பு வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்காக லண்டன் மிஷனரி சங்கம் வில்லியம் என்பவரை சீனாவுக்கு அனுப்பியிருந்த போதிலும் அவருக்கு கன்டனிலும் மெக்கவ்விலும் இருப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் மலாக்கா எனுமிடத்துக்குச் சென்று அங்கிருந்தவாறே மொரிசனுக்கு உதவி செய்தார். 1819 ஆம் ஆண்டு முழுவேதாகமமும் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இதில் 10 புத்தகங்களை மலாக்காவில் இருந்த வில்லியம் மொழிபெயர்த்திருந்தார். கன்டன் நகரில் வேதாகமம் விற்பனை செய்யப்படுவதை சீன அரசாங்கம் தடை செய்த போதிலும் வேதாகம விற்பனையினால் புத்தக வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்தமையினால் அவர்கள் அதற்கு வேறு தலைப்புகளுடனான அட்டைகளைப் போட்டு விற்பனை செய்தனர்.

1834ஆம் ஆண்டு ரொபர்ட் மொரிசன் மரணமடைந்தார். இவரது மிஷனெரிப்பணி கன்டன் நகர எல்லைக்கு அப்பால் செல்லாதபோதிலும் காலப்போக்கில் இவர் மொழி பெயர்த்த சீன வேதாகமம், சீனா வெங்கும் சென்றது. பிற்காலத்தில் சீனாவுக்குச் சென்ற மிஷனெரிகள் மொரிசனது சீன வேதாகமத்தை உபயோகித்தே சீன மக்களுக்குத் தேவ வார்த்தையை அறிவித்தனர்.

(3) ஜப்பானிய மொழிபெயர்ப்பு

1831 ஆம் ஆண்டு பசிபிக் சமுத்தி ரத்தில் கடற்சூறாவளியால் தாக்கப் பட்ட ஜப்பானியக் கப்பலொன்றிலிருந்து மூன்று ஜப்பானிய மாலுமிகள் காப்பாற்றப்பட்டு கனடா வழியாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களது உதவியோடு நெதர்லாந்து மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த குட்லொஃப் என்பவர் யோவான் சுவிசேஷத்தை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இது 1837இல் சிங்கப்பூரில் அச்சிடப்பட்டது. ஜப்பானிய மாலுமிகள் மூலமாக இதை ஜப்பானுக்கு அனுப்ப குட்லொஃப் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அவர் சென்ற கப்பல் ஜப்பானியத் துறைமுகத்தில் துப்பாக்கி குண்டுக்களுக்கே முகங் கொடுக்க வேண்டியிருந்தபடியால் அவர் சீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இதன்பின் அற்புதமான முறையில் வேதாகமம் ஜப்பானுக்குள் சென்றது.

1854இல் ஆங்கில கப்பலொன்றிலிருந்த ஒருவருடைய வேதாகமம் தவறி கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிவடைந்து விட்டதாக கப்பலிலிருந்தவர்கள் நினைத்தாலும், அது ஒரு ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது. அவன் அதைத் துறைமுக அதிகாரியிடம் எடுத்துச் சென்றான். வேதாகமத்தைப் பார்த்த அதிகாரி அது சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டதோடு, அதன் ஒரு பிரதியை தன்னிடம் கொண்டுவரும்படியும் கட்டளையிட்டான். அதை வாசித்த அதிகாரி இரட்சிக்கப்பட்டதோடு, அவன் அதைத் தனது நண்பனுக்கும், சகோதரனுக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டதோடு, இம்மூவரும் அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜப்பானுக்கு வந்த மிஷனெரிகள் ஜப்பானிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினர். ஜப்பானிலிருந்த அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த கொப்பிள் என்பவர் 1871இல் புதிய ஏற்பாட்டை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கி, 1879இல் பூர்த்தி செய்தார். 1887இல் ஜப்பானில் பணியாற்றிய பலதரப்பட்ட மிஷனெரி சங்கங்களையும் சேர்ந்தவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் வெளிவந்தது. ரோமன் கத்தோலிக்க மிஷனெரிகள் 1895 முதல் 1897 வரையிலான காலப் பகுதியில் நான்கு சுவிசேஷங்களையும் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

1900இல் கிரேக்க ஓர்த்தடொக்ஸ் சபையினர் மொழி பெயர்த்த ஜப்பானிய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1955இல் திருத்தப்பட்ட புதிய ஜப்பானிய வேதாகமம் வெளியிடப்பட்டது.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(1) பர்மிய மொழிபெயர்ப்பு

அதோனிராம் ஜட்சன் ரங்கூனி லிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள். அச் சமயம் பர்மாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே யுத்தம் மூண்டதினால், வெளிநாட்டினர் அனைவரும் ஒற்றர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதோனிராம் ஜட்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு 11 மாதங்களாக புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த ஒரு சிறையில் சங்கிலிகளினால் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு கொசுக்களும், பூச்சிகளும் அவரைக் கடித்துக்கொண்டிருந்தன. தரையும் ஈரமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் இருந்தது. சிறையில் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஜட்சன் எப்போதும், தான் மொழிபெயர்த்த பர்மிய புதிய ஏற்பாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார்.

