ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 5 வியாழன்

“என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன் (எசேக்.20:11) இவ்வாக்குப்படியே கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிப்போம்.

அந்த ஒரு குறை

தியானம்: 2018 ஏப்ரல் 5 வியாழன்; வேத வாசிப்பு: மாற்கு 10:17-22

“…நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால்..” (மத்தேயு 19:21).

ஆண்டவரிடம் வந்தும், வந்தபடியே திரும்பிப்போன வாலிபனுடைய நிலைமை எவருக்கும் வரக்கூடாது. அவன் நல்ல நோக்கத்தோடுதான் வந்தான். நித்திய ஜீவனுக்காக முயற்சி எடுத்திருந்தான் என்பது அவனுடைய பதிலில் விளங்கியது. இயேசு குறிப்பாக, பிறரோடு கொண்டிருக்க வேண்டிய உறவின் அடிப்படையினாலான ஆறு கற்பனைகளை அவனுக்குச் சுட்டிக் காட்டினார். ஆனால், அவனோ அவை யாவையும் தன் சிறு வயதுமுதல் கடைப்பிடித்துவருவதாகக் கூறினான். ஆண்டவரோ, அவனைக் கூர்ந்து பார்த்தார். அவனில் அன்பு வைத்தார். அவனுக்குள் இருந்த ஒரு குறையைக் கண்டார். நித்திய ஜீவனுக்குப் போகும் வழியை அவனே அடைத்துவைத்திருப்பதை இயேசு விளக்கினார். அவன் செய்யவேண்டியதையும் அதன் பலனையும் விளக்கினார். அதன்பின் சிலுவையை எடுத்துக்கொண்டு தன்னைப் பின்பற்றும்படியும் கூறினார். ஆனால், தான் தேடி வந்ததற்கு வழி தெரிந்திருந்தும், தனக்கென்று இருந்ததை விட்டுக்கொடுக்க மனதில்லாததால் அவன் துக்கத்தோடே திரும்பிப்போய்விட்டான்.

பரலோக வாசத்தையும், தேவனோடு பொன்வீதியில் நித்தியமாய் நடப்பதையும் யார்தான் விரும்புவதில்லை! ஆனால், அதற்கான வழியை ஆண்டவர் கற்றுத் தந்திருந்தும் நாம் தடுமாறி நிற்பது ஏன்? அந்த வாலிபனுக்கு அவனுடைய செல்வம் தடையாயிருந்தது. நமக்கு இன்று எது தடையாக இருக்கிறது? அந்த “ஒரு குறை” – அதை விடுவதற்குத்தான் நமக்கும் முடிவதில்லை. தேவனிடத்தில் அன்புகூரு; உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரு. இதுதான் கற்பனை. கண்களால் காணமுடியாத தேவனில் அன்புகூருகின்ற முன்பகுதியில் பிரச்சனையில்லை. பின்பகுதிதான் கடினம். ஆனால் அந்த பின்பகுதிதான் முன்பகுதியின் பிரதிபலிப்பு என்பதையும், முன்பகுதியில் சரியாயிருப்பவன்தான் பின்பகுதியில் உண்மையாயிருப்பான் என்பதையும் நாம் உணருவதில்லை. தமக்கென்று எதையும் வைக்காமல் தம்மையே முழுமையாகக் கொடுத்த கிறிஸ்துவில்தான் நித்திய ஜீவன் உண்டு. எல்லாவற்றையும் இழந்த அவரே பூரண சற்குணர். அதில் பங்குகொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரும், தம்மை முழுதாக இழக்கத் தயாராய் இருக்கவேண்டும். அது நமக்கு முடிகிறதா?
இன்று நமக்குள் மறைந்திருக்கும் அந்த ஒரு குறையை இயேசு காண்கிறார். அன்புடன் அதைச் சுட்டிக்காட்டுகிறார். அதனைச் சரிசெய்துவிட்டு, நமது சிலுவையைச் சுமந்துகொண்டு செல்ல நாம் ஆயத்தமா? பூரண சற்குணத்தின் அந்த நிறைவு நமக்கு வேண்டாமா?

“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத்தேயு 5:48).

ஜெபம்: அன்பின் தேவனே, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள எனக்கிருக்கிற தடைகளை இன்று எனக்கு உணர்த்தினபடியால் உமக்கு நன்றி கூறுகிறேன். அத்தடைகளை என்னைவிட்டு அகற்றி உம்மைப் பின்பற்றி வர எனக்கு கிருபை தந்தருளும்.ஆமென்.