Daily Archives: June 9, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஜுன் 9 ஞாயிறு

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். (சங் 9:1)
1நாளாகமம் 3,4 | யோவான்.13:21-38

ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 9 ஞாயிறு

என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும் (ஏசா.56:7) என்ற வாக்குப்படியே அனைத்துலக திருச்சபைகளிலும் தேவனுடைய ஆலயம் காக்கப்படுவதற்கான வைராக்கியம் மாத்திரம் காணப்படவும், வேறெந்த கசப்பும் கோபமும் மூர்க்கமும் காணப்படாதவாறும் அவரது பரிசுத்த நாமத்திற்கு கனக் குறைச்சல் உண்டாகாதவாறும் ஜெபிப்போம்.

பொருத்தனை செய்தால்…

தியானம்: 2019 ஜுன் 9 ஞாயிறு | வேத வாசிப்பு: பிரசங்கி 5:4-6

“பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்த பின்பு யோசிக்கிறதும் மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (நீதி.20:25).

அறுவை சிகிச்சை கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் உள்ளம் உடைந்த ஒரு சகோதரன், உயிர் தப்பினால், மிகவும் பெறுமதிப்பான ஒரு நிலத்தை ஆலயம் கட்ட கொடுப்பதாக தனக்குள்ளேயே பொருத்தனைப் பண்ணிக்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் போகும்முன்னர் எதிர்பாராமல் வந்த போதகரும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை எடுத்து வாசித்தது, இவருக்கு ஆறுதலாயிருந்தது. சிகிச்சையும் முடிந்தது. தேவ கிருபையால் உயிர் பிழைத்தார். இப்போதுதான் செய்த பொருத்தனை அவருக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தது, அதினால் மிகவும் குழம்பிவிட்டார். பலத்த போராட்டத்தின் பின்னர், கர்த்தர் என்னை அறிவார் என்று கூறி, ஒரு சிறு தொகையை காணிக்கையாகக் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார். எனினும் எண்ணி ஆறு வருடங்களில் அவரது பெறுமதிப்புள்ள அந்தக் குறிப்பிட்ட நிலம், வேறொருவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

அன்பானவர்களே, இன்று நாம் பொருத்தனை செய்கிறவர்கள் அல்ல. பொருத்தனையிலா தேவன் தம்முடைய குமாரனை நமக்காகத் தந்தார். ஆனால், ஒரு காரியத்தைத் தேவனுக்கென்று வேறாக்கி கொடுக்கத் தீர்மானிப்பது சாதாரண விஷயமல்ல. செய்யமுடியாததை நினையாமல் இருப்பது மிகவும் சிறந்தது. கர்த்தர் கேட்டாரா தமக்குத் தரச்சொல்லி? அல்லது, ஏதாவது கொடுத்தால்தான் நன்மை செய்வதாகச் சொன்னாரா? ஆனால் நாமாகச் சொன்னால் அதை கட்டயமாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது தேவனை அவமதிப்பது போலாகும்! பொருத்தனை செய்வது தேவனிடம் பேரம் பேசுவதைப் போன்று இருக்கக்கூடாது. நீர் இதைச் செய்தால், நான் இதைச் செய்கிறேன் என்று சொல்லுவதுபோல சில நேரங்களில் பொருத்தனைகள் காணப்படுகிறது.

அநேகமான பொருத்தனைகள் ஒரு இக்கட்டில், மன ஆதங்கத்தில், மரண ஆபத்தில்தான் செய்யப்படுகிறது. அது தவறல்ல. ஆனால் பொருத்தனை செய்துவிட்டால் அதைச் செலுத்தியே ஆகவேண்டும். அந்த உண்மைத்துவத்தை நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிறார். யாக்கோபு பொருத்தனை பண்ணினார்; அதை நிறைவேற்றினார். தேவனும் அவரைக் காத்துக்கொண்டார் (ஆதி. 28:20; 31:13). அன்னாள் பொருத்தனை பண்ணினாள், அப்படியே செய்தாள் (1சாமு. 1:9-11). கர்த்தர் அந்த மகனை உயர்த்தினார். முன் சிந்தனை இன்றி வாய்தவறியேனும் தேவ சந்நிதானத்தில் எதையும் உளற வேண்டாம். அப்படிச் செய்தால் யெப்தாவைப்போல தடுமாற நேரிடும். ஆனாலும் யெப்தா தன் வார்த்தையை நிறைவேற்றுவதற்காக கொடுத்த கிரயம் மிகப் பெரியது. சிந்திப்போமா! “

“என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்” (சங். 66:14).

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் உண்மையுள்ள தேவன், உம்மிடத்தில் நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்ற எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்