ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 6 செவ்வாய்

நீரே என்னை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் … நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர் (சங்கீதம்.22:9,10) இவ்வாக்கைப் போலவே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளுக்கு கர்த்தர் இரங்கவும், பிறக்கப்போகும் சந்ததி கர்த்தருடைய பிள்ளைகளாக வளர்க்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.

தேவ கோபாக்கினை

தியானம்: 2018 நவம்பர் 6 செவ்வாய்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 6:1-21

“இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத் தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி..,” (1சாமு.6:20).

சிலரது நடக்கை செய்கை எல்லாமே கேள்விக்குரியதாகவே இருக்கும். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணவும் தோன்றும். ஆனால் அவர்களோடு பேசும்போது, இவர்களைப்போல பரிசுத்தவான்களைக் காணமுடியாது என்பதுபோல தேவனைப் பற்றியே பேசுவர். ‘இப்படிப் பேசும் இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்’ என்று வியக்கத் தோன்றும். இதற்கெல்லாம், இன்று அப்பப்போ தேவன் நியாயத்தீர்ப்புக் கொடுப்பதில்லை; அத்துடன் தேவ கோபாக்கினைக்கு நாம் விலக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்ற துணிவுதான் காரணம் எனலாம். எத்தனை நாட்களுக்கு நாம் இப்படியாக நம்மைநாமே ஏமாற்றி வாழப் போகிறோம்.

தேவனுடைய பெட்டி தம்மிடம் இருந்தால் ஆபத்து; அதை அனுப்பி வைப்பதே சிறந்தது என்றும், அதைச் சும்மா அனுப்பாமல் குற்ற நிவாரண பலியாக சொரூபங்களைச் செய்துதான் அனுப்பவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செயற்பட்டாலும், கர்த்தருடைய பெட்டி அங்கிருந்து அகலும்வரைக்கும் அந்த மக்கள் வேதனைகளை அனுபவித்தார்கள். கர்த்தருடைய பெட்டி எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் வேதனைதான். கர்த்தருடைய பெட்டிக்குள் என்ன இருக்கிறதென்று பார்த்தபடியினால், அன்று 50,070 பேர் செத்தனர். அந்தளவுக்கு அதன் பரிசுத்தம், மகிமை மகா மேன்மையாயிருந்தது! தேவமகிமைக்குமுன்னே நிற்பதற்கு எவருக்குமே துணிவில்லாமற் போனது. அவ்வளவுக்கு பயம் அவர்களை கவ்விக்கொண்டது. அந்தளவு பயத்தோடும் நடுக்கத்தோடும் அன்று மக்கள் வாழ்ந்தனர். கர்த்தருடைய பெட்டியை வைத்திருப்பது ஆபத்தானது, அதை எப்படியாவது தங்களைவிட்டு அகற்றிவிடவேண்டும் என்று பிரயாசப்பட்டனர். தேவ கோபாக்கினைக்கு மனிதர் அவ்வளவாய் பயப்பட்டு நடந்துகொண்ட காலம் அன்று இருந்தது.

அன்பானவர்களே, இன்று நம்மிடையே தேவபயம் எங்கே? மனுஷராகிய நாம், மனுஷருக்குத்தான் பயந்து நடக்கிறோம். கர்த்தர் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணமே நம்மிடையே அற்றுப்போயிற்று. கர்த்தரை மறந்து வாழுகிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே, நம்மை தேவ சமுகத்தில் ஆராய்ந்துப் பார்ப்போம். நாம் யாருக்குப் பயந்து வாழ்ந்து கொண்டி ருக்கிறோம்? எந்தவொரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், கர்த்தரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாய்ச் செய்வோமாக. கர்த்தரின் வார்த்தைக்கு நமது வாழ்வில் முன்னிடத்தைக் கொடுத்துவிடுவோமாக. ஏனென்றால், அவர் பரிசுத்தர்!

“தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்” (நீதி.8:13).

ஜெபம்: பயபக்திக்குரிய தேவனே, நீர் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் என்ற உணர்வோடு வாழவும் உமக்கு பயப்படும் பயத்தைக் கற்றுக்கொள்ளவும் எனக்கு உதவியருளும். ஆமென்.