ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 28 வியாழன்

கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார் (மாற்.5:19) இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி. அதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாகவும் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.


கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் (சங்.125:1,2)

அவமானத்தை ஏற்படுத்தலாமா!

தியானம்: 2019 பிப்ரவரி 28 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 19:1-5

“யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்” (யோவான் 19:3).

உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவமாவது செய்யாது இருப்பது நல்லது” என்று சொல்வதுண்டு. தேவனுக்குக் கொடுக்க வேண்டிய முதலிடத்தையும், நேரத்தையும், காணிக்கைகளையும், நம்மையும் கொடுக்கப் பின்நிற்கும் நாம், அவரது நாமத்துக்கு இழுக்கையும், அவமானத்தையும் தாராளமாகக் கொடுக்கிறோம் என்பதை உணரவில்லையானால் அது வேடிக்கைதான்ஆகவே, எமது நடத்தை, பேச்சு, வாழ்க்கை முறையாவையும் குறித்துச் சற்றே நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

அன்று போர்ச்சேவகர்கள் இயேசுவைப் பார்த்து, “யூதரின் ராஜாவே வாழ்க” என்று கேலி செய்ததுடன், அவர்கள் அவருக்குக் கொடுத்தது முட்கிரீடமும், அடியும், குட்டலும், துப்பலும், சிவப்பு அங்கியும்தான். இவைகள் அவரது சந்தோஷத்துக்காக அல்ல; மாறாக, அவரை அவமானப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டவை. போர்ச்சேவகர்கள் தங்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்று ஒருவேளை நாம் சிந்திக்கலாம். பிலாத்து, இயேசுவை வாரினால் அடிப்பிக்கவே போர்ச்சேவகர்களிடம் ஒப்படைத்தான். அதற்கும் மேலாக அவரை அவமானப்படுத்தியது, போர்ச்சேவகர் தாமாக விரும்பிச் செய்த செயல் என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு பெரிய வெள்ளியிலும், போர்ச்சேவகர், இயேசுவுக்கு செய்த அட்டூழியங்களை நினைத்து நாம் மனவேதனை அடைகிறோம். நம்மை மீட்கும்பொருட்டு தேவன் இத்தனை பாடுகளையும் சகித்துக்கொண்டாரே என்று வேதனைப்படுகிறோம். ஆனால், அன்று போர்ச்சேவகர்கள் இயேசுவுக்குச் செய்ததையே இன்று நாமும் பல தடவைகளிலும் நமது செய்கையாலும், நடத்தையாலும், வாழ்க்கை முறையாலும் செய்துகொண்டிருக்கிறோம் என்பது பொய்யல்ல. இதனை நாம் உணருவது கிடையாது. ஒருவன் குற்றத்திலே பிடிபட்டால், அவனைக் குறித்து பேசுவதைப் பார்க்கிலும், இன்னாரின் மகன் பிடிபட்டுவிட்டான் என்று தகப்பன் பெயரையும், குடும்பத்தையும்கூட இழுத்துப்பேசுவதில் நாம் கெட்டிக்காரர்கள். நாம் தேவனுக்குப் பிள்ளைகளானால் இது நமக்கும் பொருந்தும்.

அன்பானவர்களே, நாம் செய்யும் செயல்களும், நமது நடத்தையும், நமது பிதாவாகிய தேவனுக்கும், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படக் காரணரான கிறிஸ்துவின் நாமத்திற்கும் இழுக்குக் கொண்டுவரும் என்பதை நாம் சிந்திப்பதில்லை, ஏன்? நமது ஆண்டவருக்கு அவமானத்தைக் கொடுக்கப்போகிறோமா? அல்லது எதைக் கொடுக்கப் போகிறோம்? சிந்திப்போம்.

“என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக” (லேவி. 22:32).

ஜெபம்: அன்பின் பிதாவே, என்னுடைய வாக்கினாலும், செயலினாலும் தேவனுடைய நாமத்துக்கு அவமானத்தை, இழுக்கைக் கொண்டு வந்திருக்கிறேன். என்னை மன்னியும், பரிசுத்தமாய் வாழ கிருபைச்செய்யும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 27 புதன்

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (யோவா.14:40) தேவன்தாமே திருவுளம்பற்றி உரைத்த இவ்வாக்குப்படியே பற்பலத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் கர்த்தர் தம்முடைய அதிசய வழிநடத்துதலைத் தந்தருளவும், தேவன்மேல் உள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அவர்களில் பெருகவும் மன்றாடுவோம்.

