ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 17 வெள்ளி

‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற புத்தகத்திற்கான அச்சுப்பணிகள் நேர்த்தியாய் முடிய, பங்காளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான தபால் செலவுகள் அச்சுப்பணிகளின் தேவைகளை கர்த்தர் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.

அகற்றவேண்டியவற்றை அகற்றிவிடு

தியானம்: 2017 நவம்பர் 17 வெள்ளி; வேத வாசிப்பு: யோசுவா 6:17-21

“சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும் … எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 6:18).

கர்த்தருக்குரியவற்றைக் கர்த்தருக்கே கொடுப்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். முதற்பலன்கள் கர்த்தருடையவை என்றால் அவை கர்த்தருக்கே. முதற்சம்பளம் கர்த்தருக்கு என்றால், அதில் பாதியை எடுத்துவைப்பது எப்படி? கர்த்தருக்குரியது எது, நமக்குரியது எது என்று வேதம் நமக்குப் போதித்திருக்கிறது. அதற்கு மாறுபாடாய் நாம் நடப்பது எப்படி?

எரிகோ அடைக்கப்பட்டிருந்தபோதே, “இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்” என்று கர்த்தர் யேசுவாவுக்குச் சொல்லிவிட்டார். சொன்னவர் சொன்னபடி செய்திருக்க, அவர்கள் செய்யவேண்டுமென்று அவர் சொன்னதையும் அவர்கள் செய்யவேண்டுமல்லவா! பட்டணத்தைக் கர்த்தர் ஒப்புவித்துவிட்டார். ஆனால், அதிலுள்ள யாவும் கர்த்தருக்குரியது. அவற்றைத் தொட்டால் அது மக்களுக்குச் சாபத்தீடு என்று யோசுவா சொல்லிவிட்டார். அவை மக்களுக்குரியது அல்ல; அவை கர்த்தருக்குரியவை. ஆகையால் அவை சுட்டெரிக்கப்படவேண்டும். பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பினால் செய்யப்பட்ட எல்லாமே கர்த்தருக்குப் பரிசுத்தமானவை. அவை கர்த்தருடைய பொக்கிஷத்தில் சேர்க்கப்படவேண்டும் (6:18). கர்த்தர் தொடக்கூடாது என்றால் தொடக்கூடாதுதான். எரிகோ பட்டணம் அல்ல இஸ்ரவேலின் நோக்கம்; அவர்கள் கானானைச் சுதந்தரிக்கவேண்டியவர்கள். எரிகோவின் பொக்கிஷங்களில் அவர்கள் மயங்கியிருக்க முடியாது. அடுத்தது, இந்த யுத்தத்தை முற்றிலும் வெற்றி கண்டவர் கர்த்தர். ஆகவே, எல்லாமே கர்த்தருக்கே சொந்தம். யோசுவாவும் அப்படியே செய்தான்.

கர்த்தருக்குரியவை கர்த்தருக்குரியவையே. அதிலே நமது கைகளை நாம் வைத்தால் அது நமக்குச் சாபத்தீடாகிவிடும். நமக்கு எது தேவை எது தேவையில்லை என்று தேவன் அறிவார். அவர் நமது யுத்தங்களை நடத்தி, நாம் வெல்ல முடியாத பதினாயிரம் எரிகோவிலும் வல்லமைகொண்ட பாவத்திலிருந்து நமக்கு வெற்றி தந்தவர் ஆண்டவர் ஒருவரே. ‘அந்தப் பாவ ஜீவியத்தில் நீ கொண்டிருந்த ஒன்றும் உனக்கு வேண்டாம். எல்லாவற்றையும் சுட்டெரித்துப்போடு; நான் உனக்குக் கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வு தருவேன்’ என்று  கர்த்தர் சொல்லியிருக்க, நாம் அவற்றில் சிலவற்றை எடுத்து ஒளித்துவைத்து ருசிபார்ப்பது எப்படி? கர்த்தர் பரிசுத்தர்; நாமும் அவருக்கேற்றவர்களாக வாழும்படி, அவருடைய வார்த்தையைப் பற்றியிருப்போமாக.

“கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக” (லேவி.20:26).

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் வேண்டாம் என்று சொன்னதும் வெறுக்கிறதுமான எது ஒன்றும் என் வாழ்வில் ஒட்டிக்கொள்ளாதவாறு அவற்றையெல்லாம் அகற்றிப்போட்டுவிட எங்களுக்கு உதவிச்செய்யும். ஆமென்.