ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 22 வெள்ளி

“நீங்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்கி … அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்.28:19,20) என்ற ஆண்டவரின் கட்டளைகிணங்க தேசத்தின் பல பாகங்களுக்கும் புறப்பட்டுச் சென்றுள்ள மிஷனெரிகளுக்காகவும், அனைத்து மிஷனெரி இயக்கங்களுக்காகவும், ஸ்தாபனத் தலைவர்களுக்காகவும், ஊழியங்களைத் தாங்கும் விசுவாசக் குடும்பத்தினர் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.

செய்தி கேட்கிறதா?

தியானம்: 2018 ஜுன் 22 வெள்ளி; வேத வாசிப்பு: யோனா 3:4-10

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்க ளென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்( யோபு 3:10).
இன்று உலகில் எங்கிருந்தாலும் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்;ட்டர்நெட் மற்றும் பலவித நவீன ஊடகங்களுக்கூடாக மறுமுனையில் நடைபெறும் சம்பவங்களை, செய்திகளை ஓரிரு நிமிடங்களில் அறிந்துகொள்கி றோம். உலக செய்திகளை மட்டுமல்ல, நமது உறவுகளைக்குறித்தும் அறிந்து கொள்கிறோம். பல்வேறு ஊடகங்களுக்கூடாக தேவ செய்தியையும் செவிமடுக்கி றோம். ஆனால் அதற்கு நாம் என்ன பதிலுரை கொடுக்கிறோம்?
யோனாவின் காலத்தில் சுடச்சுடச் செய்திகளைக் கேட்க வசதிகள் இருக்க வில்லை. நினிவே மக்களுக்கு வரவிருந்த அழிவைக்குறித்து அறிவிக்க யோனா மூன்றுநாட்கள் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, யோனா திரும்பவும் நினிவேக்குள்ளே ஒருநாள் பிரயாணம் செய்து சுற்றித்திரிந்து தேவனு டைய செய்தியை மக்களுக்குத் தெரிவித்தான். இதனைக் கேட்ட நினிவே மக்கள் உடனடியாகவே தேவனை விசுவாசித்து உபவாசத்தோடு ஜெபித்தார்கள். இச்செய்தியைக் கேட்ட ராஜாவும் சாம்பலில் உட்கார்ந்ததுமன்றி, “யாருக்குத் தெரியும்? நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டுத் தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார்” என்று கூறி, ஜனங்கள், மிருக ஜீவன்கள் அனைத்தும் புசியாமல் குடியாமல் உபவாசிக்க வேண்டுமென கட்டளைகொடுத்தான். ஆம், நினிவே பட்டணத்தார், ராஜா உட்பட, செய்தியைக் கேட்கமுடியாத மிருக ஜீவன்கள்கூட தேவ செய்திக்குச் செவி கொடுத்து, அதை விசுவாசித்து மனந்திரும்பியதால், கர்த்தரே தாம் செய்ய இருந்ததைக் குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார் என்று வாசிக்கிறோம். நினிவே பிழைத்துக்கொண்டது.
அன்று நினிவே மக்கள் தேவ செய்தியைக் கேட்ட மாத்திரமே மனம் திரும்பி னார்கள். ஆனால் இன்று நமது காரியம் என்ன? ஒரே நாளில் எத்தனை தடவை கள், எத்தனை வழிகளுக்கூடாகத் தேவ செய்திகளைக் கேட்கிறோம்! அந்தச் செய்திகளுக்கு நாம் செவிகொடுக்கிறோமா? அல்லது, செய்திகள் பழகிவிட்ட தால் கரிசனையின்றி இருக்கிறோமா? அல்லது செவிகொடுத்து, அந்நாளில்; தேவ வழிநடத்துதலைப் பெற்று, நமது வாழ்க்கையைச் சரிசெய்கிறோமா? வெளிப்படுத் தல் விசேஷத்தில் கர்த்தர், ஏழு சபைகளுக்கு அவரவர்களுக்கு ஏற்றபடி செய்தி வழங்கியபோது, “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று கூறிய தைக் காண்கிறோம். நமது செவிகள் மந்தமாகிவிட்டதா? அல்லது, நாம் கேட்டு நடக்கிறோமா? சிந்திப்போமாக.
“இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்…” (மத்தேயு 17:5).
ஜெபம்: இரக்கமுள்ள தேவனே, அன்று நினிவே மக்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு மனந்திரும்பினதுபோல நானும் உமது வார்த்தையைக் கேட்கும் வேளையில் ஏனோதானோ என்று இராமல் மனந்திரும்ப உதவியருளும். ஆமென்.