அதோனிராம் ஜட்சன் சிறையிலிருந்த காலத்தில், பர்மிய அதிகாரிகள் தான் பர்மிய மொழியில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் பிரதிகளை அழித்துவிடக்கூடாது என்பதே அவரது கவலையாயிருந்தது. அவரது மனைவி நான்சி அவற்றை ஒரு தலையணைக்குள் வைத்துத் தைத்து, அதை ஜட்சனிடம் அனுப்பியிருந்தாள். அத்தலையணையைப் பல நாட்கள் ஜட்சன் வைத்திருந்தார். பின்னர், ஒருவர் பின் ஒருவராகச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த மனிதர்களோடு சேர்த்துக்கட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக வேறிடத்திற்கு கொண்டு போகப்பட்டார். அதேசமயம் அவர் வைத்திருந்த தலையணை அவரிட மிருந்து பிடுங்கி எறியப்பட்டது. இது நடந்து 7 கொடிய மாதங்களின் பின் ஜட்சன் ஒரு காவலாளியின் மேற்பார்வையின் கீழ் அரசின் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1825 நவம்பரில், சரியாக ஜட்சன் சிறைப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின் பிரித்தானியர்கள் யுத்தத்தில் வெற்றியடைந்தமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அச்சமயம் அவருடைய மனைவியும், அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இரட்சிக்கப்பட்ட பர்மிய கிறிஸ்தவனும் ஜட்சனின் தலையணையை அவரிடம் கொண்டு வந்தனர். 7 மாதங்களுக்கு முன் ஜட்சனின் உடைமைகளில் அதை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. அதனுள் அவர் மொழிபெயர்த்த பர்மிய மொழி புதிய ஏற்பாடு இருந்தது. சிறையிலிருந்து விடுதலையடைந்த ஜட்சன் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். எனினும் 6 மாதங்களில் அவரது மனைவி நான்சி மரணமடைந்தபின் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். இதனால் மொழிபெயர்ப்பு வேலைகளும் பாதிக்கப்பட்டன. எனினும் 1834 ஆம் ஆண்டு, அவரது மனைவி மரித்து 7 வருடங்களின் பின் பர்மிய மொழியில் முழுவேதாகமத்தினது மொழிபெயர்ப்பு வேலையையும் பூர்த்தி செய்தார். 1835ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது பர்மிய மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சிடப்பட்டது. அதன் பின் 5 வருடகாலமாக அவர் தனது மொழிபெயர்ப்பைத் திருத்தும் வேலைகளில் ஈடுபட்டார். உண்மையில் கடும் உபத்திரவங்களுக்கூடாகச் சென்ற அதோனிராம் ஜட்சன் பர்மிய மக்களுக்குத் தேவனுடைய வார்த்தை அவர்களுடைய மொழியில் கிடைப்பதற்குத் தன்னையே தியாகம் செய்திருந்தார். இன்று, பர்மாவில் பேசப்படும் 8 மொழிகளில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைவிட, புதிய ஏற்பாடு மேலும் 8 மொழி களிலும், வேதாகமத்தின் பகுதிகள் 10 மொழிகளிலும் பர்மாவில் மொழி பெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

(2) சீன மொழிபெயர்ப்பு

லண்டன் மிஷனரி சங்கம் ரொபர்ட் மொரிசன் என்பவரை சீனாவுக்கு மிஷனெரியாக அனுப்பியது. இவர் 1807ஆம் ஆண்டு சீனாவிலுள்ள கன்டன் எனும் நகருக்குச் சென்றார். சீனர்களது உதவியோடு அவர்களது மொழியைக் கற்றிடலாம் எனும் நம்பிக்கையோடிருந்த மொரிசனுக்கு அங்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. தமது தூயமொழியை வெளி நாட்டவருக்கு கற்றுக்கொடுப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் என அக்காலத்தைய சீன அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது. எனினும் வெகுவிரைவிலேயே இரு ரோமன் கத்தோலிக்க சீனர்களைச் சந்தித்த மொரிசன் அவர்களது உதவியோடு இரகசியமாக சீனமொழியைக் கற்றவாறே ஒரு சீன ஆங்கில அகராதியையும் தயாரித்தார். எனினும் வெளிநாட்டவர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே கன்டன் நகரில் இருப்பதற்கு சீன அரசு அனுமதி கொடுத்தமையினால், 6 மாதங்களின் பின் மொரிசன் போர்த்துக்கேயரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மெக்கவ் எனுமிடத்துக்குச் சென்றார். மேலும் மொரிசன் மெக்கவ்வில் இருக்கும் போது அங்கிருந்த இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஒருவரின் மகளைத் திருமணமுடித்தார். எனினும் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்குச் செல்வதற்கு கிழக்கிந்தியக் கம்பனியில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர வேண்டியதாயிற்று. அத்தோடு அவரது மனைவிக்கு கன்டன் நகருக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் கன்டன் நகரில் தனியாக வாழ்ந்த மொரிசன் பகற்பொழுதில் தனது உத்தியோகக் கடமைகளைச் செய்ததோடு, இரவு வேளையில் சீனர்களது உதவியோடு வேதாகமத்தை சீனமொழியில் மொழி பெயர்த்து வந்தார்.

1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தியடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார்.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(11) பஞ்சாபி மொழிபெயர்ப்பு

இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் பேசும் பஞ்சாப் மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் 1807 இல் செரம்பூரில் இருந்த மிஷெனரிகளினால் ஆரம்பிக்கப்பட்டது.

1812 ஆம் ஆண்டின் தீ விபத்து அம்மொழி பெயர்ப்பு வேலைகளைப் பாதித்தாலும் 1815இல் பஞ்சாபி மொழி புதிய ஏற்பாட்டை அவர்கள் வெளியிட்டனர். 1826இல் எசேக்கியேல் வரையிலான புத்தகங்கள் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனினும், இம்மொழி பெயர்ப்பு பஞ்சாப் மக்களால் அதிகளவில் உபயோகிக்கப்படவில்லை. 1834இல் பஞ்சாபில் தமது ஊழியத்தை ஆரம்பித்த அமெரிக்க பிரஸ்பிட்டேரியன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த ஜே.நியூட்டன், 1837இல் பஞ்சாபி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இதன் பயனாக 1840 இல் மத்தேயு சுவிசேஷமும், 1841 இல் யோவான் சுவிசேஷமும் பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டது.

