Archive for June 12, 2018

வாக்குத்தத்தம்: 2018 ஜுன் 12 செவ்வாய்

தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. (1நாளா.11:5)
வேதவாசிப்பு: 1நாளா.8,9 | யோவான்.16

ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 12 செவ்வாய்

நம்முடைய தேசத்தில் ஆங்காங்கு காணப்படும் அனைத்து வன்முறைகளும் தடுக்கப்படவும், தமிழ்நாட்டிலும் வடமாநிலங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இழைக்கப்படும் தீமைகள் நிறுத்தப்படவும், தேசத்தலைவர்களும், உயர்அதிகாரிகளும் கர்த்தரின் வல்லமையை அறிந்துகொள்வதற்கும் ஜெபிப்போம்.

யாருக்கு முதலிடம்?

தியானம்: 2018 ஜுன் 12 செவ்வாய்; வேத வாசிப்பு: நெகேமியா 8:1-5

ஜனங்கள் ….கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள் (நெகே.8:1).

நமது வாழ்வுக்கு வீடு, பாதுகாப்புச் சுவர், ஆலயம் என எல்லாமே அவசியம். ஆனால், இவை மட்டும் இருந்தால் போதாது. நமது வாழ்வுக்கு இன்னும் ஒரு விஷயமும் முக்கியமானது. நமது தேவனுடனான உறவு நமக்கு இல்லையானால், எது இருந்தும் பிரயோஜனமில்லை. அழிவுகள் நேரிடும்போது தேவனை நோக்கி முறையிடுகின்ற நாம், வீடு வாசல்கள் திருத்தப்பட்ட பின்பும் அவரை நோக்குகிறோமா என்பது ஒரு கேள்வி. ஆனால், அன்று யூத ஜனங்கள் எதனைத் தேடினார்கள் என்பதையே இன்று வாசித்தோம்.

எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டாயிற்று. இடிக்கப்பட்டிருந்த அதன் அலங்கமும், சுட்டெரிக்கப்பட்டிருந்த அதன் வாசல்களும் பல எதிர்ப்பின் மத்தியிலும், நெகேமியாவின் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்டாயிற்று. ஜனங்களின் தேவை சந்திக்கப்பட்டாயிற்று. ஆனால், அதற்காக அவர்கள் அமைதியாக இருக்கவில்லை. அவர்கள் தேவ வார்த்தையைத் தேடினார்கள். நெகேமியா 8ம் அதிகாரத்தில்தான் எஸ்றா வருகிறார். எஸ்றாவும் நெகேமியாவும் சமகாலத்தவர்களாயினும், பாபிலோனிலிருந்து நெகேமியா எருசலேமுக்கு வருவதற்கு 13 ஆண்டுகள் முன்பதாகவே எஸ்றா எருசலேமுக்கு வந்திருந்தார். இந்த இடத்தில் எஸ்றாவின் பிரவேசம் முக்கிய ஒரு விஷயத்தை விளக்குகிறது. நெகேமியா அலங்கத்தைக் கட்டி ஜனத்தின் தேவையைப் பூர்த்தி செய்தார். எஸ்றாவோ அவர்களுடைய ஆவிக்குரிய தேவையைக் கவனித்தார். நெகேமியா ஒரு கவர்னராக நின்று ஜனத்தின் தேவைகளைக் கவனிக்க, எஸ்றா வேதபாரகனாக நின்று அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வைக் கவனித்தார். புறதேவை பூர்த்தியானதும் மக்கள் அமைதலடையவில்லை. அவர்கள் எஸ்றாவிடம் மோசே யின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரும்படி கேட்டனர். அவன் அதை வாசித்தபோது கவனமாகக் கேட்டார்கள். மாத்திரமல்ல, “அவன் அதைத் திறந்தபோது ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்.” அவர்கள் தேவவார்த்தையை எவ்வளவாகக் கனப்படுத்தினார்கள்; முதலிடம் கொடுத்தார்கள்.

இன்று நாம் தேவனுடைய வார்த்தைக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறோம்? நமது தேவைகள் சந்திக்கப்பட்டால் போதும் என்றிருக்கிறோமா? அது தவறு. அன்று, முதல் ஐந்து ஆகமங்கள் மாத்திரமே மோசேயின் வேத புத்தகமாக இருந்தது. ஜனங்கள் அதற்காக அதிகம் வாஞ்சித்தார்கள். இன்று முழு வேதாகமமும் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அதனால், அதிக சிரத்தை நாம் எடுப்பதில்லை. அதை வாசிக்கும்போது பயபக்தியுடன் படிப்போமானால் தினமும் தேவன் நம்முடன் பேசுவதை நாம் உணரலாம். இன்று நாம் இந்த வேதப் புத்தகத்துக்கு கொடுத்திருக்கும் இடம் என்ன?

“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கின்ற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்” (சங்.119:1).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது வேதாகமத்தைக் கனப்படுத்தவும் அதற்கு  முதலிடம் தரவும் நான் கற்றுக்கொள்ள உதவியருளும். ஆமென்.

சத்தியவசனம்