இன்றைய தியானம்

என்னில் அன்பாயிருக்கிறாயா?

தியானம்: 2020 ஜனவரி 24 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 21:12-19

“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1யோவான் 5:3).

ஒரு வயோதிபர் தள்ளாடி வீதியிலே விழுந்ததைக் கண்ட ஒரு வாலிபன், அவரைத் தூக்கி, மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்று, காயங்களுக்கு மருந்து கட்டி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உணவு கொடுத்து அவரை இளைப்பாறச் சொன்னான். அவரோ, ‘நான் நல்லவன் அல்ல; என் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து, என்னிஷ்டம் போல வாழ்ந்தவன். இந்தத் தள்ளாத வயதில் கவனிப்பாரற்று அனுபவிக்கிறேன். எனக்கு உதவ உனக்கு எப்படி மனது வந்தது?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘உங்களை இன்னமும் நேசிக்கின்ற உங்கள் இளைய மகன் நான்தான்’ என்றான்.

பேதுரு ஆண்டவரோடு வாழ்ந்த காலங்களில் மிகவும் சுறுசுறுப்பாகக் காரியங்களைச் செய்தான். ஆண்டவர் ஒரு கேள்வி கேட்டால் முந்திப் பதில் கொடுக்கிறவன் அவனே. சிலுவை மரணத்தைக்குறித்து பேசினால், ‘என் ஜீவனையும் உமக்காகக் கொடுக்க ஆயத்தம்’ என்பான். கால்களைக் கழுவியபோது, ‘வேண்டாம்’ என்றான். ‘என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை’ என்று இயேசு சொன்னதும், ‘அப்படியானால் தலையையும் கழுவும்’ என்றான். இந்த பேதுரு, “இவரை அறியேன்” என்று மூன்று தடவை இயேசுவை மறுதலித்தது எப்படி? இயேசு உயிர்த்தது தெரிந்தபோதும், தன் பழைய தொழிலுக்கு முதலில் சென்றவனும் இவனே.

கெனேசரேத்துக் கடலருகிலே, ‘என் பின்னே வா; உன்னை மனுஷரைப் பிடிக்கிறவனாக்குவேன்’ என்று பேதுருவை அன்று அழைத்த இயேசு, இப்போது உயிர்த்தெழுந்த ஆண்டவராக அதே கடற்கரையின் இன்னொரு பகுதியிலே பேதுருவைச் சந்திக்கிறார். ‘என்னில் அன்பாயிருக்கிறாயா’ என மூன்று தடவைகள் பேதுருவிடம் கேட்டார் ஆண்டவர். பேதுருவின் உள்ளமோ இயேசுவின் அன்பினால் உடைந்தது. அதில் ஊற்றெடுத்த அன்பை நமது ஆண்டவர் கண்டார். இவ்வளவு காலமும் உணர்ச்சிவசப்பட்டு நடந்தவன், இப்போது அன்பினால் நிறைந்திருந்ததை ஆண்டவர் கண்டார். ‘என் ஆடுகளை மேய்ப்பாயாக’ என்று ஊழியத்தையும் கொடுத்தார்.

உண்மை அன்பினால் பணிசெய்யும்போது, அது ஒரு பாரமாகவே தோன்றாது. இன்று நமது காரியங்கள் அன்பின் அடிப்படையிலா? அல்லது கடமையின் அடிப்படையிலா செய்யப்படுகிறது என்பதைச் சிந்திப்போமாக.

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது” (1கொரிந்தியர் 13:4).

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, கடமைக்காக இல்லாமல், உண்மை அன்பினால் நிரப்பப்பட்டவர்களாக உமது பணிகளைச் செய்வதற்கு எங்களை ஒப்புவிக்கிறோம். எங்களைப் பயன்படுத்தும். ஆமென்.

ஆசீர்வாதமாய் இருப்பாய்!

தியானம்: 2020 ஜனவரி 23 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 12:1-10

“நான்… உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி.12:2).

சகலத்தையும் இழந்து, வெறுமையாய் நாட்டை விட்டு புறப்பட்டோம். அந்நிய தேசத்தில் வாழ்ந்த காலத்தில் சேர்த்துக்கொண்டவற்றோடு சொந்த நாட்டிற்கு திரும்பினோம். மீண்டும் எங்களுக்குரிய யாவுமே களவுபோனது. அந்நேரத்தில் பலர் எங்களுக்கு தங்கள் வீட்டை திறந்து தந்து, தேவையான பொருட்களையும் தந்து உதவினார்கள். இப்போது நாங்கள் பிறருக்குக் கொடுக்கத் தக்கதாக கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார். ஆகவே, நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்” என்று ஒரு சகோதரி தனது வாழ்நாள் அனுபவத்தைக் கூறினார்.

‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்’ என்று ஆபிராமுக்குச் சொன்ன தேவன் ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார். அப்படியே, நம் ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் தேவன் ஒரு உன்னதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை உணர்ந்து வாழும்போது, அது நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாய் அமையும். நாம் பிறந்ததும் வாழுவதும் வீணுக்கல்ல. நமக்கூடாக தேவன் எதை நடப்பிக்கச் சித்தங்கொண்டுள்ளாரோ அதற்கு நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும். மாறாக, நம் இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு, இறுதிமூச்சு போகும்வேளையில், ‘ஆண்டவரே, உமது சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்கிறேன்’ என்று கூறினால் பயன் என்ன?