நியூட்டன், அப்போஸ்தலர் நடபடிகள் வரை மொழிபெயர்த்திருந்தாலும் 4 சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் அச்சிடப்பட்டபோது, 1845இல், அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன. மறுபடியுமாக இவ்வைந்து புத்தகங்களும் தனி ஒரு புத்தகமாக பஞ்சாபி மொழியில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதேசமயம், இம்மிஷனைச் சேர்ந்த ஜன்வியர் ஆதியாகமத்தையும் யாத்திரகமத்தில் 20 அதிகாரங்களையும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். இவை 1851இல் வெளி வந்தன. இவர் மொழிபெயர்த்த லூக்கா சுவிசேஷம் 1856இலும், சங்கீதப் புத்தகம் 1863இலும் வெளிவந்தன. 1863இல் ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சாப் வேதாகமக் கிளைச் சங்கம் 1868இல் புதிய ஏற்பாடு முழுவதையும் பஞ்சாப் மொழியில் வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பு வேலைகள் ஜே.நியூட்டனின் தலைமையிலேயே நடைபெற்றன. 1889இல் பஞ்சாப் மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இதன் பயனாக 1900இல் திருத்தப்பட்ட பஞ்சாப் புதிய ஏற்பாடு வெளிவந்தது. அதேசமயம் ஜே.ஹார்வி என்பவர் மொழிபெயர்த்த பல பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் தனித் தனியாக பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டன. 1959இல் கல்கத்தாவிலிருந்த பப்டிஸ்ட் மிஷன் அச்சகம் பழைய ஏற்பாட்டின் பஞ்சாபி மொழிபெயர்ப்பை வெளியிட்டது.

(12) ஏனைய மொழி பெயர்ப்புகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1652 என கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பல மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி 25 இந்திய மொழிகளில் முழுவேதாகமமும், 40 மொழிகளில் புதிய ஏற்பாடும், 65 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, அவ்வாண்டுவரைக்கும் மொத்தம் 130 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிகின்றோம். 1994ஆம் ஆண்டு வரை இந்திய வேதாகமச் சங்கம் 171 இநதிய மொழிகளில் வேதாக மத்தைப் பிரசுரித்துள்ளது.

இந்தியாவுக்கு அப்பால் வேதாகமம்

இந்தியாவுக்கு மிஷெனரிகள் வரத்தொடங்கிய பின்னர், இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள நாடுகளிலும் கிறிஸ்தவம் பரவியது. பர்மா, திபெத், சீனா, கொரியா, ஜப்பான் எனும் நாடுகளுக்கும், தெற்கே இலங்கைக்கும் மிஷெனரிகள் வந்தனர். இதன் பயனாக இவ்வாசிய நாடுகளின் மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படலாயிற்று. இம் மொழிபெயர்ப்புச் சரிதையை இப்பகுதியில் பார்ப்போம்.

(1) பர்மிய மொழிபெயர்ப்பு

கடும் எதிர்ப்புகளுக்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் கிறிஸ்தவம் உட்புகுந்த நாடுகளில் ஒன்றாக பர்மா விளங்குகிறது. பர்மிய மொழியின் வேதாகம மொழிபெயர்ப்பானது அமெரிக்க மிஷெனரியான அதோனி ராம் ஜட்சன் என்பவரிலேயேதான் ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. 1788இல் பிறந்த இவர் திருமணம் முடித்து 13 நாட்களின் பின், 1812 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிதுகாலம் வில்லியம் கேரியோடு இருந்த அவருக்கு, கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி கொடுக்காதமையினால், அவர் தன் மனைவி நான்சியுடன் கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் சென்றார்.

அவர்கள் ரங்கூன் துறைமுகத்தை அடைவதற்கு முன்பதாக, கப்பலில் வைத்து நான்சி குறைப்பிரசவத்தில் தன் குழந்தையைப் பறிகொடுத்தாள். ரங்கூனுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் பலவிதமான இக்கட்டுகளுக்கு முகங்கொடுத்தனர். ஆறுவருடங்களாக ஜட்சன் பர்மிய மொழியைக் கற்பதிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் செலவிட்டார். அப்படியிருந்தும் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. அதேசமயம் பர்மிய அரசு ஜட்சனின் சுவிசேஷப்பணியை எதிர்க்கத் தொடங்கியது. 1820இல் ஒரு சில பர்மியர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பர்மாவுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்டனர். ரங்கூனில் அவர்களுக்குப் பிறந்த மகனும் 6 மாதங்களில் மரித்துவிட்டான். 1822 இல் வியாதி காரணமாக நான்சி இந்தியாவுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

மனைவியின் பிரிவால் தனிமைப்பட்ட ஜட்சன் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஒரு வருடத்துக்குள்ளாக அவ்வேலைகள் பூர்த்தியடைந்தன. அதேசமயம் ஜட்சன் ரங்கூனிலிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824 இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(6) கன்னட மொழிபெயர்ப்பு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் கன்னட மொழியில் 1809இல் புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. செரம்பூரிலிருந்த மிஷனரிகள் மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்துவிட்டன. இதன்பின்னர் அவர்கள் 1823இலேயே கன்னடமொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். அதே சமயம் 1810இல், பெலாரி எனுமிடத்துக்கு மிஷனரியாக வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர், 1812இல் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1820இல் இவர் மொழி பெயர்த்த சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் கன்னட மொழியில் சென்னையில் அச்சிடப்பட்டன. 1830இல், பெலாரி மிஷன் அச்சகத்தில் இவரது கன்னட மொழி புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1831இல் இவர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடும் கன்னட மொழியில் வெளிவந்தது.

1837இல், சுவிசேஷ புத்தகத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் ஹேன்ட்ஸ் திருத்தி வெளியிட்டார். பிற்காலத்தில் ஏனைய பகுதிகளும் திருத்தப்பட்டன. 1848 இல் பேசல் எனுமிடத்திலிருந்த லூத்தரன் மிஷனைச் சேர்ந்த ஜி.எஸ்.வெய்கல் கன்னட புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார். இது 1850இல் வெளிவந்தது. 1854இல் இது மறுபடியுமாக திருத்தப்பட்டது. 1865இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட திருத்தப்பட்ட கன்னட மொழி வேதாகமம் வெளிவந்தது. 1890இல் இவ்வேதாகமம் மறுபடியுமாகத் திருத்தப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. 1891இல் இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது பணி காரணமாகப் புதிய கன்னட மொழி புதிய ஏற்பாடு 1907இல் வெளிவந்தது. 1934இல் முழுவேதாகமத்தினதும் திருத்தப்பதிப்பு வெளியிடப்பட்டது.

