வாக்குத்தத்தம்: 2019 ஜனவரி 1 செவ்வாய்

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21)


தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் (சங். 18:28).
ஆதியாகமம் 1,2 | மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 1 செவ்வாய்

என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14).


“அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்” (ஏசா.2:3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, ஒவ்வொரு நாளிலும் அவர் பாதைகளில் நடந்திட தீர்மானித்து ஜெயமெடுக்க தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.

நீ பயப்படாதே!

தியானம்: 2019 ஜனவரி 1 செவ்வாய் | வேத வாசிப்பு: யோசுவா 1:3-9

‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசுவா 1:5).

வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக எமது இனிய
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இப்புத்தாண்டை மகிழ்ச்சியோடே வரவேற்கிறோமா? அல்லது, பயத்தோடே காலடி எடுத்து வைத்திருக்கிறோமா? பயம், மனித வாழ்க்கையிலே ஏற்படுகின்ற ஒரு சாதாரண அனுபவம். சில சந்தர்ப்பங்களில் “பயம்” நன்மை பயக்கும் அனுபவமாகிறது. இல்லாவிட்டால் பாதையின் நடுவிலே நடந்துசென்று விபத்துக்குள்ளாக நேரிடும் அல்லவா! இப்படியான ‘இயல்பான பயம்’ இல்லையென்றால் நாம் ஆபத்துக்குள்ளாகி உயிரைக்கூட இழக்கநேரிடும். அதேவேளை தேவையற்ற பயங்களும் உண்டு. நடக்காததை நடந்தது போல கற்பனை செய்வதும், இப்படி ஆகுமோ என்று நமக்கு நாமே அச்சத்தை ஏற்படுத்திக்கொள்வதுமான எதிர்மறையான பயங்களும் உண்டு. இவை நமக்கு நல்லதல்ல.

மோசே என்ற ஒரு பெரிய தலைவன் சுமந்துவந்த பொறுப்பு, இப்போது யோசுவாவின் மீது சுமத்தப்படுகிறது. இப்பெரிய சுமையால் யோசுவா பயப்பட்டிருந்தாலும் தவறில்லை. இலட்சக்கணக்கான ஜனத்தை, அதிலும் அடிக்கடி முறுமுறுக்கின்ற இந்த ஜனத்தை, கானானுக்கு நடத்திச்சென்று, தேசத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய ஒரு பெரிய பொறுப்பு யோசுவாவுக்கு வந்திருக்கிறது. இதனால் அவன் சோர்ந்து, பயந்துவிடாதபடி, “பலங்கொண்டு திடமனதாயிரு” என்றும், “நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றும் கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தினார்.

என்ன மனநிலையில் நாம் இப்புதிய ஆண்டைச் சந்தித்திருக்கிறோம்! யோசுவா ஒருவித பாரத்துடன் இருந்தான் என்றால், நாம் வேறுபட்ட மனப்பாரத்துடன் இருக்கலாம். இளவயதினர் புதிய வருடத்தைப் பயமின்றிச் சவாலாக எடுக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், வியாதிப்படுக்கையில் இருப்பவர்கள், இவர்களது உள்ளங்கள், “என்னவாகுமோ” என்று கலங்கக்கூடும். ஆனால், கர்த்தரோ, “நான் உன்னைக் கைவிடேன்” என்கிறார். பயம் என்பது என்ன? நமக்கு நேரிடுகின்ற அல்லது நேரிடலாம் என்று நாம் எண்ணுகின்ற பாதகமான காரியங்களைவிட, நமக்குள் இருக்கின்ற நம்பிக்கையின்மையே அதிக பயத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தை தன் தாயை நம்பி, அவள் மடியிலே அமைதியாய் தூங்குகிறது என்றால், ஒரு தாயிலும் மேலான அன்புகொண்ட ஒரு ஆண்டவர் நமக்கு இருக்கும்போது நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லையே! பயங்களைத் தூக்கி எறிவோம். நம்பிக்கையோடு கர்த்தருடைய கரத்தைப் பற்றிக்கொண்டு முன்செல்லுவோம்.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா.41:10).

ஜெபம்: அன்பின் தேவனே, இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணியைப்போல எங்களைப் பாதுகாக்கும் ஆண்டவர் எங்களுக்கு இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.

தோல்வியும் வெற்றியும்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோசுவா 8: 1-35
அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான் (யோசுவா 8:!0)

‘தோல்வி என்பது வெற்றிக்கான பின்வாசல்’ என்பது ஒரு மூதுரையாகும். இப்பழமொழியை ஆயி பட்டணம் பிடிபட்ட நிகழ்வின் மூலமாக வேதாகமம் அழகுடன் விளக்குகிறது. மூவாயிரம் இஸ்ரவேல் மக்கள் ஆயி பட்டணத்தை வெற்றிகொள்வதை ஒரு மனிதனின் பாவம் தடுத்தது. ஆகான் என்ற ஒரு மனிதன் தேவ மக்களின் வெற்றிக்குத் தடையாக இருந்தான். ஆனால் அப்பாவம் நீக்கப்பட்டபின் இஸ்ரவேலுக்கு வெற்றி எளிதானது.

