ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 7 வெள்ளி

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் (தானி.2:21) இந்திய தேசத்துக்கு கர்த்தர் மனமிரங்கவும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஆட்சி நிறுவப்படுவதற்கும் நீதியும் நேர்மையுமாய் தேர்தல் நடைபெறுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

இருளிலும் நம்முடன் இருக்கிறவர்

தியானம்: 2018 டிசம்பர் 7 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 50:1-11

உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன் (ஏசா. 50:10).

1998ம் ஆண்டு முற்பகுதியில், இது ஒருவரின் சாட்சி. ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவர் தான் இருந்த இடத்தைவிட்டே ஓடிப்போக எண்ணி, அதுவே சரியானது என்றும் தீர்மானித்தார். அன்று காலையில், அவர் வாசிக்கவேண்டிய வேதபகுதி ஏசாயா 50ம் அதிகாரத்தை வழக்கம்போல ஜெபித்துவிட்டு வாசித்தார். பின்பு ஜெபிப்பதற்கு முழங்காற்படியிட்டார். திரும்பவும் அந்த வேதப்பகுதியை வாசிக்கும்படி உணர்த்தப்பட்டு, முழங்காலில் நின்றபடியே திரும்ப வாசித்தார். கண்கள் இந்த 10ம் வசனத்திலே நின்றது. “இல்லை, ஆண்டவரே, இருட்டிலும் உம்மோடு இருக்க நான் தயார். ஆனால் இந்த இருட்டு பொல்லாதது” என்று ஜெபித்தார். தொடர்ந்து படிக்கத் தூண்டப்பட்டு, படித்தார். “இதோ, நெருப்பைக் கொளுத்தி அக்கினிப் பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும் உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜூவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்” என்றிருந்தது. உடனேயே, “ஆண்டவரே, நீரே என் வெளிச்சம். அதுபோதும்;” என்று கண்ணீர் விட்டு அழுதார். நம்புங்கள், ஆறு வருடங்களாக எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்தார். ஆறாம் வருடத்தில் ஒரு பெரிய ஆச்சரியமான அற்புதமான சொல்லிமுடியாத மாற்றம் ஏற்பட்டது. அல்லேலூயா!

அன்று இஸ்ரவேலும் தங்கள் தேவனைவிட்டு, வேறு விடுதலைகளை நாடி ஓடினார்கள். போன இடமெல்லாம் வேதனைதான் மிஞ்சியிருந்தது. மெய்யான ஒளி தேவன் ஒருவரே. அந்த மகிமையான வெளிச்சத்திற்குக் காத்திருக்கிறவர்கள் ஒருபோதும் இருட்டிலே மாண்டுபோக முடியாது. கர்த்தரே மனுக்குலத்தின் விடுதலையை யூதாவின் சந்ததியிலே நிர்ணயித்துவிட்டிருந்தார். அப்படியே இயேசு ஏற்ற காலத்திலே மெய்யான நிலையான வெளிச்சமாக உதித்தார். இப்படியிருக்க, இன்றும் போலி வெளிச்சங்களை நமக்கு நாமே உருவாக்கி, தனி நபராக, குடும்பமாக, சபையாக எதற்காக நாம் தத்தளிக்கவேண்டும். தேவனை நம்புவோம். இருளாயிருந்தாலும் அவரே நம்முடன் இருக்கிறவர். அவருடைய வெளிச்சம் அதிகாலை வெளிச்சத்திலும் பதினாயிரம் மடங்கு பிரகாசமானது. இருளுக்குள் இருக்கும் மானிடத்துக்காக உதித்த இயேசு இன்றும் நம்முடன் இருக்கிறார். அவருடைய நித்திய வெளிச்சம் பிரகாசிக்கும் நாள் வெகு சமீபம். உறுதியோடு காத்திருப்போம். எல்லாம் மாறும்.

“கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும், இருளில் இருக்கிறவர்களை நோக்கி வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும் …உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” (ஏசா. 49:9).

ஜெபம்: ஆண்டவரே, இருளிலேயும் நீர் எங்களுடனே இருக்கிறீர், உம்முடைய நாமத்தை நம்பி உம்மையே சார்ந்துகொள்கிறோம் பிதாவே. ஆமென்.