நாம் வீணடித்த காலங்கள் போதும். தேவன் நம்மை உருவாக்கி, இந்நேரம்வரை வழிநடத்தி, இத்தனை ஆசீர்வாதங்களையும் நம்மை நம்பி நமக்குக் கொடுத்திருக்கக் காரணம் என்ன என்று சிந்திப்போம். அவர் நமது வாழ்வில் வைத்திருக்கும் நோக்கம் என்ன? அதை அவர்தாமே நம்மில் நிறைவேற்ற நாம் ஆண்டவருக்கு இடமளித்திருக்கிறோமா? ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிற நாம், நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவேண்டுமல்லவா! மாறாக, மனம்போனபடி வாழுவது எப்படி? காலங்கள் போனால் திரும்பவராது. நாம் வீணடிக்கின்ற காலங்கள் நமக்குத் திரும்பவும் கிடைக்காது. எனவே, இன்றே காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம். ஆண்டவரிடத்தில் பெற்றுக்கொண்ட நன்மைகளை வீணாக்காமல், பிரயோஜனப்படுத்தி பிறருக்கும் ஆசீர்வாதமாய் வாழுவோம்.

“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (சங்கீதம் 134:3).

ஜெபம்: ஆபிரகாமை அழைத்து ஆசீர்வதித்த தேவனே, எங்களையும் அழைத்து ஆசீர்வத்திருக்கிறீர். அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படுத்தி பிறருக்கும் ஆசீர்வாதமாய் நாங்கள் வாழவேண்டி நிற்கிறோம். ஆமென்.

எச்சரிக்கையாயிரு!

தியானம்: 2020 ஜனவரி 22 புதன் | வேத வாசிப்பு: உபாகமம் 8:6-18

“என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும்; இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும்…” (உபாகமம் 8:17).

ஒரு பெரிய செல்வந்தர் எல்லாவித செழிப்புடனும் வாழ்ந்தார். ஆனால், அந்த அழகான வீட்டின் ஒரு அறையில் ஒரு உடைந்த வண்டி காணப்பட்டது. இதைக்குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஆரம்பத்தில் நான் வயலுக்குச் சென்ற மாட்டுவண்டி இதுதான். இப்போது விதவிதமான வாகனங்களும், ஓட்டுனர்களும் எனக்கு இருந்தாலும், என் முன்னிலைமை இதுஎன்பதை மறந்துபோகக்கூடாது என்பதற்காக உடைந்த இந்த மாட்டுவண்டியை இன்னமும் வைத்திருக்கிறேன்’ என்றார் அவர்.

வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தங்கள் பழைய நிலைமையை மறந்து வாழுகிறவர்கள் அநேகர். ஆண்டவர் ஆசீர்வதித்தார் என்போம்; ஆனால், அந்த ஆண்டவரையே மறந்துவிடுவோம். ஒருவேளை உணவுக்காக நாம் பட்ட பாடுகளை மறந்து, இன்று ஏராளமான உணவைக் கொட்டிவிடுகிறோம். ஏதோ எல்லாமே நமது கைகளில்தான் இருக்கிறது என்பதுபோல நடந்துகொள்கிறோம். இதைக்குறித்தே கர்த்தர் இஸ்ரவேலரை எச்சரித்தார். ‘நீ புசித்து திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, …உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையாகாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப் பண்ணின… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும் இருக்க எச்சரிக்கையாயிரு’ என்றார் கர்த்தர்.

நமக்குண்டான சகலமும் தேவனிடமிருந்தே நமக்குக் கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா? அவரது கிருபையால்தான் ஒவ்வொரு நாளிலும் நாம் வாழுகிறோம். களஞ்சியம் நிறையத் தானியங்களை நிரப்பிவிட்டு, “என் ஆத்துமாவே! அடித்துப் புசித்து சந்தோஷமாய் இரு; அநேக நாட்களுக்கு உனக்குத் தேவையான அத்தனையும் உண்டு” என்று சொன்ன ஐசுவரியவானைப் பார்த்து, ‘இன்றைக்கு உன்னுடைய ஆத்துமா உன்னைவிட்டு எடுக்கப்படுமானால், நீ சேர்த்து வைத்தவையெல்லாம் யாருடையதாகும்’ என்று சவால் விடுகிறார் சிருஷ்டிகரான நமது ஆண்டவர். நாளைக்கு நடப்பது இன்னதென்று தெரியாத அநித்தியமான வாழ்வை வாழுகின்ற நாம், நம்மை வழிநடத்துகின்ற தேவனை மறந்து வாழலாமா? நம்மாலேதான் எல்லாம் ஆகிறது என்பதுபோல பெருமை பேசலாமா? எந்த நிலைமையிலும் நமது ஆரம்பத்தை மறந்துவிடக் கூடாது.

“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?” (சக.4:10).

ஜெபம்: ஒன்றுமில்லாத எங்களை உயர்த்தி வைத்த ஆண்டவரே, நாங்கள் கடந்துவந்த பாதைகளையும், அற்பமான ஆரம்பங்களையும் மறவாமல் எந்நாளும் உமக்கு நன்றியாய் ஜீவிக்க கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்