Daily Archives: June 5, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஜுன் 5 புதன்

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தiா நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். (2 சாமு 22:4)
2இராஜாக்கள் 20,21 | யோவான்.11:45-57

ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 5 புதன்

திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் ஃபீபா வானொலியில் ஒலிபரப்பாகும் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டு ஆசீர்வதிக்கப்படும் நேயர்களது குடும்பங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, மேலும் பல ஆயிரமான மக்கள் பிரயோஜனப்படுவதற்கும், தேவைகள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.

எல்லாம் தேவனிடமிருந்து…

தியானம்: 2019 ஜுன் 5 புதன் | வேத வாசிப்பு: பிர. 4:13,16; 2கொரி. 10:17,18

“தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2கொரி.10:18).

தான் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தன் தகப்பனோடு பகிர்ந்து கொண்ட மகள், “அப்பா, நீங்களும் உங்கள் மத வைராக்கியத்தை விட்டு, ஆண்டவருக்கு உங்களை ஒப்புவியுங்கள்” என்று கடிதம் எழுதினாள். அதற்கு அவர் சற்று கோபத்துடன், “83 வருடங்களாக கிறிஸ்தவனாக வாழ்ந்து, ஆலயம்கூடக் கட்டிய எனக்கு, நேற்று பிறந்த நீயா புத்தி சொல்லுகிறாய்? எப்போது உனக்கு ஞானம் பிறந்தது” என்று பதில் எழுதினார். பல வருடங்களாக ஆலயக் கணக்குகளைத் தானே கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்த முதியவருக்கு, கணினியில் வேலைகளை இலகுவாக முடிக்கத்தக்கதாக ஏற்படுத்தப்பட்ட இளைஞனைப் பார்த்தபோது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “இத்தனை வருடங்களாக நான் பார்க்காத கணக்கா? நேற்று முளைத்த இந்தப் பையன் எப்படி பார்க்கப் போகிறான்’ என்று கோபப்பட்டார்.

தற்புகழ்ச்சி, பெருமை, பதவி ஆசை இவை வாழ்வில் நிரந்தரமானவை அல்ல. ஆனால் பலர் இவற்றைத்தான் தேடுகிறார்கள். சிலர் தங்கள் பெருமைகளை தாங்களே பறைசாற்றுகிறார்கள். சிலர் பிறர் புகழ்ச்சியை நாடுகிறார்கள். ஆனால் இன்று நம்மைப் புகழுகிறவர்களே நாளை நம்மைத் தூற்றவும் கூடும். ஆகவே, வாழ்க்கையில் இந்த விதமான இலக்குகள் வீண். பல மூத்தோர், தங்கள் சேவைக்காலம் முடிந்து ஓய்வு பெறும்போது மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பிறருக்கு விட்டுக் கொடுக்கவும், தமது காலம் முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்ளவும் விருப்பமில்லை. தாம் இல்லாவிட்டால் வேலை நடக்காது, ஆலயக் காரியம் நடக்காது என்றெல்லாம் சிலர் நினைப்பது உண்டு. ஆனால் சில சமயம் நாம் நினைத்திராத ஒருவர், உயர் பதவிக்கு வரலாம். சிறைச்சாலையிலிருந்தும் தலைவர்களாகப் புறப்படுவாருமுண்டு என்கிறார் பிரசங்கி. வயது எல்லை அல்ல, திறமையும் ஞானமுமே காரியம்.

தேவபிள்ளையே, நமது வயதோ, திறமையோ தேவ சேவைக்கு ஒரு தடைக்கல் அல்ல. நமது அகம்பாவமும் விட்டுக்கொடுக்காத தன்மையுமே தடையாக இருக்கிறது. நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு இயன்றதைச் செய்துகொண்டு, நம்மிலும் விவேகமுள்ளவருக்கு இடமளிக்கவேண்டும். மனுஷ புகழ்ச்சி நமக்கு வேண்டாம். தேவனைப் புகழவும் அவரது புகழ்ச்சிக்காகவும் வாழ்வோமானால், நமக்கு வரும் புகழ்ச்சியை நாம் தேவனுக்குத் திருப்பி விடுவோம். தேவ அன்பு, அவர் நமக்களிக்கும் புகழ்ச்சி இவை ஒருபோதும் மாறாது.

“…மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை” (நீதி.27:21).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, உமக்கு சேவை செய்வதற்கு என்னிடத்திலுள்ள உமக்குப் பிரியமில்லாத காரியங்களைக் களைந்து திவ்ய சுபாவங்களை நான் பெற்றுக்கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்