ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 4 சனி

“பூமி முழுவதுக்கும் உன்னதமான தேவன்” (சங்.97:9) தாமே சத்தியம், நம்பிக்கை, தமிழன் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்திடவும், ஒளிபரப்பிற்கான பணத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு உதவி செய்திடவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகள் மூலம் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

விசுவாசத்துடன் செயற்படு

தியானம்: 2017 நவம்பர் 4 சனி; வேத வாசிப்பு: லூக்கா 5:1-7

“அதிகாலமே, யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம் பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்” (யோசுவா 3:1).

வேலை கிடைக்காததால் மனமுடைந்திருந்தவனைப் பெலப்படுத்தும்படி சென்ற அவனது நண்பன், ‘கர்த்தர் நிச்சயம் எனக்கு வேலை தருவார்’ என்று அவன் விசுவாசத்துடன் கூறியதைக்கேட்டு சந்தோஷப்பட்டான். ஆனால், ஏன் இன்னும் தன் நண்பனுக்கு வேலை கிடைக்கவில்லை? என்று அறியும் ஆவலுடன் பேசிப் பார்த்ததில், தனது நண்பன் எந்தவொரு வேலைக்கும் விண்ணப்பிக்கவில்லை என்று கண்டு கொண்டான். ‘விசுவாசம் போதாது; நீயும் உன் பங்கைச் செய்யவேண்டும்’ என்று அவனைக் கடிந்துகொண்டு, வேலைக்கு விண்ணப்பிக்க அவனை உற்சாகப்படுத்தினான். விசுவாசம் போதாது; கிரியையும் வேண்டும். நமக்குள் இருக்கும் விசுவாசத்தை நாமே சோதிக்கக்கூடாது.

“இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்” (யோசு. 1:2). இது கர்த்தர் யோசுவாவுக்குச் சொன்னது. பின்னர் என்ன சந்தேகம்? யோர்தானைப் பார்த்து ஏன் தயக்கம்? யோசுவா தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து விட்டு, கர்த்தர் கொண்டுபோவார் என்று சும்மா இருக்கவில்லை. யோர்தான் கரை புரண்டு ஓடினாலும், எரிகோவின் மதில்கள் மகா பெரியவை என்று அறிந்தாலும், எழுந்து புறப்பட்டுச் சென்றான். விசுவாசம் கிரியையில் வெளிப்படுமட்டும், அதற்கு உயிர் இருக்காது.

இயேசுவைக் குறித்து அதிகம் தெரியாமல் இருந்தபோதும், இராமுழுவதும் விழித்திருந்து வலைபோட்டு ஒரு மீனும் கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வலைகளையும் கழுவ ஆரம்பித்தபோது, இயேசு அந்தப் பேதுருவின் படகில் ஏறி, ஆழத்திலே வலையைப் போடு என்று சொன்ன ஒரே வார்த்தையை பேதுரு கேட்டான். அவனுக்கு அன்று விசுவாசம் என்றால் என்ன என்றுகூடத் தெரியுமோ நாம் அறியோம். ஆனால், ஆகிலும், உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் (லூக்.5:5) என்று பேதுரு சொன்னானே, அங்கேதான் அவனுக்குள் அவனையும் அறியாதிருந்த விசுவாசம் கிரியையில் வெளிப்பட்டது. அதன் பலன் அவன் இயேசுவின் சீஷனானான். அன்று அவன் மாத்திரம் இயேசுவின் வார்த்தையைப் புறக்கணித்திருந்தால் இன்று உலகம் பேதுருவைக் கண்டிருக்குமோ என்னவோ! நாம் விசுவாசிக்கும் வார்த்தைகளைச் செயற்படுத்தும்படி காலடி எடுத்து முன்னே வைக்கும் வரைக்கும் அதன் நிறைவேறுதலை நாம் காண்பது கடினம்.

“கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது” (யாக்கோபு 2:20).

ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை நாங்கள் விசுவாசிக்கிறோம், அதை கிரியையில் வெளிப்படுத்தி வெற்றியைச் சுதந்தரித்துக்கொள்ள உமதாவியால் நிரப்பிடும். ஆமென்.