ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 31 ஞாயிறு

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று வாக்குப்பண்ணின தேவன் புதிய வருடத்திலும் நம்மோடி ருந்து தமது வழிகளை நமக்குப் போதிப்பதற்கும் நாம் அவருடைய வழிகளில் நடப்பதற்கும் கிருபைச் செய்யும்படியாக துதித்து ஜெபிப்போம்.

உன்னிடத்தில் என்ன உண்டு?

தியானம்: 2017 டிசம்பர் 31 ஞாயிறு; வேத வாசிப்பு: மாற்கு 6:30-44

“அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு. போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்து வந்து: ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்” (மாற்கு 6:38).

இந்த வருடத்தில் 365 நாட்களைக் கடந்துவர தேவன் ஒத்தாசை தந்தார். வாழ்வதற்குச் சுகபெலன் தந்தார். அதிகமதிகமான கிருபை தந்தார். பல பல தேவ செய்திகளைக் கேட்க தருணங்கள் தந்தார். எத்தனை ஆராதனைகள்! ஏராளமான ஆசீர்வாதங்கள், ஈவுகள்! இத்தனைக்கும் மத்தியில் நாம் ஆண்டவருக்காய் என்ன செய்தோம்? என்ன கொடுத்தோம்?

அன்று திரளான மக்களின் பசியைப் போக்கியது, ஒரு சிறுவனிடமிருந்து சீஷர்கள் பெற்றுக்கொடுத்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே. எத்தனையோ அற்புத அடையாளங்களைச் செய்த ஆண்டவருக்கு இந்த மக்களைப் போஷிப்பது ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது. ஆனாலும், ஆண்டவர், ‘உங்களிடத்தில் இருப்பதைத் தாருங்கள்’ என்றே கேட்கிறார். ஆண்டவருக்காகக் கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நமக்காகத் தம்மையே ஈந்தவருக்கு நாம் கொடுப்பதற்குத் தாமதிப்பது ஏன்? நம்மிடம் இல்லாததை தேவன் கேட்கவில்லை. நமது திராணிக்கு மிஞ்சியதையும் அவர் கேட்பதில்லை. நம்மிடம் இருப்பவற்றை மனப்பூர்வமாய் தரும்படிக்கே அவர் கேட்கிறார். நம்மிடம் உள்ளதைக் கொடுக்கும்போது அதை அவர் ஆசீர்வதித்து பலருக்கு ஆசீர்வாதமாக்க வல்லவராயிருக்கிறார்.

நம்மிடம் இருப்பது என்ன? நமது நேரம், குரல், பணம், தாலந்துகள் இப்படியாக எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். யாருமே என்னிடம் எதுவுமேயில்லை என்று சொல்லமுடியாது. இருப்பதைக் கொடுக்கவும், அதுவும் மனப்பூர்வமாய்க் கொடுக்கவும் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா?

அன்பானவர்களே, ஆண்டவர் தம்மிடம் இருந்ததில் எடுத்து நமக்குத் தரவில்லை. அவர் தம்மையே முழுமையாகத் தந்தார். நாம் அன்புகூர்ந்ததால் அவர் நம்மில் அன்புகூரவில்லை. அவரே முதலில் அன்புகூர்ந்தார். நாம் அவரைவிட்டு விலகியோடி பாவத்தில் விழுந்தபோது அவர் நம்மைத் தள்ளவில்லை. நம்மைத் தேடிவந்து தூக்கிவிட்டார். இந்தத் தூய்மையான அன்பைப் புரிந்துகொள்ளாத ஆயிரமாயிரம் பேர்கள் தினமும் உலகில் மடிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவ அன்பைப் புரிந்துகொள்ளும்படி, அவருடைய அன்பைப் பெற்றிருக்கிற நாம், நம்மிடம் உள்ளதைக் கொடுக்கலாமே! அப்போது பிறரும் அந்த அன்பைக் கண்டு, மகிழ்ந்து, மீட்படைய முடியும்.

“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).

ஜெபம்: எங்கள் நல்ல தேவனே, உம் சொந்த குமாரனையே எங்களுக்காய் கொடுத்தீரே. உம்முடைய வாஞ்சையை நிறைவேற்றும்படி என்னையே உமக்குக் கொடுக்கிறேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 30 சனி

“நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமி.29:11) என்ற வாக்குப்படி பலவிதத் தேவைகளோடிருக்கிற நபர்களுக்கு தேவன் தமது நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை நிறைவேற்ற ஜெபிப்போம்.