(7) மராத்தி மொழிபெயர்ப்பு

இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ராவில் பேசப்படும் மராத்திமொழியில் 1807ஆம் ஆண்டு 1000 புதிய ஏற்பாடுகள் செரம்பூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. பண்டித் வைஜநாத் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட இம் மராத்தி மொழி புதிய ஏற்பாடு வில்லியம் கேரியினால் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டபோதிலும், அம்மொழிபெயர்ப்பு நாக்பூர் எனும் பிரதேசத்தில் பேசப்பட்ட மராத்தி மொழியில் இருந்தமையினால், மற்றைய பிரதேச மராத்திய மக்களுக்கு அம்மொழிபெயர்ப்பு பிரயோஜனமற்றதாகவே இருந்தது. 1807ஆம் ஆண்டு பம்பாய்க்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் டெய்லர் என்பவர் 1817 இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். இது பம்பாய் வேதாகமச்சங்கக் கிளையினால் அச்சிடப்பட்டது. அதேசமயம், அமெரிக்காவிலிருந்து பம்பாய்க்கு வந்த கோர்டன் ஹால், சாமுவேல் நியூவெல் எனுமிருவரும் மராத்தி மொழியைக் கற்றவாறே சுவிசேஷத்தை அறிவித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் செரம்பூர் அச்சகத்தினால் வெளியிடப்பட்ட மராத்தி மொழி புதிய ஏற்பாட்டையே உபயோகித்து வந்தபோதிலும், இவர்களது மராத்திய மொழியறிவு அதிகரிக்க அதிகரிக்க, அம்மொழி பெயர்ப்பு மகாராஷ்ட்ரா மக்களது மராத்திய மொழியைவிட வித்தியாசமானதாக இருப்பதை அறிந்துகொண்டனர். இதனால் இவர்கள், எபிரேய கிரேக்க மொழிகளைக் கற்கத் தொடங்கியதோடு அம்மொழிகளில் இருந்து மராத்திய மொழிக்கு வேதாகமத்தையும் மொழிபெயர்க்கத் தொடங்கினர்.

1816இல் பார்ட்வெல் என்பவரும் இவர்களுக்கு உதவியாக வந்து சேர்ந்தார். இவர்கள் புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகளையும் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தையும் மராத்திய மொழியில் மொழி பெயர்த்திருந்தனர். 1821இல் பார்ட்வெல் அமெரிக்காவுக்குத் திரும்பிச்செல்ல வேண்டியதாயிற்று. அவ் வருடம் நியூவெல் மரணமடைந்தார்.

ஒரு சில மாதங்களின் பின்னர் பம்பாய்க்கு வந்த மற்ற மிஷனரிகளும் மரித்துவிட்டனர். 1832ஆம் ஆண்டு வரை பம்பாயிலிருந்த மிஷனெரிகளுக்குப் பிறந்த 30 பிள்ளைகளில் 18 பிள்ளைகள் மரித்துள்ளனர். எனினும், இவை எஞ்சியிருந்த மிஷனெரிகளை அதைரியப்படுத்திவிடவில்லை. அவர்கள் வேதாகம மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து செய்தனர். 1818இல் பம்பாய்க்கு வந்த அலன் கிரேவ்ஸ் என்பவர், இம்மொழிபெயர்ப்புப் பணியைப் பூர்த்திசெய்து மராத்திய மொழி வேதாகமத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். 1826இல் மராத்திய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1830இல் கிரேவ்ஸ் இப்புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார்.

அமெரிக்க மிஷனெரிகளது மராத்திய மொழிபெயர்ப்பு திருப்திகரமற்றது என எண்ணிய சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் மிச்சேல் 1830இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1831இல் அமெரிக்க மிஷனெரிகள் மொழி பெயர்த்த மராத்திய மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய மொழி பெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டும் என கருதப் பட்டமையினால், இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது முயற்சியினால் 1847இல் திருத்தப்பட்ட மராத்திய புதிய ஏற்பாடும், 1855இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட புதிய மராத்திய மொழி பெயர்ப்பு வேதாகமமும் வெளிவந்தது.

1851இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1857 இல், திருத்தப்பட்ட இன்னுமொரு புதிய மராத்திய வேதாகமம் வெளியிடப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இதனால், பம்பாய் வேதாகமச் சங்கம் 1872இல் மறுபடியுமாக ஒரு திருத்தப்பட்ட புதிய மராத்திய வேதாகமத்தை வெளியிட்டது. 1880இல் இதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் 1907இல் பழைய ஏற்பாட்டையும் 1924இல் முழு வேதாகமத்தையும் திருத்தி வெளியிட்டனர். 1953இல் மறுபடியுமாக இதைத் திருத்த இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இவற்றைத் தவிர ராவ் பகதூர் அத்தாவேல் என்பவரினால் புதிய ஏற்பாடும், பண்டிதை ராமா பாயினால் முழுவேதாகமமும் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(8) குஜராத்தி மொழிபெயர்ப்பு

செரம்பூரிலிருந்த மிஷனரிகள் 1809இல் குஜராத்தி மொழியில் மத்தேயு சுவிசேஷத்தை மொழி பெயர்த்து வெளியிட்டபோதிலும், அதன் பிறகு 1813ஆம் ஆண்டு வரை அம்மொழியில் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்யாதமையினால் 1820ஆம் ஆண்டே அவர்கள் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாடு வெளிவந்தது. எனினும், இம்மொழி பெயர்ப்பு குஜராத்தி மக்களால் புரிந்து கொள்ள முடியாததொன்றாய் இருந்தது. லண்டன் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனெரிகள் குஜராத் மாநிலத்திலுள்ள சூரட் எனுமிடத்தில் தமது ஊழியங்களை ஆரம்பித்தபோது, அவர்களால் அம்மொழிபெயர்ப்பை உபயோகிக்க முடியவில்லை.