ஆயிபட்டணத்தில் கண்ட தோல்வி யோசுவாவின் தலைமைக்கு மிகப்பெரிய அவமானமாகும். கானானியர் இஸ்ரவேலரின் இத்தோல்வியைக் கேள்விப்பட்டால் பூமியிலிருந்து தங்களது பெயர் நீக்கப்பட்டு போகும் என்று யோசுவா பயந்தார். ஆனால் அதைவிட யெகோவா தேவனுடைய மிகப்பெரிய நாமத்துக்கும் அத்தோல்வி இழுக்கைத் தரும் என்று பயந்தார். ஆனால் ஆயி பட்டணத்தின் மீதான இரண்டாவது போரில் வெற்றியை அளிப்பதாக தேவன் கொடுத்த வாக்கு அவருடைய பயத்தைக் குறைத்தது.

எரிகோ பட்டணத்தைப்போல் அல்லா மல் இப்போரின் திட்டம் வித்தியாசமானது. கர்த்தர் யோசுவாவை நோக்கி, யுத்த வீரர்களில் முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதுங்கியிருக்கச் சொன்னார். மீண்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதுங்கியிருக்கச் சொன்னார்.

இதற்கிடையில் ‘அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம் பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான்’ (யோசு வா 8:10). அதனைக் கண்ட ஆயியின் அரசனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம் பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான் (யோசுவா 8:14). இஸ்ரவேலர் ஏற்கனவே தோல்வியடைந்திருந்ததால் பின்வாங்கி ஓடியதுபோல யோசுவா ஆயிக்கு வடக்கே தனது போர்வீரர்களுடன் ஆயிக்கு வடக்கே தனது போர் வீரர்களுடன் பாசாங்கு செய்தார். ஆயியின் சேனையும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

இது நிகழ்ந்து கொண்டிருக்கும்பொழுது, பதுங்கியிருந்த இஸ்ரவேலர் காலியான ஆயியின் பட்டணத்திற்குள் நுழைந்து அதனை தீக்கொளுத்தினர். தங்கள் பட்டணம் புகைவதைக் கண்ட ஆயியின் அரசனும் அவனது வீரர்களும் தங்களுடைய தோல்வி தவிர்க்க முடியாதது எனக் கண்டுகொண்டனர். அவர்களது பட்டணம் இஸ்ரவேல் வீரர்களால் சூழப்பட்டிருந்தது. மறைந்திருந்த வீரர்களும் ஆயியை நோக்கி படையெடுத்தனர். யோசுவா தனது படைகளுடன் திரும்பித் தாக்க ஆரம்பித்தார். ஆயியின் அரசனையும் அவனது வீரர்களையும் பிடித்தார். ஆயியின் மக்கள் தோற்கடிக்கப்பட்டு யோசுவாவின் வெற்றி உறுதியானது.

யோசுவா ‘தோல்வியின் கல்லை வெற்றியின் படிக்கட்டாக’ மாற்றினார். இவ்வாறு செய்ததன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற தோல்வி அடைவதல்ல; ஆனால் விழும் ஒவ்வொரு முறையும் எழும்புவதேயாகும் என்ற முக்கியமான பாடத்தைப் படித்துக்கொண்டார். இவ்வுண்மையை அநேகர் தங்கள் வாழ்வில் நிரூபித்துள்ளனர்.

1832ம் ஆண்டு ஓர் இளம் அமெரிக்கர் சட்டசபைக்குப் போட்டியிட்டார். அதில் தோல்வியுற்றார். மீண்டும் 1834ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1847ம் ஆண்டு அமெரிக்கா ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் சபையில் ஒரு பருவத்துக்கு உழைத்தார். மீண்டும் அவர் தனது கட்சிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. அதிபர் சகேரி டெய்லா என்பவருக்காக பரப்புரை செய்தார். பொது நில அலுவலகத்தின் கமிஷனராக நியமனம் செய்யப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே தனது வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1854ல் மீண்டுமாக சட்ட மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் நப்ராஸ்காவின் புதிய எதிர்கட்சி செனட் தேர்தலில் தன்னை ஆதரிக்கும் என்ற எண்ணத்தில் அதனை ராஜினாமா செய்தார். ஆனால் அக்கட்சி அவரை ஆதரிக்கவில்லை. 1856ம் ஆண்டு ஐக்கிய நாட்டின் துணைஅதிபர் தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்டு தோல்வியடைந்தார். 1858ம் ஆண்டும் அவ்வாறே தோல்வியைத் தழுவினார். 1860ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிறந்த மகனாக பரிந்துரைக்கப்பட்டார். அந்த ஆண்டிலேயே அவர் ஐக்கிய நாட்டின் அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன். தனது கடந்தகால தவறுகள் எதிர்கால முயற்சியைப் பாதிக்காதவாறு எச்சரிக்கையாயிருந்தார்.

