ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 6 திங்கள்

“நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்” (சங்.119:116) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 6 நபர்களது கடன்கள் தீர்வதற்கான வழிகளை கர்த்தர் காட்டவும் அவர்களது பொருளாதார நிலைகளில் உயர்வுகளைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.

நினைப்பூட்டும் அடையாளம்

தியானம்: 2017 நவம்பர் 6 திங்கள்; வேத வாசிப்பு: யோசுவா 4:1-24

“…இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்” (யோசுவா 4:7).

பல வருடங்களுக்குப் பின், தமது சொந்த கிராமத்தைக் தமது பிள்ளைகளுக்கு காண்பிப்பதற்காக ஒரு பெற்றோர் நாடு திரும்பியிருந்தனர். வழியில் கடக்க வேண்டிய ஆற்றையும் கடந்து கிராமத்துக்குள் காலடி வைக்கும்போது, முதலில் கண்டது ஒரு பெரிய கல். அதன் இரகசியம் என்ன என்று பிள்ளைகள் கேட்டபோது, பல வருடங்களுக்குமுன் அக்கிராமத்தில் மூண்டெழுந்த யுத்தத்தில் கிராம மக்கள் இந்த ஆற்றின் வழியேதான் உயிர்தப்பி வந்ததாகவும், அதற்கு அடையாளமாக இந்தக் கல்லை தாங்களே உருட்டி வைத்ததாகவும் பெற்றோர் சொல்லக் கேட்ட பிள்ளைகள், தங்கள் பெற்றோரைப் பாதுகாத்த தேவனைத் துதித்தனர்.

ஜனங்கள் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவிடம் ஒரு காரியத்தைப் பணித்தார். யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவற்றை அக்கரைக்குக் கொண்டு போய், அவர்கள் அன்று இரவு தங்கிய ஸ்தானத்திலே வைக்கவேண்டும். இது ஏனெனில், இது அவர்களுக்கும் அவர்களது சந்ததிக்கும் நினைப்பூட்டும் அடையாளம். அதாவது, நாளை அவர்களுடைய பிள்ளைகள் இது என்ன கற்கள் என்று கேட்டால், உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தான் பிரிந்தது என்றும், தேவஜனம் கடந்து போனபோது யோர்தான் வழிவிட்டது என்றும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுவதற்கு இது நினைப்பூட்டும் அடையாளமாயிருக்கும். யோசுவா, யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலும் பன்னிரண்டு கற்களை நாட்டினான். அதாவது, இந்தச் சம்பவங்கள் சந்ததி சந்ததியாய் அறிவிக்கப்பட வேண்டும். இது சரித்திர வரலாற்றுக்கு இந்தக் கற்கள் அடையாளமாகிறது.

நினைவூட்டும் அடையாளங்கள் அவசியம். தங்கள் மூதாதையர்கள் எப்படி தேவனால் நடத்தப்பட்டனர் என்பதைப் பிள்ளைகள் அறியவரும்போது, அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவுக்கு அது நிச்சயம் வித்திடும். மேலும், தேவனுடைய கட்டளைகளைப் பிள்ளைகளுக்குக் கற்பித்து, அவற்றை நினைப்பூட்டும் அடையாளங்களாக அவர்கள் கைகளிலும் நெற்றியிலும் கட்டும்படி மோசே இஸ்ரவேலுக்குச் சொன்னதையும் வாசிக்கிறோம் (உபா.6:7,8). இன்று நாம் என்ன அடையாளத்தை நமது பிள்ளைகளுக்குக் காண்பிக்கிறோம்? தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிகின்ற மனமாற்றமடைந்த நமது வாழ்வே அவர்களுக்கு அடையாளமாய் இருக்கட்டும். பிள்ளைகள் நம்மிடம் கேட்கும்படி நாம் அவர்கள் முன்பு அடையாளமாய் இருக்கிறோமா?

 “நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 43:12).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இதுவரை நீரே எங்களை வழிநடத்தினீர் என்று எங்கள் சந்ததிகளும் அறிந்துகொள்ளும்படி நாங்கள் அடையாளங்களாக சாட்சிகளாக விளங்க உமது கிருபையைத் தாரும். ஆமென்.