தவறவிட்ட தருணங்கள்

தியானம்: 2017 டிசம்பர் 30 சனி; வேத வாசிப்பு: யோவான் 13:1-17

“சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு, …” (யோவான் 13:2).

பல வருடங்களுக்கு முன்பு ஒரு தாயார் தான்போகும் ஆலயத்தின் வழக்கத்தைப் பற்றி சொன்னார். அங்கே திருவிருந்துக்கு முன்பதாக அனைவரும் தமக்குப் பக்கத்தில் இருப்பவரின் கால்களைக் கழுவுவது கட்டாயமாம். அதனால் திருவிருந்து ஆராதனையின்போது, தாம் யாருக்குப் பக்கத்தில் இருப்பது என்று பார்த்துப் பார்த்துத்தான் இருப்பார்களாம். தப்பித்தவறிக்கூட பிடிக்காதவர்கள் பக்கத்தில் இருக்கமாட்டார்களாம். “இந்த ஆலய ஆராதனையில் கால் கழுவும் இந்தப் பழக்கத்தால் என்ன பயன்” என்று அவர் கேட்டார்.

கால் கழுவுகின்ற ஒரு வழிமுறைமையை, அல்லது ஒரு சடங்கை இயேசு தமது செய்கையில் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக, பல படிப்பினைகளையே அன்று சீஷருக்கும், இன்று நமக்கும் கற்றுத் தந்திருக்கிறார். சீடரின் கால்களை ஆண்டவர் கழுவியபோது, அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன், மறுதலிக்கப்போகிறவன், அவரைவிட்டு ஓடிப்போகிறவர்கள் அனைவரும் இருந்தனர். அதற்காக அவர்கள் செய்யப்போவதை அவர் சொல்லிக்காட்டவுமில்லை; யாருடைய கால்களையும் கழுவாமல் தவிர்க்கவுமில்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும், அவர் கள் தமது சீஷர்கள், அவர்களைத் தாம் நேசிப்பதையும், குருவாகிய தாமே இதைச் செய்வதன்மூலம் தாழ்மையின் செயற்பாட்டையும் ஆண்டவர் கற்றுக்கொடுத்தார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிக்கு தன் மனதுக்குள் சாத்தானுக்கு இடங்கொடுத்த யூதாஸ் இந்தக் கடைசி வேளையிலாவது இயேசுவின் அன்பை உணர்ந்திட தருணம் இருந்தது. ஆனால் அவன் அதைத் தவறவிட்டான். இத்தருணத்தில் கூட மனந்திரும்பி தன் தவறை உணர்ந்திருந்தால் அவன் மன்னிப்பு பெற்றிருப்பான். தோய்த்த துணிக்கையை எவனிடம் கொடுக்கிறாரோ அவனே காட்டிக்கொடுப்பான் என்று சொல்லி, துணிக்கையை யூதாஸிடம் கொடுத்தபோதுகூட அவனுக்கு இன்னுமொரு தருணம் கிடைத்தது. அதையும் அவன் தவறவிட்டான். ஆண்டவர் பிதாவின் சித்தப்படி மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாலும், அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு ஐயோ!

அருமையானவர்களே, நமது வாழ்வில் எத்தனை தருணங்களைத் தவறவிட்டிருக்கிறோம்? வருடத்தின் இந்த இறுதி நாட்களில் சற்று சிந்தித்துப் பார்ப்போம். என்னையுமா ஆண்டவர் நேசித்தார் என்று ஒரு கணம் உள்ளான மனதுடன் சிந்தித்தால், இனி எந்தத் தருணத்தையும் தவறவிடமாட்டோம். இந்த நாளும் ஒரு தருணம்தான்.

“தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு” (நீதி.14:22).

ஜெபம்: கிருபையுள்ள தேவனே, நான் மனந்திரும்பும்படி நீர் தந்த எத்தனையோ தருணங்களை தவறவிட்டுவிட்டேன், அவைகளுக்காக மனம் வருந்துகிறேன். இனி எனது வாய்ப்புகளைத் தவறவிடாதிருப்பேன். ஆமென்.