ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 15 புதன்

“நீங்கள் என் வார்த்தைகளை .. உங்கள் ஆத்துமாவிலும் பதித்து .. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் .. எழுதுவீர்களாக” (உபா.11:19,21) ஜீவனுள்ள வார்த்தைகளை அச்சிடும் 2018-ம் வருட சத்தியவசன காலண்டர் பணிகளுக்காக ஜெபிப்போம்.

அமைதியான போராட்டம்

தியானம்: 2017 நவம்பர் 15 புதன்; வேத வாசிப்பு: சங்கீதம் 46:1-11

“…நான் உங்களுக்குச் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும், உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்பட வேண்டாம்” (யோசுவா 6:10).

எந்த இடத்தில் என்ன விதத்தில் எப்படி எதிரியைச் சந்திப்பது என்பது திட்டமிடப்படாவிட்டால், வெற்றி சந்தேகமே. எதிரியின் ஆள்பலம், ஆயுதபலம் மட்டுமல்ல, அவனைச் சுற்றியுள்ள பாதுகாப்பின் பலத்தையும் அறியவேண்டியது மிக முக்கியம். மாறாக, அசாத்திய துணிவுடன் சென்றால் முறிந்தோடி, செத்து மடிய வேண்டி நேரிடலாம். ஆகவேதான் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் யுத்த தந்திரங்கள் தெரிந்தவர்கள் அமர்ந்திருந்து ஆலோசிப்பதுண்டு.

எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேலர் சந்தித்த முதலாவது யுத்தம் ரெவிதீமில் அமலேக்கியருடனான யுத்தமே. அங்கே யோசுவாவும் மக்களும் முகமுகமாய்ப் போராடவேண்டியிருந்தது. மோசே அவர்களுக்காகத் தன் கரங்களை உயர்த்தி நின்றார். ஆனால், எரிகோ மதிலைத் தகர்த்தெறிய வேண்டிய இந்த யுத்தத்திற்குக் கர்த்தர் வித்தியாசமாகத் திட்டம்போட்டுக் கொடுத்தார். இஸ்ரவேலிடம் இருந்த எந்த ஆயுதமும் எரிகோவின் மதிலை இடித்துத்தள்ள முடியாது என்பது கர்த்தர் அறியாததா? இங்கே ஜனங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். பெட்டிக்கு முன்னே எக்காளம் ஊதுகிறவர்கள் ஊதிக்கொண்டு செல்லுகையில், உத்தரவு வரும்வரைக்கும் ஜனங்கள் ஒரு சத்தமுமின்றி அமைதியாக அந்த மதிலை ஏழுநாட்கள் சுற்றிவரவேண்டும். இது எப்படி? இப்படியும் ஒரு யுத்தமா? யுத்தம் என்றால் ஆயுதச் சத்தம், வீரரின் சத்தம் எல்லாம் கேட்கவேண்டுமே! ஆனால், இங்கே கர்த்தர் அமைதியாய் இருக்கக் கட்டளையிட்டார். ஏனெனில் இந்த யுத்தத்தை இஸ்ரவேலர் அல்ல; கர்த்தரே முழுவதுமாக முன்னின்று முன்னெடுத்தார். அவருடைய திட்டப்படி அமர்ந்திராமல் இந்த இஸ்ரவேலர் அன்று அவசரப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? பின்னர் ஏழாம் நாள் ஏழுமுறை சுற்றிவரவேண்டும். ஏழாம் நாள், ஏழாம் முறை சுற்றிவரும்போது, எக்காளம் ஊதுகையில், “ஆர்ப்பரியுங்கள்” என்று சொல்லும்போது, மக்கள் ஆர்ப்பரிக்கவேண்டும். “எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது” (யோசுவா 6:20).

எரிகோ மதிலைப் பார்க்கிலும் மிகுந்த அரணிப்பான தடைகளை நாம் வாழ்வில் எதிர்கொள்ள நேரிடலாம். தேவசமுகத்தில் அமர்ந்திருந்து, யுத்தத்தை அவர் கரங்களில் விட்டுவிடுவோம். அவர் சொல்லுவதைச் சொன்னபடி செய்யும்போது, நிச்சயம் மதில்கள் யாவும் இடிந்துவிடும். அமைதிநேரம் அமைதி; ஆர்ப்பரிக்கும் நேரம் ஆர்ப்பரிப்பு. தேவனுடைய ஒழுங்கு ஒருபோதும் தப்பாது.

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, வாழ்வில் அநேக தோல்விகளைச் சந்தித்த நாங்கள் இனி நீர் நியமித்த ஒழுங்கின்படி நடந்துகொள்வதற்கு எங்களை அர்ப்பணித்து ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.