பம்பாய்க்குச் சென்ற ஜோன் டெய்லர் குஜராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். எனினும் அவரது மரணம், அப்பணியை மத்தேயு சுவிசேஷத்தோடு நிறுத்திவிட்டது. 1815இல் சூரட் எனுமிடத்திற்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளான வில்லியம் ஃபைவி, ஜேம்ஸ் ஸ்கின்னர் எனுமிருவரும் 1817இல் புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டில் பஞ்சாகமங்கள் வரையும் மொழிபெயர்த்திருந்தனர். இவர்கள் 1820இல், சூரட் எனுமிடத்தில் தமது சொந்த அச்சகத்தை ஏற்படுத்தி தாம் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாட்டை 8 பகுதிகளாக வெளியிட்டனர். இவ் வெளியீட்டு வேலைகள் பூர்த்தியடையுமுன்பே 1820இல் ஜேம்ஸ் ஸ்கின்னர் மரித்துவிட்டார்.

எனினும் 1822இல் வில்லியம் ஃபைவி இன் சகோதரர் அலெக்சான்டர் அவருக்கு உதவியாக சூரட்டுக்கு வந்து சேர்ந்தார். இவர்களிருவரும் பழைய ஏற்பாட்டை 18 பகுதிகளாக குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இதன் கடைசிப் பகுதி 1823இல் வெளிவந்தது. 1825இல் அச்சுத் தொழிலில் தேர்ச்சி பெற்ற தோமஸ் சல்மொன் என்பவரை லண்டன் மிஷனரி சங்கம் சூரட்டுக்கு அனுப்பியது. 1827இற்கும் 1829 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் முழு வேதாகமத்தையும் 4 பகுதிகளாக குஜராத்தி மொழியில் அச்சிட்டு வெளியிட்டனர். 1832 இல் இவர்கள் தமது புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டனர்.

1853இல் ஜோன் வில்சன் என்பவர், வில்லியம் ஃபைவி இன் குஜராத்தி மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழி பெயர்த்து வெளியிட்டார். 1857இல் இன்னுமொரு புதிய குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1860 இல், பழைய ஏற்பாட்டின் திருத்த மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவில் பணிபுரிந்த ஐரிஸ் பிரஸ்பிட்டேரியன் மிஷனைச் சேர்ந்தவர்களால் 1889இல் குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1899 இல் இவர்கள் பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டனர். அவ் வாண்டு குஜராத்தி மொழியில் முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1903இல் இவ்வேதாகமத்தின் திருத்தப்பதிப்பு வெளிவந்தது.

(9) ஒரிய மொழிபெயர்ப்பு

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு 1804இல் ஆரம்பமானது. வங்காள மொழியிலிருந்து ஒரிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு, வில்லியம் கேரியினாலும் அவரது உதவியாளர்களினாலும் கிரேக்க மொழி வேதாகமத்துடன் ஒப்பிட்டுத் திருத்தப்பட்டு 1809இல் வெளியிடப்பட்டது. 1815இல், பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களும் இவ்வாறு ஒரிய மொழியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பின்னர் வேதாகமத்தின் சில பகுதிகள் ஒரிய மொழியில் வெளிவந்தன. 1840இல் கல்கத்தா வேதாகமக் கிளைச் சங்கம், ஒரிய மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டது. இதேவிதமாக 1844இல் ஒரிய மொழி பழைய ஏற்பாடும் திருத்தப்பட்டு 3 பகுதிகளாக வெளியிடப்பட்டது. 1862இல், கட்டக் எனுமிடத்தில் இருந்த மிஷன் அச்சகம் ஒரிய புதிய ஏற்பாட்டை மறுபடியுமாகத் திருத்தி வெளியிட்டது. 1872இல் பழைய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பும் வெளிவந்தது. இத் திருத்த வேலைகள் கட்டக் எனுமிடத்தில் மிஷனரியாகப் பணியாற்றிய பக்லி மற்றும் ஜகுரூல் என்போரினால் செய்யப்பட்டதாகும்.

1902இல் பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மறுபடி யுமாக ஒரிய மொழி வேதாகமம் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1941இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1957இல், திருத்தப்பட்ட முழுவேதாகமமும் வெளிவந்தது.

(10) அஸ்ஸாமிய மொழி பெயர்ப்பு

செரம்பூரிலிருந்த மிஷனரிகளினால் இந்தியாவின் அஸ்ஸாம் மொழியில் 1810ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், 1812ஆம் ஆண்டின் தீ விபத்தினால் அவ்வேலைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் 1819இல், புதிய ஏற்பாடும் 1832இல், முபவேதாகமமும் அஸ்ஸாம் மொழியில் வெளியிடப்பட்டது. எனினும், இம்மொழி பெயர்ப்பு அஸ்ஸாம் மக்களால் உபயோகிக்கப்படவில்லை. பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதிக்கு ஊழியம் செய்யச் சென்ற அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனரி நேத்தன் பிரவுன் என்பவர் 1817 இல், புதிய ஏற்பாட்டை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1860ஆம் ஆண்டிலிருந்து பல மிஷனரிகள் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். 1903இல் கேர்னி என்பவர் அவற்றையெல்லாம் தொகுத்து, பின்னர் அவற்றைத் திருத்தி முழு பழைய ஏற்பாட்டையும் அஸ்ஸாம் மொழியில் வெளியிட்டார். வேதாகமச் சங்கமே இம்மொழிபெயர்ப்பு வெளிவர உதவி செய்தது.

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(4) மலையாள மொழிபெயர்ப்பு

இந்தியாவின் மேற்குக்கரையோர மாநிலமான கேரளாவில் பேசப்படும் மலையாள மொழியில், தமிழ் மற்றும் சிரிய மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் இருந்து 4 சுவிசேஷங்களும் 1807இல் மொழிபெயர்க்கப்பட்டன. திம்மப்பா பிள்ளை, பிலிப்போஸ் எனும் இருவராலும் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகங்கள், 1811ஆம் ஆண்டு திம்மப்பா பிள்ளையினால் அச்சிடப்பட்டன. 1813இல், திம்மப்பா பிள்ளை புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழி பெயர்த்திருந்தார். எனினும், இந்த மொழிபெயர்ப்பு உடனடியாக அச்சிடப்படவில்லை.

