Daily Archives: June 1, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஜுன் 1 சனி

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 10:9).


நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங்.32:8).
2இராஜாக்கள் 13,14 | யோவான்.10:1-21

ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 1 சனி

அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:2).


யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5) இப்புதிய மாதத்தை காணச்செய்த ஆண்டவர் ஒவ்வொருவரது தேவைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்கி, சமாதானத்தோடு காத்துக்கொள்ள ஜெபிப்போம்.

நீதியுள்ள தேவன்

தியானம்: 2019 ஜுன் 1 சனி | வேத வாசிப்பு: பிர. 4:1; புலம். 3:22-26

“ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்” (சங்கீதம் 103.6).

கர்த்தரைவிட்டுப் பிரிந்து, தன் வாழ்வை வீணடித்த நாட்களைத் திரும்பிப் பார்த்த சாலொமோன் ராஜா, பிற்காலத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்ணோக்கி ஏறிட்டு பார்த்து மனம் வெதும்பினார். ஒடுக்கப்படுகிறவர்களையும், அவர்கள் தேற்றுவாரின்றி கலங்குகின்ற கொடுமையையும் கண்டார். இன்றும் நாம் அதே காரியங்களைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம்; பலர் அவற்றில் அகப்பட்டும் இருக்கிறோம். இவற்றால் உள்ளம் சோர்ந்து போகிறது; சில சமயம் வெறுப்பே உண்டாகிறது. ஆனாலும் தேவனுக்குள் மனம் திடப்படும்போது, இன்னும் தமது சிங்காசனத்திலேதான் கர்த்தர் இருக்கிறார் என்ற நினைவு நம்மைப் பெலப்படுத்துகிறது. இது தேவபிள்ளைகளுக்குக் கிடைத்த மகா பெரிய சிலாக்கியம்!

ஏறத்தாழ கி.மு. 586ல் எருசலேம் நகரமே தேற்றுவாரின்றி தவித்தது. பாபிலோன் வந்து எருசலேமை தரைமட்டமாக்கி, மக்களைச் சிறைபிடித்து சென்றது. ‘அவளைத் தேற்றுவாரில்லை, அவளுக்கு உதவிசெய்வார் யாருமில்லை’ என்று எருசலேமின் ஒடுக்குதலைக் குறித்து எழுதப்பட்டுள்ளது (புல.1). ஆனால் எருசலேமின் இந்த நிலை அப்போதுதான் உருவான ஒன்றல்ல. தேவனுடைய உருக்கமான எச்சரிப்புகளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோதே, கர்த்தர் எரேமியா மூலம் பாபிலோன் வருவான் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. கர்த்தர் நீதியுள்ளவர்; ஆனால் உருக்கமும் இரக்கமும் உள்ளவர். ஆகவேதான், நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறது கர்த்தருடைய கிருபையே என்ற வார்த்தையையும் அதே புலம்பலில் வாசிக்கிறோம் (புல.3:22). ஒடுக்கப்படுகிறவர்கள் யாராயினும் தேவனை நோக்கித் திரும்பும்போது, அவர் நீதி செய்கிற தேவனாயிருக்கிறார். விடுவிக்கிற இரட்சகராக இருக்கிறார்.

அன்பானவர்களே, சில சமயங்களில் நாம் ஏன் ஒடுக்கப்படுகிறோம் என்ற காரணமே நமக்குத் தெரியாதிருக்கும். அதற்காக நாம் மாண்டுவிட முடியாது. அந்த சூழ்நிலையைவிட்டு, தேவனை நோக்கித் திரும்பவேண்டும். அவர் நீதியுள்ளவர்; நமது நியாயத்தை வெளிக்கொண்டு வருவார். நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் அது நமது சந்ததியைப் பாதிக்காதபடி மனந்திரும்புவதே நல்லது. அன்று எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு எழும்பியது! அதுபோலவே, நமது வாழ்வையும் கட்டியெழுப்ப தேவன் வல்லவர். ஆகவே பிரசங்கிபோல சூரியனுக்குக் கீழே பாராமல், கண்களை தேவனை நோக்கி மேலே திருப்புவோம். பெரிய காரியங்களைக் காணலாம்.

“கர்த்தாவே, நீர் நீதிபரர். உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்” (சங். 119:137).

ஜெபம்: நீதியின் தேவனே, நீர் நீதி செய்கிறவராக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஒடுக்கப்பட்டாலும் நாங்கள் நிர்மூலமாகாமல் இருப்பது உமது கிருபை அல்லவா! ஆமென்.

சத்தியவசனம்