Archive for September 8, 2018

வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 8 சனி

மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். (1கொரி.15:33)
வேதவாசிப்பு: நீதி. 17-19 | 1 கொரி.15:35-58

ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 8 சனி

… கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (1இரா.4:44) தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 23 நபர்களது கைகளின் பிரயாசங்களில் நல்ல வளர்ச்சியையும் பெருக்கத்தையும் கர்த்தர் கட்டளையிட்டு வரவர விருத்தியடையவும் அநேகருக்கு ஆசீர்வாதமாக திகழவும் ஜெபிப்போம்.

அன்பும் கிரியையும்

தியானம்: 2018 செப்டம்பர் 8 சனி; வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 13:1-13

“…அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்” (கலா.5:6).

“அன்பு” இது அளவிடப்படமுடியாத ஒன்று. வல்லமைமிக்க இந்த அன்பு நமக்குள் இருக்குமானால், அதனை நமக்குள் ஊற்றிய ஆண்டவரையும், பிறரையும் நாம் நேசித்து வாழுவோம்.

விசுவாசமும் கிரியையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படவேண்டும் என்றுணர்ந்த நாம், அன்புக்கு எந்த இடத்தைக் கொடுக்கிறோம்? அன்பினாலே தான், விசுவாசம் கிரியையை நடப்பிக்கவேண்டும் என்று பவுல் மேற்காணும் வசனத்திலே தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். உயிர்த்த ஆண்டவர் பேதுருவைப் பார்த்து, “…இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். பேதுருவும், “நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். இரண்டாந்தரமும் அதே கேள்வியைக் கேட்கவும், பேதுரு பதிலளிக்கவும், மூன்றாந்தரமும், “நீ என்னை நேசிக்கிறாயா” என்று திரும்பவும் இயேசு கேட்டபோது, உண்மையாகவே பேதுரு மனம் உடைந்திருப்பான். “நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்றான். அப்போது, கர்த்தர், “என் ஆடுகளை மேய்ப்பாயாக” (யோவா 21:17) என்றார். பேதுருவுக்குள் இருந்த அன்பை அவனுக்கு உணர்த்தி உறுதிப்படுத்திய பின்னரே அவனிடம் ஊழியத்தைக் கையளிக்கிறார். “கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது” என்றால், “அன்பு எனக்கிராவிட்டால், பிரயோஜனம் ஒன்றுமில்லை” (1கொரி 13:3) என்கிறார் பவுல். ஆம்! அன்பு, விசுவாசம், கிரியை மூன்றுமே நம்மில்; இணைந்து செயலாற்றுமாயின் நமது விசுவாச ஓட்டத்தைத் திடமாக ஓடலாம்.

அப்படியானால் தேவ அன்பினாலே நாம் நிறைக்கப்படுவது எப்படி? “என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள்” (யோவா.15:9) என்று இயேசு அழைக்கிறார். இதுதான் ஒரே வழி! ஆக, “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” (1யோவான் 2:6) என்று எழுதப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கிறிஸ்து எப்படி நடந்தார்? அவர் பாரபட்சமின்றி எல்லோரையும் நேசித்தார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா.13:34) என்றார். ஆக, விசுவாசம், அதனுடன் இணைந்த கிரியை, இவை இரண்டும் அன்பில் அஸ்திபாரமிடப்பட வேண்டும் என்பது சத்தியம். அதேசமயம், என்னிடத்தில் விசுவாசம், அன்பு இருக்கிறது என்று சொல்லுகிறவன் அன்பினாலான கிரியைகளை நடப்பிக்காமல் இருக்கமாட்டான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்” (1யோ. 2:5).

ஜெபம்: அன்பு நிறைந்த என் ஆண்டவரே, மனஸ்தாபங்களைக் கலைந்து பிறரிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு பாராட்ட எனக்கு கிருபை அருளும். ஆமென்.

சத்தியவசனம்