முழு வேதாகமத்தையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது பற்றி கோட்டயம் எனுமிடத்தில் பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் 1817ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த பெஞ்சமின் பெய்லி என்பவர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக 8 சிறிய மொழிப்போதகர்களும் இருந்தனர். 1825இல் இவர் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1829 இல் கோட்டயம் எனுமிடத்திலிருந்த மிஷன் அச்சகத்தில் பெஞ்சமின் பெய்லி மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.

பெஞ்சமின் பெய்லியின் மொழி பெயர்ப்பு கேரளாவின் தென் பகுதியில் வாழ்ந்த மலையாள மக்களுக்கே பொருத்தமானது என்றும், அது கேரளாவின் வடபகுதி மலையாள மக்களுக்கு பொருத்தமற்ற மொழி நடையில் இருக்கிறது என்றும் பலர் கருத முற்பட்டமையினால், அச்சமயம் கேரளாவின் வடபகுதியிலிருந்த கிழக்கிந்திய கம்பனியினரின் வழிபாட்டு மண்டபத்துக் குருவாக இருந்த ஸ்பிரிங் என்பவர் 1822இல், கேரளாவின் வடபகுதி மக்களுக்காக சமஸ்கிருத மொழியிலிருந்து வேதாகமத்தை மலையாளத்திற்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1823ஆம் ஆண்டு ஸ்பிரிங் இங்கிலாந்துக்குச் சென்றமையினால் அவரது மொழி பெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அத்தோடு 1825 இல், ஒரு மொழியில் இரு மொழிபெயர்ப்புகள் இருக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டதோடு, அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் மொழிபெயர்ப்பே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1829இல் சென்னை வேதாகமக் கிளைச் சங்கத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலைகளும் பூர்த்தியடைந்தன. 1841இல், இம்மொழிபெயர்ப்பு சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தினால் அச்சிடப்பட்டது. 1854இல் கேரளாவின் வடபகுதி மக்களின் தேவை கருதி மலையாள புதிய ஏற்பாட்டின் இன்னுமொரு மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இது லூத்தரன் மிஷனைச் சேர்ந்த எச்.குன்டர்ட் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1859இல் பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டின் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.

1871இல் மலையாள மக்கள் அனைவரும் உபயோகிக்கக்கூடிய ஒரு வேதாகமத்தைத் தயாரிப்பதற்காகச் சென்னை வேதாகமச் சங்கக் கிளை ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் கிரேக்க, ஆங்கில, தமிழ், சிரிய மற்றும் பெஞ்சமின் பெய்லியின் மலையாள மொழி பெயர்ப்பு என்பவற்றின் உதவியுடன் 1880இல் திருத்தப்பட்ட புதிய மலையாள புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். லூத்தரன் மிஷனின் பேசல் அச்சகம் 1881இல், திருத்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் கவிதைப் புத்தகங்களையும், 1888இல் தீர்க்க தரிசனப் புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டது.

பெஞ்சமின் பெய்லி மொழி பெயர்த்த பழைய ஏற்பாடு, ஆங்கிலத்தில் வெளிவந்த திருத்தப் பதிப்புக்கு ஏற்ற வண்ணமாகத் திருத்தப்பட்டு 1910இல் வெளியிடப்பட்டது. 1960இல் மறுபடியுமாக மலையாள வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினர் லத்தீன் வேதாகமத்திலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த சுவிசேஷப் புத்தகங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1905இல் வெளிவந்தன. அவர்கள் மொழிபெயர்த்த மலையாள மொழி புதிய ஏற்பாடு 1951இல் வெளியிடப்பட்டது.

(5) தெலுங்கு மொழிபெயர்ப்பு

இந்திய மாநிலங்களுள் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் தெலுங்கு மொழியில் ஆரம்ப காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வேதப்பிரதிகள் அனைத்தும் அழிந்து விட்டன. இந்தியாவில் மிஷனரியாகப் பணியாற்றிய ஜெர்மன் தேசத்தவரான பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர் 1727 இல் புதிய ஏற்பாட்டையும் 1732 இல் பழைய ஏற்பாட்டையும் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அவர் மொழிபெயர்த்த வேதப்பிரதிகள் அச்சிடப்படுவதற்காக ஹலேக்கு அனுப்பப்பட்டு அங்கு காணாமற் போய்விட்டன.

அதன் பின்னர் 1795 இல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டொட்ஸ் என்பவர், கிழக்கிந்தியக் கம்பனியில் பணிபுரியும் காலத்தில் வேதாகமத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்தார். எனினும் அவர் சடுதியாக மரணமடைந்தமையினால், அவர் மொழிபெயர்த்திருந்த வேதாகமப் பிரதிகள், கிழக்கிந்தியக் கம்பனியில் வேலை செய்தவர்களால், தேவையற்ற காகிதங்கள் என கருதப்பட்டு எரிக்கப்பட்டன. அதேசமயம் 1805இல், செரம்பூரிலிருந்த மிஷனரிகள் புதிய ஏற்பாட்டைத் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். 1811இல் அதன் அச்சுவேலைகளும் ஆரம்பமாகின. எனினும் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அச்சிடப்பட்ட பக்கங்களும் மூலப் பிரதியும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

1804இல் விசாகபட்டணத்தில் இருந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான், அகஸ்ட்டஸ் டெஸ்கிராஞ்சஸ் என்போர், தெலுங்கு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் வேலையை ஆரம்பித்தனர். எனினும் 1808இல் ஜார்ஜ் க்ரான் மரித்தமையினால், அகஸ்ட்டஸ் டெஸ் கிராஞ்சஸ், ஆனந்தராய் எனும் பெயருடைய இரட்சிக்கப்பட்ட ஒரு பிராமணரது உதவியோடு மொழி பெயர்ப்பு வேலைகளை 1810ஆம் ஆண்டுவரை தொடர்ந்திட்டார். அவ்வாண்டு இவர்களிருவரும் புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் வரை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தனர். அவ்வாண்டு ஜூன் மாதம் டெஸ்கிராஞ்சஸ் மரணமடைந்தார். 1812இல் இவர்கள் மொழி பெயர்த்த மத்தேயு, மாற்கு, யோவான் எனும் சுவிசேஷங்கள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டன. அவ்வாண்டு விசாக பட்டணத்துக்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த எட்வர்ட் பிரிட்ச்செட் ஆனந்தராயரது உதவியோடு புதிய ஏற்பாட்டில் மிகுதிப் பகுதிகளை மொழிபெயர்த்தார். இவர்கள் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலான பகுதிகளையும் தெலுங்கில் மொழி பெயர்த்தனர். 1844இல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதன் பயனாக 1854இல் தெலுங்கு மொழியில் பழைய ஏற்பாடு வெளிவந்தது.

