இன்றைய தியானம்

ஆரோக்கியத்தோடு முன்செல்…

தியானம்: 2018 ஜனவரி 17 புதன்; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 4:1-22

“என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி. …அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்” ( நீதி. 4:20,22).

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்று சொல்லி பல ஆலோசனைகள் இன்று வழங்கப்படுகின்றன. இவற்றுள் அதிகாலையில் தண்ணீர் அருந்துதல், உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, ஒழுங்கான நித்திரை, தேவை ஏற்படின் மருத்துவ ஆலோசனை என பல பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால், சாலொமோன் ராஜா என்ன சொல்லுகிறார்? “நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும் என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது, …ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு…” (வச.3-5). தனது தகப்பனாகிய தாவீதின் வார்த்தைகள் தனது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தது என்கிறார் சாலொமோன்.

தேவபயம், ஞானம், தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல், உண்மை, உத்தமம், நேர்மையான வாழ்க்கை என்று தாவீது கொடுத்த ஆலோசனைகள் சாலொமோனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தன. அதன் வழியில் இருக்கும்வரைக்கும் ஆரோக்கியம்தான். எப்போது அதைவிட்டு விலகினானோ, அப்போதே சாலொமோனும் தேவனை விட்டு விலகி விழுந்துபோனான்.

நமது சரீரம் தேவனுடைய ஆலயம் (1கொரி.6:19-20). ஆகவே நமது சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டியது நமது கடமை. இதற்காக நாம் பல வழிமுறைகளைக் கையாண்டாலும், சிலவேளைகளில் தாவீது கூறியது போல, நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக நமது உடலின் ஆரோக்கியம் குன்றிப்போவதுமுண்டு (சங்.38:3,7). அதேசமயம் நாளை அழிந்து போகின்ற இந்தச் சரீரத்திற்கு நாம் இத்தனை கவனம் செலுத்தும்போது, என்றும் அழியாமல் தேவனோடு நித்தியமாக வாழவேண்டிய நமது ஆத்துமாவின் ஆரோக்கியத்தைக் குறித்து நாம் எவ்வளவு கவனம் எடுக்கவேண்டும்! ஏனெனில் நாம் மனதளவில் பாதிக்கப்படும்போது நமது சரீரமும் பாதிக்கப்படுகிறது; சுகமும் கெட்டுப்போகிறது. தேவனுடைய வார்த்தை நமது சரீரத்திற்கும், ஆத்தும ஆவிக்கும் சுகமளிக்கிறது என்பதை நினைத்து, அது தருகின்ற ஆரோக்கியத்தை நினைத்து, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போமாக.

“சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த  ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” (1தீமோத்தேயு 4:8).

ஜெபம்: ஆண்டவரே, எங்களது சரீரத்திற்கும் ஆத்துமத்திற்கும் சுகத்தைத் தருகிற தேவனுடைய வார்த்தையில் நான் நிலைத்திருந்து கனிகொடுக்கிறவர்களாய் வாழ எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.

சோதனையில் விழுந்துபோகாது முன்செல்…

தியானம்: 2018 ஜனவரி 16 செவ்வாய்; வேத வாசிப்பு: யாக்கோபு 1:1-15

“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” ( மத்தேயு 6:13).

தங்களுக்கு விடுதலைவேண்டி இயேசுவிடம் வந்த பலர் மெய்யாகவே, தங்களுக்கிருந்த தீய பழக்கங்கள், தவறான சிநேகித உறவுகளைவிட்டு புதிய வாழ்வுக்குள் வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பழைய காரியங்கள் அவர்கள் கண்முன்னே மறுபடியும் வரும்போது, அவற்றை உதைத்துத் தள்ளி, வெற்றி பெறுகிறவர்களும் உண்டு; அதேசமயம், மறுபடியும் விழுந்துபோகிறவர்களும் உண்டு.

இவ்வுலக வாழ்வில் பாவசோதனைகள் வரத்தான் செய்யும்; அதைத் தவிர்க்கமுடியாது. ஆனால், தேவன் நம்மை பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல (யாக்.1:13). நாம் நமது சுய இச்சைகளாலேயே இழுப்புண்டு சோதனைக்குள்ளாகிறோம் என்று யாக்கோபு விளக்குகிறார். ஆனால், அந்த இச்சையிலிருந்து நாம் வெளிவராவிட்டால், அந்த இச்சை பாவத்தைப் பிறப்பிக்க, பாவம் மரணத்தில் அதாவது, தேவனே இல்லாத வாழ்வுக்குள் நம்மை வீழ்த்திப் போடும். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிற்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக்.1:14-15). இந்த இச்சைக்கு எதிராகப் போராடி சோதனைகளை நாம் ஏன் ஜெயிக்கக்கூடாது? இதற்கு இருவழிகளைத் தாவீது நமக்குக் காட்டித் தந்துள்ளார். “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் (சங்.1:1) நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். அடுத்தது, “எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:16). அவரைப் பற்றிக்கொண்டு சோதனைகளை நாம் ஜெயிக்கலாமே. அவர் நமது பலவீனங்களைப் புரிந்துகொண்டவராகையால் அவரே நமக்கு உதவி செய்வார் அல்லவா!

