Daily Archives: May 4, 2019

வாக்குத்தத்தம்: 2019 மே 4 சனி

ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன் (சங் 86:15).
2சாமுவேல் 5,6 | லூக்கா.23: 1-26

ஜெபக்குறிப்பு: 2019 மே 4 சனி

“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவா.11:40) தமிழன், நம்பிக்கை டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகளின் செய்திகளை கேட்கும் ஒவ்வொருவரும் வசனத்தைக் கேட்டு விசுவாசித்து தேவ மகிமையைக் காணவும், இந்நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புத் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.

மறுபடியும் பேதுரு

தியானம்: 2019 மே 4 சனி | வேத வாசிப்பு: யோவான் 21:1-14

“…அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, …கடலிலே குதித்தான்” (யோவான் 21:7).

ஒரே மாதிரியான சம்பவம் இருமுறையாக இரு வேறு சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நேரிட்டதுண்டா? இரண்டாம் முறை நேரிடும்போது, “முன்பும் இப்படியே நடந்தது. அதை மறந்துவிட்டேனே” என்போம். பேதுருவின் வாழ்க்கையே கடலில்தான். இயேசு பேதுருவை முதலில் சந்தித்ததும் கெனேசரேத்துக் கடற்கரையில்தான். அன்றும் அவன் இரா முழுவதும் பிரயாசப்பட்டு ஒன்றும் கிடைக்காமல், மனம் சோர்ந்து, வலைகளை அலசிக்கொண்டிருந்தான். இயேசு அவனுடைய படவில் ஏறி, ஆழத்திலே வலையைப் போடச்சொல்ல, அவனும் இயேசு சொன்னதால் போட, வலை கிழியத்தக்கதாக மீன்கள் அகப்பட்டது. அவன் நன்றி சொல்லி, மீன்களை விற்றுப் பணம் சம்பாதிக்கப் புறப்பட்டுச் செல்லாமல், இயேசுவின் பாதத்தில் விழுந்து (லூக். 5:8), “நான் பாவி. என்னைவிட்டு போய்விடும்” என்கிறான். அவனுக்குள் ஏற்பட்ட முதல் மாற்றம் வெளிப்பட்டது இப்படித்தான். பின்னர் இயேசுவைப் பின்பற்றிப்போனான்.

இப்போது ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடிருந்து பலவற்றைக் கண்டு, அனுபவித்த பேதுரு, தன் தலைவனை இழந்ததால் பயந்து போயிருந்தான். ஆகவே, மீன்பிடிக்கும்படி திரும்பவும் தன் பழைய வாழ்வுக்குத் திரும்புகிறான். மூன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்த அதே சம்பவம் இங்கே நடக்கிறது. உயிர்த்த இயேசு கரையிலே நிற்கிறார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை. சீஷர்கள் இரா முழுவதும் பிரயாசப்பட்டும் மீன் கிடைக்கவில்லை. இயேசுவுக்கு இது தெரிந்திருந்தும், அவர்களிடம் உணவு கேட்கிறார். எதுவும் இல்லை என்றதும், திரும்பவும் போய் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடும்படி இயேசு சொல்ல, அவர்களும் போட, திரளான மீன்களும் கிடைத்தது. அப்பொழுது யோவான் உணர்வடைந்து. “அவர் கர்த்தர்” என்று சொல்லக் கேட்டதும், பேதுரு ஓடிச்சென்று இயேசுவைப் பற்றிக்கொள்ளவில்லை. இங்கேயும் பேதுரு கடலில் குதிக்கிறதைக் காண்கிறோம்.

பேதுருவை முதலில் இயேசு எப்படி அழைத்தாரோ, இப்போது அதே மாதிரியான ஒரு நிகழ்வை அதே கலிலேயா கடலின் திபேரியா கரையோரத்தில் ஏற்படுத்தி பேதுருவுக்கு அவனது அழைப்பை நினைவுபடுத்துவதை நாம் சிந்திப்போமாக. அதன் பின்னர், சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு மரிக்கும்வரை பேதுரு ஆண்டவரை விட்டு விலகவேயில்லை. வாழ்வில் நாமும் தடுமாறி திசை மாறும்போது, ஆண்டவர் நமது ஆரம்பங்களை நமக்கும் நினைவுபடுத்துகிறார். ஆனால் நாம் உணர்வடையவேண்டுமே!

“கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்” (சங். 126:4).

ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நீர் எங்களை உணர்த்தும் நினைவுகளாலே எங்கள் வழிகளை சரி செய்துகொள்ள, உம்மில் நிலைத்திருக்க எங்களுக்கு உதவும். ஆமென்.

சத்தியவசனம்