1856இல் இக்குழுவினது தெலுங்கு மொழி புதிய ஏற்பாடும் வெளிவந்தது. 1857 இன் பழைய ஏற்பாடு திருத்தி வெளியிடப்பட்டது. புதிய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பு 1860இல் வெளியிடப்பட்டதோடு, 1857இன் பழைய ஏற்பாட்டுத் திருத்தப் பதிப்பும் அதனோடு சேர்க்கப்பட்டு தெலுங்கு மொழியின் முதலாவது முழுவேதாகமமாக வெளிவந்தது. 1878இல் தெலுங்கு புதிய ஏற்பாடு மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1884 இல் முழு வேதாகமத்தினதும் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.

மறுபடியுமாக முழுவேதாகமமும் திருத்தப்பட்டு 1904இல் வெளியிடப்பட்டது. இது மறுபடியு மாக 1911இல் திருத்தப்பட்டது. 1953இல் இதன் இன்னுமொரு திருத்தப் பதிப்பு வெளிவந்தது.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(1) வங்காள மொழிபெயர்ப்பு

1809இல் பழைய ஏற்பாட்டின் வங்காள மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. வில்லியம்கேரியின் மரணத்துக்கு முன்பு இதன் 5 பதிப்புகள் வெளி வந்திருந்தன.

வில்லியம்கேரியின் வங்காள மொழிபெயர்ப்பு வேதாகமத்தின் புதிய பதிப்புகள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், குறிப்பாக 1816 இற்கும் 1819 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மால்டாவிலிருந்த ஜோன் எலர்ட்டன் என்பவர் மொழிபெயர்த்த வங்காள மொழி புதிய ஏற்பாட்டை கல்கத்தா வேதாகமச் சங்கக்கிளை வெளியிட்டது. மேலும், 1813இல் இந்தியாவுக்கு வந்த பாப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த யேட்ஸ் என்பவரும் 1827இல் சங்கீதப் புத்தகத்தையும், 1833இல் புதிய ஏற்பாட்டையும் வங்காள மொழியில் வெளியிட்டார். இவரது வேதாகமம் வில்லியம்கேரியின் மொழிபெயர்ப்பின் திருத்தப் பதிப்பாகும். 1844இல் யேட்ஸ், கேரியின் வங்காள மொழிபெயர்ப்புப் பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டார்.

1847இல் வென்கர் என்பவரினால் மறுபடியுமாக இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. 1862இல், முழு வேதாகமமும் வங்காள மொழியில் வெளியிடப்பட்டது. 1874இல் வங்காள மொழியின் நான்காவது திருத்தப் பதிப்பு வென்கரினால் வெளியிடப்பட்டது. 1909இல், வங்காள வேதாகமத்தின் 11ஆவது பதிப்பு வெளிவந்தது. இதற்குப் பிற்பட்ட காலத்தில் இன்னும் ஒரு சில வங்காள மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் வெளி வந்துள்ளன.

(2) உருது மொழிபெயர்ப்பு

தற்போதைய பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ மொழியான உருது இந்தியாவின் சில இடங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. 1805 இல் இம்மொழியில் 4 சுவிசேஷங்களும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதே சமயம், அவ்வாண்டு கல்கத்தாவிற்கு மிஷனரியாக வந்த ஹென்றி மாட்டின் என்பவர் 1809 இல் புதிய ஏற்பாட்டை உருது மொழியில் மொழிபெயர்த்து முடித்தார். வில்லியம்கேரியின் ஊழியப் பணிகளைக் கேள்விப்பட்டு அதனால் தூண்டப்பட்டே ஹென்றி மாட்டின் இந்தியாவுக்கு மிஷனரியாக வந்திருந்தார். இவர் இதற்கு முன்பு பெர்சிய மற்றும் அரபு மொழியிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்திருந்தார். இவர் இந்தியாவுக்கு வருவதற்கும் முன்பே இங்கிலாந்தில் உருது மொழியைக் கற்றதோடு, இந்தியாவுக்கு கப்பலில் வரும்போதும் அம்மொழியைப் படித்துக்கொண்டே வந்தார்.

1811ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சென்ற ஹென்றி மாட்டின், 1812 அக்டோபரில் பெர்சியாவில் மரணமடைந்தார். இவரது உருது மொழி வேதாகமம் பிற்காலத்தில் 1814இல், செரம்பூரில் திருத்தி வெளியிடப்பட்டது. இதன்பின்னர் பலதடவைகள் திருத்தப்பட்ட இம் மொழிபெயர்ப்பை இலகு நடையில் வெளியிடுவதற்கு 1836இல் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதன் பயனாக 1842இல் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1843இல் முழுவேதாகமமும் உருது மொழியில் வெளியிடப்பட்டது. இதன் பழைய ஏற்பாடு ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்திருந்த குறிப்புகளை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இவ்வேதாகமம் பெனாரிஸ் பதிப்பு என அழைக்கப்பட்டது.

