ஜெபக்குறிப்பு: 2019 மே 16 வியாழன்

“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்.20:3) தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெய்வங்கள் அல்லாதவைகளை வணங்கி அந்த பட்டணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் சத்துருவின் கோட்டைகள் தகர்க்கப்படுவதற்கும், அங்குள்ள சுவிசேஷ ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தி மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.

பாவ சரீரம் ஒழிந்தது!

தியானம்: 2019 மே 16 வியாழன் | வேத வாசிப்பு: ரோமர் 6:6-11

“அப்படியே, நீங்களும் …. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்” (ரோமர் 6:11).

“அப்படியென்றால் எப்படி?” இக்கேள்விக்கு, சலவை இயந்திரத்தைத் திருத்த வந்தவர் பதிலளித்தார். “ஐயா உங்கள் சலவை இயந்திரத்தின் திருத்தல் வேலைகள் முடிந்துவிட்டது. ஆனால் இனி இந்தப் பழைய மோட்டாரை திரும்பவும் இதற்குப் பொருத்தமுடியாது. ஆகவே, புதிய மோட்டார் பொருத்தியிருக்கிறேன். இப்போது இது முன்பைவிட நேர்த்தியாகச் சலவை செய்யும்” என்றார்.

நாம் கிறிஸ்துவின் மரணத்துடன் இணைக்கப்பட்டு, பாவத்திற்கு மரித்த பிற்பாடு நமது பாவசரீரம் நமக்கு இராது! இது நமது மனித சரீரத்தைக் குறிக்கவில்லை; மாறாக, இது பாவத்திற்கு இசைந்துகொடுக்கும் நமது பாவ சுபாவம். இது ஆதாமிடமிருந்து வந்தது. நமது சரீரம் இயல்பாகப் பாவத்துடன் ஒத்துழைப்பதால் நமது சரீரம் தீயது என்று நாம் அதை வெறுக்கக்கூடாது. நம்மிலுள்ள பாவமே தீயது. “ஞானஸ்நானம் பெற்று எழுந்தபோது, ஒரு புதிய சரீரம் எனக்குக் கிடைக்கவில்லை; என் அதே சரீரம், கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கப்பட்ட உள்ளான உணர்வைப் பெற்றுக்கொண்டேன்” என்று ஒருவர் பகிர்ந்துகொண்டார். அதற்காக அவர் இப்போது பூரண பரிசுத்தர் அல்ல. ஆனால், இப்போது பாவம் தூண்டும்போது அதற்கு எதிராகப் போராடுகின்ற ஒரு உன்னத பெலன் தனக்குள் கிரியை செய்வதை உணருவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

“நீங்கள் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்” என்கிறார் பவுல். அதாவது நமது பழைய பாவ சுபாவம் செத்ததால், பாவஞ்செய்கின்ற ஆசை உந்துதல் இனிக் கிடையாது என்பதை நம்மில் நாம் முதலில் உணர வேண்டும். ஏனெனில் நாம் இப்போது கிறிஸ்துவின் உயிர்ப்பின் சாயலில் இணைக்கப்பட்டிருப்பதால், பழைய ஆசை இச்சைகளுக்கு இனி நாம் அடிமைகளல்ல. அப்படியானால், அவ்வப்போது வரும் உள்ளான பாவ தூண்டுதல்களை என்ன செய்வது என்று நாம் கேட்கலாம். ஆம், தூண்டுதல் நிறையவே வரும்; வராது என்று சொல்லவே முடியாது. ஆனால் இப்போது நம்மை எல்லாவற்றிலும் வெற்றி சிறக்கப்பண்ண, எல்லாவற்றிலும் வெற்றி சிறந்த கிறிஸ்து நமக்கு இருக்கிறார். பரிசுத்தாவியானவர் நமக்குள் இருந்து நம்மை நடத்துகிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். அவருடைய சத்தத்துக்கு நேராக நம்மை ஒழுங்காக்கவேண்டியது நமது பொறுப்பு. பாவம் நம்மைத் தூண்டினாலும் நாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. ஆகவே திடன்கொண்டு எழுந்து முன்செல்வோமாக.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1கொரிந்தியர் 15:57).

ஜெபம்: பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து வெற்றியுள்ள வாழ்வை வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.