Archive for December 19, 2017

வாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 19 செவ்வாய்

… என் கட்டளைகளின் படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே. (எசே.20:21)
வேதவாசிப்பு: யோனா. 1-4 | வெளிப்படுத்தல்.10

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 19 செவ்வாய்

சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், ராஜாசிங், சைலஸ் ஆகியோர் நல்ல ஆரோக்கியத்தோடு கர்த்தருடைய ஊழியத்தை செய்துவருவதற்கும் அவர்களது போக்குவரவுகளில் தேவபாதுகாப்பும் வழிநடத்துதலும் காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.

சொஸ்தமாக விரும்புகிறாயா?

தியானம்: 2017 டிசம்பர் 19 செவ்வாய்; வேத வாசிப்பு: யோவான் 5:1-15

“படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்” (யோவான் 5:6).

வியாதிப்பட்ட ஒரு வயோதிபத் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சீக்கிரத்தில் குணமாகவேண்டுமென்று பலர் ஜெபித்தார்கள். ஆனால், அவரோ தன்னைப் பார்க்க வந்தவர்களிடம், தான் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மரித்திடவேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்று சொன்னார். பின்னர் இரண்டு நாள் கழித்து அத்தாயார் அவர் விரும்பியபடியே மரித்துப்போனார்கள்.

முப்பத்தெட்டு வருஷங்களாக வியாதிகொண்டிருந்த ஒரு மனிதனைச் சந்தித்த இயேசு, “சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா” என்று கேட்கிறார். முப்பத்தெட்டு வருஷங்களாக இந்த வியாதியோடேயே வாழ்ந்து அதற்கு அவன் பழக்கப்பட்டிருந்திருக்கலாம். இப்படியே எஞ்சிய காலங்களையும் கடத்திவிடலாம் என்று நினைத்து அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படுத்திருந்தவனிடம், ‘சுகமாக விரும்புகிறாயா’ என்று கேட்டபோது, அவன் அதற்குப் பதிலளிக்காமல் பிறரை குற்றம் சொல்கிறான். ‘தண்ணீர் கலக்கப்படும்போது தன்னைக் குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை’ என்கிறான். இயேசுவோ, ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று கூறி அவனை விடுதலையாக்கிவிட்டார்.

எப்படி வாழுகிறோம் என்ற உணர்வின்றி, பழகிப்போன ஒரு வாழ்வை நாமும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அதைவிட்டு வெளியில் வர விரும்பாதவர்களாக, அதற்குள்ளேயே தொடர்ந்து வாழ விரும்பலாம். வாரந்தோறும் ஏதோ கடமைக்காக ஞாயிறு ஆராதனைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருக்கலாம். ஏன் போகிறோம்? என்ற உணர்வற்றவர்களாக இதனைச் செய்துகொண்டிருக்கலாம். அப்படி நாம் இருப்போமானால், “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா” என்று இன்று ஆண்டவர் நம்மிடமும் கேட்கிறார். நமது நிலையை நாம் உணரவேண்டும். சொஸ்தமாகுதல், அதாவது ஒரு விடுதலை நமக்கு வேண்டுமென்று நாம் உணர்ந்திட வேண்டும். நாம் உணர்வற்றவர்களாய் இருக்கும்போது தேவன் நம்மை விடுதலையாக்கமுடியாது. நாம் உணர்ந்து திருந்த எண்ணும்போதுதான் தேவனும் நம்மை விடுதலையாக்குவார். நமது வாழ்வின் எப்பகுதியில் இன்னமும் விடுதலை தேவை என்பதை நாமே ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து விடுவிக்கப்படவேண்டுமென்று வாஞ்சையுடன் இயேசுவை நாடுவோமாக. அந்த வாஞ்சை உள்ளத்தினின்று ஊற்றெடுக்கட்டும்.

“இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்” (ரோமர் 6:22).

ஜெபம்: தேவனே, நான் விடுதலையாக முடியாமல் தவிக்கின்ற காரியங்கள் உண்டு ஆண்டவரே! உம்மால் அதிலிருந்து என்னை விடுதலையாக்கி வெளியே கொண்டுவர முடியுமென்பதை விசுவாசிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்