ஆகவே, சோதனைகளைக் கண்டு நாம் திகிலடைய வேண்டிய அவசியமே இல்லை. ஆண்டவரிடம் எல்லாவற்றையும் எடுத்துச்செல்வோம். விழுந்துபோனாலும் அதையும் உண்மைத்துவத்துடன் அறிக்கை செய்வோம். அவர் நம்மைத் தூக்கி நிறுத்தி, தொடர்ந்து நடத்துவார்.

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி.10:13).

ஜெபம்: எங்களது பெலவீனங்களை ஏற்றுக்கொண்ட ஆண்டவரே, மனுஷரை வீழ்த்துகிற கண்ணிகள், சோதனைகளிலிருந்து எங்களை பாதுகாத்தருளும். ஆமென்.

வழியை அறிந்து முன்செல்ல…

தியானம்: 2018 ஜனவரி 15 திங்கள்; வேத வாசிப்பு: யோவான் 14:1-12

“நீங்கள் வலது புறமாய்ச் சாயும்போதும், இடது புறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசா. 30:21).

தான் போகவேண்டிய வழியைத் தகப்பனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு புறப்பட்டான் மகன். சிறிது தூரம் சென்றதும் இலகுவான பாதைபோலத் தெரிந்த இன்னொரு பாதையைக் கண்டு அந்த வழியிலே இறங்கி நடந்தான். ஆனால் அது தவறு என்றுணர்ந்து தடுமாறி நின்றான். அப்போது, அவனுடைய கைப்பேசி ஒலித்தது. “மகனே, நடுவிலே நீ பாதை மாறியிருப்பாய். அது தவறான பாதை. நீ திரும்பிவந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செல்” என்றார் தந்தை. வெட்கத்துடன் சரியான பாதைக்குத் திரும்பினான் மகன்.

அன்று இஸ்ரவேல் ஜனங்களும் பலவேளைகளிலும் அடிமைத்தனத்திலிருந்து தம்மை மீட்டுவந்து, கானானைச் சுதந்தரமாகக் கொடுத்த தேவனுடைய வழிகளைவிட்டு விலகிப்போனார்கள். பாவமான செயல்கள், விக்கிரக வழிபாடு என்று பலவிதத்திலும் வலது புறமும், இடது புறமும் வழிவிலகிப் போனார்கள். ஆனாலும், அவர்களைத் தம்முடைய சொந்த ஜனமாகத் தெரிந்துகொண்ட கர்த்தரோ, அவர்களைக் கைவிடவில்லை. அவ்வப்போது தண்டனை கொடுத்தாலும், அவர்கள்மீது தமது கண்களை வைத்து அவர்களைத் தொடர்ந்து வழி நடத்திகொண்டே இருந்தார். தீர்க்கதரிசிகளை அந்தந்தக் காலத்துக்கு எழுப்பி, தமது ஜனம் நடக்கவேண்டிய நேர்வழியைக் கற்பித்தார்.

இன்று, “வழி இதுவே. இதிலே நடவுங்கள்” என்று நம்மை யாரும் கூப்பிட்டுச் சொல்லப்போவதில்லை. ஏனெனில், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொன்னதுமன்றி, பிதாவிடம் சேருவதற்கான வழியையும் உண்டாக்கித் தந்திருக்கிறார் ஆண்டவராகிய இயேசு. ஆனால், நாமோ உலக சத்தங்கள், உலக ஆலோசனைகள், உலக கவர்ச்சிகளுக்கு அதிக இடமளித்து, கீழ்ப்படியாமை, பாவ வாழ்க்கை என்று தேவனுக்குப் பிரியமற்றதும், அலங்காரமாகவும் இலேசாகவும் காட்சியளிக்கின்ற வலது இடதுபுற வழிகளினாலும் கவரப்பட்டு மாண்டுபோகிறோம். ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தை நம்மைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. நாம் அந்தச் சத்தத்துக்கு செவிகொடுத்து நடப்போமானால், குன்று குழிகளுக்கு நிச்சயமாகத் தப்பித்துக் கொள்வோம்; சேரவேண்டிய இடத்திற்கும் பத்திரமாகப் போய்ச்சேருவோம்.

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8).

ஜெபம்: தேவனே, எங்களது விசுவாச ஓட்டத்திலே பாதை மாறி, பாதை தவறிவிட்டாலும் உம்முடைய சத்தத்தைக் கேட்கும் செவிகளை எங்களுக்குத் தாரும். உமது வழிகளில் எங்களை உயிர்ப்பியும். ஆமென்.

சத்தியவசனம்