ஆசிரியரிடமிருந்து…

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச் – ஏப்ரல் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரணத்தை ஜெயமாக விழுங்கின ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2017ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள்  எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

மார்ச் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதியில் கோவை மணிகூண்டு அருகில் உள்ள T.E.L.C ஆலயத்திலும், 26,27,28 திங்கள்-புதன் ஆகிய பரிசுத்த வாரத்தின் நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருச்சி பொன்மலைபட்டி C.S.I. Christ Church – லும் நடக்கவுள்ள லெந்துகால சிறப்புக் கூட்டங்களில் வானொலி செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்கள் செய்தி வழங்க இருக்கிறார்கள். அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தை  தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 2018ஆம் வருட காலண்டரை அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பித் தருகிறோம்.

இவ்விதழில் மார்ச் 1 – 16 வரையுள்ள தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரையுள்ள தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஏப்ரல் 16-30 நாட்களுக்கான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் வாசகர்கள் யாவருக்கும் அன்பின்  புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2018ஆம் வருடத்திற்குள் நம்மை அழைத்துவந்த தேவனுக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. தேவனுடைய நன்மையும் கிருபையும் இவ்வாண்டில் நம்மை தொடர்ந்துவர கர்த்தர் கிருபை செய்வார். தங்கள் பரிபூரண சந்தோஷத்தால் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்த மக்கெதோனியா சபையைப்போல இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கின அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் வாசகர்கள் யாவருக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

டிசம்பர் 9ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்த ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்கள் நேயர்களுக்கும், இக்கூட்டம் சிறப்புற நடைபெற பிரயாசப்பட்ட, உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

2018ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பித் தருகிறோம். கடந்த ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். 2018 ஆம் ஆண்டின் வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் ஒலி/ஒளிப்பரப்பில் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

ஜனவரி மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், பிப்ரவரி மாதம் 13 தேதிவரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும், பிப்.14 முதல் லெந்து நாட்களுக்கான தியானங்களை சகோதிரி சாந்திபொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்க்கையில் தேவனை அதிகமாக கிட்டிச்சேர்க்க உதவியாயிருக்கும். கர்த்தர்தாமே புதிய வருடத்தில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாக  ஆசீர்வதிப்பாராக!

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்வருடத்தின் இறுதிவரையிலும் கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். நாம் அறிந்துவருகிறபடி இந்நாட்களில் வாதைகளும் கொள்ளை நோய்களும் பெருகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டிலே டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துககொண்டே இருக்கின்றன. இந்த நமது மாநிலத்திலே காய்ச்சல் பரவாதபடியும் தேவன் தம்முடைய பிள்ளைகளை கண்மணியைப்போல் காத்தருளவும் நாம் அனுதினமும் கர்த்தருக்கு முன்பாக நின்று மன்றாட வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20).

நவம்பர் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், டிசம்பர் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் அனுதின வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாகவும் கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்கிறதாகவும் இருக்கும். நாங்களும் அதற்காக ஜெபிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

சத்தியவசன விசுவாச பங்காளர்கள் நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்