தேவனைவிட்டு விலகும் வெற்றியை விட மிக மோசமான தோல்வி எதுவும் கிடையாது. அதுபோல நமது வாழ்வில் தேவனுடைய வல்லமையை அறிந்து கொள்வதைவிட சிறப்பான வெற்றி எதுவுமில்லை. நாம் தோல்வியடைந்தால் அதனை வெட்கப்படாமல் அறிக்கையிட வேண்டும். இது ‘நேற்றைவிட இன்று நாம் புத்திசாலிகள்’ என்பதை அறிவிக்கும் ஒரு செயலாகும்.

அதிகாலைப் பாடல்:

என்றென்றும் ஜீவிப்போர், அதரிசனர்,
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்,
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வ வல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி – பிப்ரவரி 2019)

[1]
சத்தியவசன பத்திரிக்கைகள் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தி நம் ஆண்டவர்மேல் இன்னமும் அன்பு, நம்பிக்கை, விசுவாசம் வைக்க ஏதுவாகி நம் விசுவாச ஓட்டத்தை பொறுமையோடு ஓட கற்றுக் கொடுக்கிறது. தேவன்தாமே அபரிமிதமாக ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

Mrs.Emy Mohandoss, Chennai.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் கடந்த அக்டோபர் மாதத்தின் ஜெபத்தில் நிச்சயமாய் ஒருநாள் நிகழ இருக்கிற மரண வேளையை தைரியமாய் சந்திப்பதற்கு இன்று நான் வாழும்போதே அதற்கு ஆயத்தமாகவும் சாட்சியோடும் வாழ கிருபை தாரும் என்ற ஜெபம் ஆறுதலாக இருந்தது. வயோதிப காலத்திலும் தேவன் என்னோடு இருந்து குடும்பத்தை அற்புதமாய் நடத்துகிறார்.

Mr.G.Mohnaraj, K.K.Dt


[3]
Dear Brother, I am one of the Faith partner of your Ministry. The Message given in the Nambikkai Tv on Sundays are useful to me.

Mrs.N.Leela Nesabai, Neyyoor.


[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்து ஆவிக்குரிய சத்தியங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறோம். கர்த்தர் தம் ஐசுவரியத்தின்படி எல்லாத் தேவைகளையும் சந்திப்பார். இந்த மகத்துவமான ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Kamala Jeyaseelan, Tirunelveli.


[5]
இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் வாயிலாகவே பரிசுத்த வேதாகமத்தை கிரமமாக, முறைப்படி படிக்க அறிந்துகொண்டேன். கிரமமாக படிக்கும்போதே ஆண்டவர் நம்மோடு பேசுவதை, தொடுவதை உலகத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிப்பதை உணர முடிகிறது. ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டிய வேதபகுதிகள் மூலமாக ஆண்டவர் பேசுவதை உணர்கிறேன். அந்தந்த வேத பகுதிகளோடு உலகில் நடைபெறும் காரியங்களை ஒப்பிட்டால் நம் மூலம் அவர் செய்ய வேண்டுவதை, நம்மை நடத்துவதை காண முடிகிறது. ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.

Mr.Xavier, Chennai.

ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி – பிப்ரவரி 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஜெயம் கொடுக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் வருடத்திற்குள் நம்மை அழைத்துவந்த தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக. வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12). இந்த வாக்கு இவ்வூழியத்தை தியாகத்தோடும் ஜெபத்தோடும் தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்கள் குடும்பங்களில் நிறைவேற வாழ்த்தி ஜெபிக்கிறோம்.

டிசம்பர் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்த ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்கள் நேயர்களுக்கும், இக்கூட்டம் சிறப்புற நடைபெற பிரயாசப்பட்ட, உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பித் தருகிறோம். கடந்த ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். 2019 ஆம் ஆண்டின் வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் ஒலி/ஒளிப்பரப்பில் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

ஜனவரி மாதத்தில் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு ஏற்படும் பயங்கள் என்ன? அவற்றிலிருந்து விடுதலை பெறுவதை தியானித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வரை ஜெபத்தைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், பிப்ரவரி 15 முதல் தேவனுக்குக் கொடுப்பதை தியானித்து சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள்.

இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்க்கையில் தேவனை அதிகமாக கிட்டிச்சேர்க்க உதவியாயிருக்கும். கர்த்தர்தாமே புதிய வருடத்தில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக!

கே.ப.ஆபிரகாம்