1839இல் கல்கத்தாவிலிருந்த பாப்டிஸ்ட் மிஷனரிகள் தாம் மொழி பெயர்த்த உருது மொழி வேதாகமத்தை வெளியிட்டனர். இவ்வேதாகமம், ஹென்றி மாட்டினின் மொழி பெயர்ப்பை உபயோகித்து வில்லியம் யேட்ஸ் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1860இல் இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டு லண்டனில் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு பெனாரிஸ் பதிப்பு வேதாகமம் திருத்தப்பட்டது. லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சி.மேதர் என்பவர் திருத்த வேலைகளைச் செய்தார். இவரது திருத்த மொழிபெயர்ப்பு 1870இலும் 1878இலும் வெளிவந்தது. திருத்தப்பட்ட பெனாரிஸ் வேதாகமம் அக்காலத்தில் மக்களால் உபயோகிக்கப்பட்டாலும், மிர்ஷப் பதிப்பு என அழைக்கப்படும் இவ் வேதாகமமே அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட உருது வேதாகமமாக இருந்தது. எனினும் 1893இல் புதிய ஏற்பாடு மறுபடியுமாகத் திருத்தப்பட்டது. இதன் பயனாக 1900இல் புதிய உருது மொழி புதிய ஏற்பாடு வெளி வந்தது. பின்னர் 1920இல் பழைய ஏற்பாட்டைத் திருத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது. 1931இல் திருத்தப்பட்ட பழைய ஏற்பாடு வெளிவந்தது. ரோமன் கத்தோலிக்க சபை வெளியிட்ட உருது வேதாகமத்தின் புதிய ஏற்பாடு 1864இல் பத்னா எனுமிடத்திலும் பழைய ஏற்பாடு 1923இல் லாகூர் எனுமிடத்திலும் வெளியிடப்பட்டன. 1958இல் ரோமில், தள்ளுபடியாகமங்கள் உட்பட முழுவேதாகமமும் உருது மொழியில் வெளியிடப்பட்டது.

(3) ஹிந்தி மொழிபெயர்ப்பு

1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஸ்தாபிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியைச் சேர்ந்த ஹென்றி கோல்புரூக் என்பவர் ஹிந்தி மொழியில் நான்கு சுவிசேஷங்களையும் மொழி பெயர்த்தார். இது 1806இல் வெளியிடப்பட்டது. அதேசமயம் செரம்பூரிலிருந்த மிஷனரிகளும் ஹிந்தியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தனர். 1807இல் இவர்களது புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு வேலைகள் பூர்த்தியுற, 1811இல் அவ்வேதாகமம் அச்சிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாடும் பகுதிபகுதியாக ஹிந்தி மொழியில் வெளிவரத் தொடங்கியது. இம்மொழி பெயர்ப்பு அக்ரா எனுமிடத்திலிருந்த பிராமணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மொழிபெயர்ப்பாய் இருந்தமையினால், பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த சேம்பர்லெயின் என்பவர், இதைத் திருத்தி மொழிபெயர்த்தார். 1848இல் இன்னுமொரு ஹிந்தி மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாடு வெளி வந்தது. பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த வில்லியம் யேட்ஸ் என்பவரினால் ஆரம்பிக்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு வேலை அவரது மரணத்தின் பின் ஏ.வெஸ்லி என்பவரினால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மொழி பெயர்ப்பு பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த ஜோன் பார்சன்ஸ் என்பவரினால் திருத்தப்பட்டு 1868இல் வெளிவந்தது. அதே சமயம், ஆக்ராவில் இருந்த வட இந்திய வேதாகமச் சங்கக்கிளை, ஹிந்தி வேதாகமத்தைத் திருத்தி வெளியிடுவதற்கு ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினது முயற்சியினால் 1849இல் திருத்தப்பட்ட ஹிந்தி புதிய ஏற்பாடும், 1852இலும் 1855இலும் இருபகுதிகளாக பழைய ஏற்பாடும் வெளிவந்தன. இப்பழைய ஏற்பாடு மறுபடியுமாக திருத்தப்பட்டு 1866இலும் 1869இலும் இருபகுதிகளாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க வேதாகமச் சங்கம் 1858இல் லூக்கா சுவிசேஷத்தையும், 1869இல் புதிய ஏற்பாட்டையும் ஹிந்தி மொழியில் வெளியிட்டது. 1860இல் புதிய ஏற்பாடு ஒரு சில திருத்தங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. எனினும் பாப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தினால் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டு 1874இல் வேதாகமச் சங்கம் வெளியிட்ட வேதாகமமே ஹிந்தி மொழியின் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது. 1892இல் முதல் தடவையாக முழுவேதாகமமும் ஒரே புத்தகமாக ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர், புதிய ஏற்பாட்டின் பல பதிப்புகள் வெளிவந்தன. 1883இல் வட இந்திய வேதாகமச் சங்கக்கிளை ஹிந்தி மொழி வேதாகமத்தை மறுபடியுமாகத் திருத்துவதற்கு ஒரு குழுவை நியமித்தது. இவர்கள் 1888 இல் சுவிசேஷப் புத்தகங்களின் திருத்தப் பதிப்பை வெளியிட்டனர். 1894இல் பழைய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்க்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது பணி காரணமாகத் திருத்தப்பட்ட பழைய ஏற்பாடு 1905 இல் வெளிவந்தது.

60 வருடகாலமாக இவ்வேதாகமமே ஹிந்தி பேசும் மக்களால் உபயோகிக்கப்பட்டு வந்தது. எனினும் இம்மொழிபெயர்ப்பு சாதாரண மக்களால் புரிந்துகொள்ளமுடியாத உயர்ந்த மொழிநடையில் இருக்கிறது என்று ஒரு சாரார் கூறிட, கல்வியறிவு மிக்க ஹிந்தி பேசும் மக்கள் அதில் உருது சொற்கள் அதிகம் இருப்பதாகக் குறைபட்டனர். இதனால், மறுபடியுமாக அதைத் திருத்தி அன்றாட ஹிந்தியில் மொழி பெயர்க்கத் தீர்மானிக்கப் பட்டது.

1955 இல், வை.டி.திவாரி என்பவர் புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழி பெயர்க்கும் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்கள் 1961 இல் சுவிசேஷப் புத்தகங்களையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் திருத்தி வெளியிட்டனர். பின்னர் ஏனைய புத்தகங்கள் வெளிவந்தன. ரோமன் கத்தோலிக்க சபையினர் 1958இல் தமது ஹிந்தி மொழியில் புதிய ஏற்பாட்டை பத்னா என்னுமி டத்தில் வெளியிட்டனர்.

(தொடரும்)