காலத்தைக் கொடு!

தியானம்: 2019 பிப்ரவரி 27 புதன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 26:8-21

“என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங். 31:15).

நமது காலங்களும், நேரங்களும் தேவனுடைய கரத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று வெகு சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால், எந்தக் காரியமானாலும், உடனடியாக அது நடக்கவேண்டும், ஜெபத்திற்கு உடனடி பதில் வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம். தேவனுடைய நேரம், காலத்துக்காக நாம் காத்துக் கிடப்பதில்லை.

சவுலை ராஜமேன்மையில் இருந்து தள்ளி, அவ்விடத்துக்குத் தாவீதை அபிஷேகம் பண்ணியவர் கர்த்தர். ஆகவே கர்த்தர் எப்போது தன்னை சிங்காசனத்தின்மீது உட்காரச் செய்கிறாரோ அதுவரைக்கும் தாவீது பொறுமையோடே இருக்கத் தீர்மானித்துவிட்டார். தன்னைப் பார்க்கிலும் மேன்மையான காரியங்களை தாவீது செய்வதைக் கண்ட சவுல், பொறாமையினால் தாவீதைக்கொல்ல வகை தேடினான். சவுலின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்ட தாவீது, சவுலுக்குப் பயந்து குகைகளிலும், கெபிகளிலும் ஒளிந்து வாழ்ந்தும், பைத்தியக்காரனைப் போல வேஷம்போட்டு நடித்தும், உயிருக்கு அஞ்சி வாழநேர்ந்தும் கூட, சவுலை தள்ளிவிட்டு அவரது சிங்காசனத்தில் அமர தாவீது ஒருபோதும் முற்படவில்லை. தேவனுடைய வேளைக்காகவே தாவீது காத்திருந்தார்.

இன்றைய வாசிப்பிலே, சவுலைக் கொல்லக்கூடியதான சந்தர்ப்பம் வாய்த்தபோதும், தாவீதோடு இருந்த அபிசாய், தான் போய் சவுலைக் குத்திக் கொன்றுவிட அனுமதி கேட்டபோதும், “கர்த்தர் அபிஷேகம் பண்ணியவர் மேல் கைபோட்டு, குற்றமில்லாமல் இருப்பவன் யார்? நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணியவர் மீது போடாதபடிக்கு கர்த்தரே என்னைக் காக்கக்கடவர்” என்றுதான் தாவீது சொன்னார். தாவீது தானாக எதையாவது செய்து ராஜ மேன்மையை அடைய விரும்பாமல், தேவனுடைய கால நேரத்துக்காகப் பொறுமையோடே காத்திருந்தார். அந்த உணர்வோடுதான், 31ம் சங்கீதத்தில், “என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது” என்று தாவீது பாடி வைத்தாரோ!

கர்த்தருடைய சித்தத்திற்குக் காத்திருக்க நாம் ஆயத்தமா? நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும் வரைக்கும் பொறுமையோடு காத்திருக்க ஆயத்தமா? தேவன் தமது சித்தத்தை நம்மில் செயற்படுத்த, நமது விருப்பத்தை சித்தத்தை விட்டுக்கொடுக்க ஆயத்தமா? எல்லாம் என்னுடையவைகள், எனது விருப்பம், எனது நேரம் என்று சுயநலமாய்ச் சிந்திப்போமானால் கர்த்தருடைய காலத்திற்காக காத்திருக்க முடியாது. அது தீதான விளைவைக் கொண்டுவரும்.

“கர்த்தருக்குக் காத்திரு. அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங். 27:14).

ஜெபம்: ஆண்டவரே, என்னுடைய காலங்கள் உம்முடைய கரத்தில் இருக்கிறது; அதை விசுவாசிக்கிற நாங்கள் எங்கள் செயற்பாடுகளிலும் அதை வெளிப்படுத்துகிறவர்களாக காணப்படுவதற்கும் உமது கிருபை தாரும். ஆமென்.