வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 31 சனி

லேவி கோத்திரத்திற்கு .. கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி அவரே அவர்களுடைய சுதந்தரம். (யோசு.13:33)
வேதவாசிப்பு: யோசுவா.12,13 | லூக்கா.7:1-18

ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 31 சனி

“உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்” (யோபு 5:24) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நமது குறைவுகளை நீக்கி, நம்மை போஷித்து, நம்மேல் காட்டின அன் பிற்காக, தேவனுடைய சமாதானத்திற்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

இருளுக்குள் வெளிச்சம்!

தியானம்: 2018 மார்ச் 31 சனி; வேத வாசிப்பு: மத்தேயு 27:57-66, 28:1

“அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்” (மத்தேயு 27:61).

இருபத்தியொரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், யூதேயா எங்கும் அப்படியொரு நிசப்தம்! பிரதான ஆசாரியருக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் வெற்றிப் பெருமிதம்! இயேசுவின் சரீரம் களவாடப் படாதபடி கல்லறையை மூடி, கல்லுக்கு முத்திரையிட்டு, போர்வீரரைக் காவல் வைத்துவிட்ட நிம்மதி! ரோம அரசுக்கோ யூதரைத் திருப்திப்படுத்திவிட்டதாக எண்ணம். ஆனால், சில பெண்கள் மாத்திரம், விடியலுக்காகக் காத்திருந்தனர்.

இத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம் என்ன? நல்ல கடவுள், இந்த உலகத்தைப் படைத்து நல்லது என்று கண்டவர், தீமையையும் சேர்த்துப் படைத்தாரா? படைத்திருந்தால் அவர் நல்ல கடவுளாக இருக்கமுடியாது. அதே சமயம், நல்ல கடவுள் தமக்கு எதிரான தீமையையும், தமது கோபாக்கினை பற்றியெரியத்தக்கதான செயல்களையும் அனுமதிப்பாரா என்பதைக் கிரகிக்கத்தான் முடியுமா?

தேவன் மனிதனைத் தமது சாயலில் படைத்து, தமது சுதந்தரத்தையும் அவனுக்குள் வைத்தார். மனிதனோ இந்தச் சுதந்திரத்தையே தன் கையில் எடுத்து, தேவனுக்கு எதிராக கலகம் பண்ணி விழுந்தான். அதன்பின் நடந்தது யாவும் சரித்திரம். அதற்காகத் தேவன் தோற்றுப்போகவில்லை. மனிதனின் வீழ்ச்சியை தமது கரங்களில் எடுத்து, அதற்கூடாகவே தமது மகிமை விளங்கச் செயற்பட்டார். அன்று பார்வோன் கடினப்பட்டபோது, “நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” யாத்.14:4 என்று கர்த்தர் சொன்னதை இந்த இடத்தில் நாம் நினைவுகூரவேண்டும்.

தீமை வென்றது; இருளின் ஆதிக்கம் பலப்பட்டது; இதைத்தான் அன்று உலகம் கண்டது. ஆனால், இவை யாவும் தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கிறது என்பதையும், இதே தீமைக்குள்ளிருந்தும் இருளுக்குள்ளிருந்தும் தேவ மகிமை அதிகாலையில் வெளிப்படும் என்பதையும் அன்று ஒரு பிரதான ஆசாரியனும் அறிந்திருக்கவில்லை. ஒளியும் இருளும், நன்மையும் தீமையும், நமது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு அவசியம். தீமை இல்லாவிட்டால் நன்மையின் அரவணைப்பை உணர முடியாது. வெயிலின் தகிப்பு இல்லாவிட்டால் நிழ லின் அருமை புரியாது. ஆகவே, எல்லாம் கைவிட்டுப்போனதுபோல தெரிந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தையும் தேவன் ஆளுகை செய்கிறார் என்ற விசுவாசத்தில் தளர்ந்திடாமல் அமைதலாய் காத்திருப்போம். விடியல் உண்டு; தேவ மகிமை நமது வாழ்விலும் நிச்சயம் வெளிப்படும்.

“மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1கொரிந்தியர் 15:55).

