வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 5 வியாழன்

அப்பொழுது சபைகள் .. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. (அப்.9:31)
வேதவாசிப்பு: 2நாளா.31,32 | அப்போ.9:26-43

ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 5 வியாழன்

இவர்கள் வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான்17:20) நமக்காக வேண்டுதல் செய்கிற பரிசுத்தாவியானவர்தாமே திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கவும், புறஇனமக்களும் கேட்டு இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

நான் யார்?

தியானம்: 2018 ஜூலை 5 வியாழன்; வேத வாசிப்பு: ஓசியா 14:1-2

“இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு” (ஒசி. 14:1).

பிறசமயத்தாரையும், புறவினத்தாரையும் மாத்திரமல்ல, பிறரது பிள்ளைகளை யும் குறைசொல்ல நாம் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட நாமும், நமது பிள்ளைகளும் மெய்த்தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்கே சாட்சிகளாக ஜீவிக்கிறோமா என்ற கேள்வியை நாமே நம்மிடம் கேட்டுப் பார்ப்போமாக.

தம்மைவிட்டுத் தூரம்போன தமது மக்கள்மீது தேவன் கொண்டிருக்கும் அன்பையும் வாஞ்சையையும், அவர்களை மீண்டும் தம்முடன் சேர்த்துக்கொள்ள அவர் உண்மையும் இரக்கமுமுள்ளவராய் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தும் புத்தகமாக ஓசியாவின் தீர்க்கதரிசன புத்தகம் அமைந்துள்ளது. அன்று, மெய்யாகவே, அத்தீர்க்கதரிசன செய்தியானது இஸ்ரவேலருக்காகவே கூறப்பட்டது. இந்த இஸ்ரவேலர் யார்? ஒரே பதில், இவர்கள் தேவனால், தேவனுக்கென்று அழைப்புப் பெற்று, அவரையே உலகெங்கும் வெளிப்படுத்துகின்ற சாட்சிகளாக வாழ வேண்டிய மேன்மையான பொறுப்பைப் பெற்றுக்கொண்ட ஜனம். சமஸ்த இஸ்ர வேலையும் ஆண்ட கடைசி ராஜாவாகிய சாலொமோனின் பாவத்தால், அவனுடைய குமாரனுடைய காலத்திலே, அந்த ராஜ்யம் வட ராஜ்யம் தென் ராஜ்யமாக இரண்டாக உடைந்தது. இதில் வட ராஜ்யமே இஸ்ரவேல். (மற்றது யூதா.) இவர்களும், இவர்களை ஆண்ட ராஜாக்களும் அடிக்கடி தேவனைவிட்டு விலகிப் போனதினால், தமது ஜனத்துடன் பேசுவதற்காக தேவன் தீர்க்கர்களை எழுப்பினார். அவர்கள் மூலமாக தம்மிடம் திரும்பும்படி தமது மக்களுக்கு அறைகூவல் விட்டார். அந்தவகையில் ஓசியா, உசியா, யோதாம் ஆகாஸ், எசேக்கியா என்பவர்களுடன், முக்கியமாக 2ம் யெரொபெயாம் காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.

நாம் யார்? தேவனுடைய பிள்ளைகள் அல்லவா? நம்மிடமுள்ள வேதாகமம் என்பது என்ன? ஏதேனிலே மனிதன் தேவனைவிட்டுப் பிரிந்தது முதற்கொண்டு தேவன் மனிதன்மீது கொண்டிருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு யாவையும் வெளிப்படுத்துகின்ற தீர்க்கதரிசன வாக்கியங்கள் அடங்கின தீர்க்கதரிசனப் புத்தகம் அல்லவா? நீதி, பரிசுத்தம், அன்பு, மன்னிப்பு, நித்திய வாழ்வு என்று தேவன் நமக்கு எதையாவது மறைத்துவைத்தாரா? அப்படியிருக்க இன்னுமொரு இஸ்ரவேல் சந்ததியாக நாம் இருப்பது நல்லதல்ல. நமது வாழ்வின் எப்பகுதியிலாவது தேவனைத் துக்கப்படுத்தியிருந்தால், மனந்திரும்புவோமாக.

“ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்” (வெளி.22:19).

ஜெபம்: ஆண்டவரே, நீர் எங்களுக்குக் கொடுத்த பொறுப்பில் உண்மைத்துவமாய் நடப்பதற்கும், எங்களது வாழ்வில் உம்மைத் துக்கப்படுத்தாமல் வாழ உமதருளைத் தாரும். ஆமென்.