Daily Archives: December 8, 2017

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 8 வெள்ளி

சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களைப் போதிக்கும் செய்தியாளர்களது நல்ல சுகத்திற்காகவும் தேவ செய்திகள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளாக நிறைந்த பலனைக் கொடுப்பதற்கும், நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

மறுபடியும் பிறத்தல்

தியானம்: 2017 டிசம்பர் 8 வெள்ளி; வேத வாசிப்பு: யோவான் 3:1-16

“இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?…” (யோவான் 3:10).

கிறிஸ்து பிறப்பு நினைவுகூருதல் வருடாவருடம் தவறாமல் வந்து போகிறது. அதற்கான கொண்டாட்டங்களும், ஆராதனைகளும், ஒழுங்காக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்து பிறந்துவிட்டார்; ஆனால், நாம் அவருக்குள் மறுபடி பிறந்துவிட்டோமா? கிறிஸ்து நம்மை மீட்பதற்காகப் பிறந்து அதை நிறைவேற்றியும்விட்டார். அந்த மீட்பைப் பெற்றவர்களாய் அவருக்கே சாட்சியாய் வாழும்படி நாம் மறுபடி பிறந்துவிட்டோமா?

பரிசேயர், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாயும், நீதி நியாயத்தின்படி அனைத்தையும் கடைப்பிடிப்பவர்களாயும் தங்களை எப்போதும் காட்டிக்கொள்வர். இங்கே நிக்கொதேமு ஒரு பரிசேயனாகவும், அத்தோடு யூதருக்குள்ளே அதிகாரியாகவும், இஸ்ரவேலில் போதகனாகவும் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவைச் சந்திக்க வருகிறான். வந்தவன் இயேசுவைப் போதகரென்றும், தேவனிடத்திலிருந்து வந்தவரென்றும் புகழுகிறான். ஆனால், இயேசுவோ, அவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். மறுபடியும் பிறத்தல் என்பது என்னவென்று தெரியாமல் இருந்த நிக்கொதேமுவுக்கு, ஆண்டவர் அதனைத் தெளிவுபடுத்துகிறார். இப்பகுதியைக் கருத்தோடு படித்தால் நமக்கும் அந்தத் தெளிவு கிடைக்கும்.

மறுபடியும் பிறத்தல் என்பது என்னவென்பதை நாம் இன்று அறிந்திருக்கிறோம். நமக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காகவே தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை நமக்காகத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்புகூர்ந்தார். கிறிஸ்து பிறப்பின் இந்தத் தாற்பரியம் நமது வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும். நமது உள்ளான வாழ்வில் பிரதிபலிக்காத கிறிஸ்து பிறப்பை நாம் வெளிவாழ்வில் கொண்டாடி மகிழுவதில் என்ன பிரயோஜனம்? முதலாவது, கிறிஸ்து பிறப்பின் அர்த்தம் நம் வாழ்வில் உயிர் பெற்றிருக்கவேண்டும். நான் பாவி, என் பாவங்களைத் தம்மேல் சுமந்து, என்னைச் சுற்றியிருந்த பாவக்கட்டிலிருந்து கிறிஸ்து என்னை மீட்டுவிட்டார் என்றதான அந்த மகத்தான விடுதலையின் நிச்சயம் முதலில் எனக்கு வேண்டும். மீட்கப்படாத ஒருவனால் அந்த மீட்பின் மகிமையை உணரவும் முடியாது; மீட்பின் செய்தியைச் சொல்லவும் முடியாது. கிறிஸ்துவின் அன்பை அறியாதவர்கள் மத்தியில் அவரது பிறப்பின் மகத்துவத்தை கொண்டுசெல்ல வேண்டுமானால், அவரது பிள்ளை என்ற நிச்சயத்தை நான் முதலில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).

ஜெபம்: அன்பின் பிதாவே, உமது பிள்ளையாகிய எனக்கு மறுபடியும் பிறந்த அனுபவத்தையும் அதின் நிச்சயத்தையும் புதுப்பித்து மீண்டும் உறுதிப்படுத்தியருளும். ஆமென்.

சத்தியவசனம்