Daily Archives: December 10, 2017

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 10 ஞாயிறு

அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக சமாதானத்தை சுவிசேஷமாய் எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்கும் ஜெபத்தோடே ஒவ்வொருவரும் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

வாழ்வை மாற்றும் வார்த்தை

தியானம்: 2017 டிசம்பர் 10 ஞாயிறு; வேத வாசிப்பு: யோவான் 4:8-26

“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”
(யோவான் 4:14).

‘சிவப்பு இந்தியர்’ என்று சொல்லப்படும் ஒரு இன மக்கள் ஒரு காலத்தில் மனிதர்களைப் பிடித்து கொன்று உண்ணுபவர்களாக இருந்தனர். அக்காலகட்டத்தில் ஒரு மனிதன் அவர்கள் இருந்த பகுதியில் வந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு சிவப்பு இந்தியன் வேதாகமத்தைப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, ஏளனமாக, “எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் இருக்கும்போது இந்தக் கறுப்புப் புத்தகத்தை ஏன் வாசிக்கிறாய்” என்று கேட்டான். அதற்கு அந்தச் சிவப்பு இந்தியன், “இந்தக் கறுப்புப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருப்பதினாலேயே இன்று நீ என் எதிரே உயிரோடே நின்று பேசிக்கொண்டிருக்கிறாய்” என்றானாம். தேவனும், அவருடைய வார்த்தைகளுமே மனித வாழ்வுகளை மாற்ற வல்லமையுள்ளவைகள்.

சமாரியப் பெண் உலகப்பிரகாரமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த ஒருத்தி. அவளைக் கிணற்றடியில் சந்தித்த இயேசு, அவளது கடந்தகால வாழ்வைக் குறித்து சொல்லி, அவளுக்கு ஜீவதண்ணீரை தருவதாக வாக்குப்பண்ணினார். இயேசு அவளோடு சம்பாஷித்ததில் அவள் தொடப்பட்டவளாய் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் கிறிஸ்துதானோ” என்றாள். ஆண்டவருடைய பேச்சு, அவர் சம்பாஷித்தவிதம் அந்த ஸ்திரீயின் வாழ்வை மாற்றியது. கிறிஸ்துவைப்பற்றிய நற்சுவிசேஷத்தை அவள் ஊருக்குள்ளே கொண்டு சென்ற பெண்ணாகவும் அமைந்துவிட்டாள்.

வாழ்வை மாற்றத்தக்க வல்லமைமிக்க தேவவார்த்தைகளை யார் யார் நேர மெடுத்துக் கிரமமாய் வாசித்து மனதில் பதித்துவைக்கிறார்களோ, அவர்களுக்கே அது அதிக பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. அன்று இயேசு அப்பெண்ணுடன் சம்பாஷிக்கும்போது அதைக் கேளாமல் அவள் அசட்டைபண்ணியிருந்தால் அவள் மீட்பைக் கண்டிருக்கமாட்டாள். அவளோ நின்று நேரங்கொடுத்துப் பேசினாள். அது போலவே நாமும் நின்று நேரங்கொடுத்துத் தேவவார்த்தைகளைத் தியானிக்கும்போது அது நமது வாழ்வையும் மாற்ற வல்லமையுள்ளதாக இருக்கிறது, இதை நமது வாழ்வில் அனுபவித்திருக்கிறோமா!

“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபிரெயர் 4:12).

ஜெபம்: அன்பின் தேவனே, வேதத்தை அனுதினமும் கிரமமாய் வாசிக்கவும்  தேவ வார்த்தை என்னில் தாக்கத்தை ஏற்படுத்தவும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்