ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 2 செவ்வாய்

ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன் (சங்.91:15) இவ்வாக்குப்படியே ஆபத்திலிருந்து, வியாதியிலிருந்து, பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுதலையையும் நன்மைகளையும் சுகத்தையும் பெற்றுக்கொண்ட பங்காளர் குடும்பங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

கர்த்தரின் கரம்

தியானம்: 2019 ஜூலை 2 செவ்வாய் | வேத வாசிப்பு: யோபு 23:1-10

‘ஆனாலும், நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்’ (யோபு 23:10).

வாழ்வில் எல்லாமே இருண்டுவிட்டதுபோலவும், அடுத்த அடி எங்கே எடுத்து வைப்பது என்று தெரியாமலும் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்குண்டா? ‘கண்களை மூடினாலும் திறந்தாலும் ஒரு பெரிய கேள்விக்குறி என் முன்னே எழுந்து என்னைப் பயமுறுத்தியது. ஆனால், இக்குழப்பத்தை எனக்கு அனுமதித்தவர் நான் போகும் வழியை அறிந்திருக்கிறார் என்ற நிச்சயத்தைக் கிருபையாய் பெற்றுக்கொண்டபோது நான் விடுதலைபெற்றேன்’ என்று ஒரு அம்மா தன் சாட்சியைப் பகிர்ந்துகொண்டார்.

யோபுவுக்கு நேரிட்ட துன்பத்தைக் குறித்து நமக்குத் தெரியும். ஆனால், அவருடைய நிலையில் நம்மை நிறுத்திப் பார்த்ததுண்டா! கர்த்தருடைய பிரசன்னத்தை இழந்துவிட்டதுபோல அவர் துடிதுடித்தார். ‘இதோ நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை. பின்னாகப் போனாலும் அவரைக் காணேன். இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாத படிக்கு ஒளித்திருக்கிறார்’ (வச.8,9) யோபு தேவசமுகத்தைத் தேடிக் கதறினார். ஆனாலும், உபத்திரவங்கள் உண்டாகக் கண்டபோதும், உலக நம்பிக்கைகள் யாவும் அற்றுப்போனதைக் கண்டபோதும், அவை எல்லாவற்றின் மத்தியிலும் தேவனுடைய கரத்தையே கண்டார் யோபு. சபேயரின் பட்டயத்திற்குப் பின்பும், வானத்திலிருந்து விழுந்த இடிக்குப் பின்னரும், கல்தேயரின் கொள்ளைக்குப் பின்பும், வனாந்தரவழியாய் வந்த பெருங்காற்றுக்குப் பின்னரும், அந்த வெறுமையிலும், சிதைந்து போன குடும்பமகிழ்ச்சியின் மத்தியிலும் யோபு தேவனுடைய கரத்தையே கண்டார். ராஜாபோல வலம் வந்த யோபு, சாம்பலில் உட்கார்ந்து, ‘அவர் என்னைக் கொன்றாலும் நான் அவரை நம்புவேன்” என்றும், கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்றும் சொன்னது எப்படி?

˜நாம் போகும் பாதை கோணலானதாக, கடினங்கள் நிறைந்ததாக இருக்கலாம். அதையும் கர்த்தர் அறிவார் என்று நம்புவோம். இஸ்ரவேலின் வழி கடினம் என்று தெரிந்துதானே சுற்றுப்பாதையில் கர்த்தர் நடத்தினார். எகிப்தியருக்குப் பயங்கரமாய் தோன்றிய அக்கினிஸ்தம்பம் இஸ்ரவேலுக்கு வெளிச்சம் தரவில்லையா?˜

கர்த்தரை நமது இதயசிங்காசனத்தில் அமர்த்துவோம். அவர் யாவையும் பார்த்துக் கொள்வார். ‘என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்’ (சங்.142:3).

ஜெபம்: இரக்கத்தின் தேவனே, எனக்கு நேருகின்ற இக்கட்டுகளில் நம்பிக்கைஇழந்து போகாமல் தேவகரத்தைக் காண்கின்ற தைரியத்தையும், விசுவாசத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.