ஜெபம்: உயிரோடு எழுந்த எங்கள் ஆண்டவரே, கைவிட்டுப்போனதுபோன்ற எங்களது எல்லா சந்தர்ப்பங்களிலும் நீர் எங்களை ஆளுகை செய்கிறீர் என்ற நம்பிக்கைக்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 30 வெள்ளி

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி. 5:21) என்ற வாக்குப்படி சர்வலோக பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகிய அவரை அறிந்துகொள்ளாத ஒவ்வொருவரும் ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் நாளாக இந்நாளின் ஆராதனை காணப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

சிலுவையில் வெற்றிசிறந்த தூய அன்பு

தியானம்: 2018 மார்ச் 30 வெள்ளி; வேத வாசிப்பு: தீத்து 3:1-7

“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்” (கொலோசெயர் 1:13).

சுழி அலைகளில் அகப்படுவது ஆபத்து என தெரியாதா? ஆனாலும், அகப்படுகிறோம். இருளின் இன்பங்கள் வாழ்வை இருட்டடிக்கும் என்று தெரியாதா? ஆனாலும், நாடி ஓடுகிறோம். இவற்றில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க முயலுகிறவன் தன்னையே இழக்கவும் நேரிடும். அப்படித் தன்னையே இழக்க முன்வருகிறவருக்குத் தேவை ஒன்றுதான், அதுதான் ‘அன்பு’.

இயேசுவை ரோமப் போர்வீரர் வதைத்தபோது, உலகமே இன்பம் என்றிருந்த நான் அங்கே நின்றிருந்தால் என்ன செய்திருப்பேன்? இயேசுவை சிலுவையில் அறைந்த போர்வீரனுக்கு ஒவ்வொரு ஆணிகளாக எடுத்துக்கொடுக்கும் பணியில் நான் நின்றிருந்தால் என் மனநிலை என்னவாயிருந்திருக்கும்? விலாவில் குத்திய ஈட்டியை நானே சுமந்துவந்து கொடுத்து, போர்வீரன் அந்த ஈட்டியால் குத்தியபோது, காயத்திலிருந்து சீறிப்பாய்ந்த இரத்தமும் தண்ணீரும் என் மீது பட்டுத்தெறித்திருக்குமானால் அது எனக்கு என்ன செய்தி சொல்லியிருக்கும்? “என் மகனே, மகளே, உனக்காக எனக்குள் சுரந்த அன்பு முழுவதையும் மிச்சமின்றித் தந்தேன்” என்ற சத்தம் என் காதில் கேட்டிருக்குமா?

புத்தியீனர், கீழ்ப்படியாதவர்கள், வழிதப்பி நடக்கிறவர்கள், இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்கள், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவிக்கிறவர்கள், பகைக்கப்பட்டவர்கள், ஒருவரையொருவர் பகைக்கிறவர்கள்… பவுல் எழுதிய இந்த வார்த்தைகளுக்கும் நமது வாழ்க்கை அனுபவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணுகிறோமா? இருக்கிறது; உண்மைத்துவத்துடன் நமது கடந்த காலங்களை ஆராய்ந்து பார்ப்போம். இது தான் சந்தோஷம் என்று நம்மைநாமே ஏமாற்றி நம்மை விழுங்கிப்போடும் இருளுக்குள்ளும், அலைகளிலும் அகப்பட்டு, அடிமைகளாகித் தவித்ததை மறக்கமுடியுமா? ஆனால் இன்று சூரியனின் ஒளிகூட மங்கிப்போனாலும் என்றும் மங்காத ஆச்சரியமான ஒளிக்குள் நாம் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். இதற்கு ஒரே காரணம் தேவன் நம்மீது கொண்டுள்ள “அன்பு”. அந்த அன்பு சிலுவையில் பிரசன்னமானதினால் இன்று நாம் புதிதாக்கப்பட்டிருக்கிறோம். மாத்திரமல்ல, நித்திய வாழ்வின் நிச்சயத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

இந்த மாசற்ற அன்பு மெய்யாகவே இன்று நம்மை நிறைத்திருக்கிறதா? என்னை என் இயேசு நேசித்து, இருளின் அதிகாரத்தினின்று மீட்டு, தமது சொந்தப் பிள்ளையாக்கினார் என்பதை ஒரு கணம் சிந்திப்போமானால், நமது வாழ்வில் பாய்ந்தோடும் அந்த “அன்பு” இன்று அநேகரைச் சந்திக்குமல்லவா!

“தேவன்… இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

ஜெபம்: பாவத்தினால் அடிமைப்பட்டு கிடந்;த எங்களை சிலுவையில் வெற்றிசிறந்த தூய அன்பினால் உமக்கு சொந்தப்பிள்ளையாக மாற்றினீரே, உமக்கே மகிமையையும் கனத்தையும் செலுத்துகிறோம் பிதாவே. ஆமென்.