Daily Archives: July 9, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 9 செவ்வாய்

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ (எண்ணா.11:23) இவ்வாக்குப்படியே வல்லமை யுள்ள கர்த்தர் குடிப்பழக்கத்தில் உள்ள 6 நபர்களின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்திடவும், மனப்போராட்டங்களோடு உள்ள குடும்பங்களுக்கு வேண்டிய சமாதானத்தை அருளிச்செய்யவும் வேண்டுதல் செய்வோம்.

என் பெலவீனத்திலும்…

தியானம்: 2019 ஜூலை 9 செவ்வாய் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 11:22-27

‘…நான் பலவீனமாயிருக்கும்போதேபலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால், கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும்… நான் பிரியப்படுகிறேன்’ (2 கொரி.12:10).

இருள் சூழ்ந்த இரவில், அடர்ந்து வளர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் அல்லது தெருக்களில் நடந்த அனுபவம் உங்களுக்குண்டா! அந்த அடர்த்தியான மரக்கிளைகள் இலைகளினூடே ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்த அனுபவம் உண்டா! நேரடியாக ஆகாயத்தில் நட்சத்திரங்களை ரசிப்பதிலும், இந்த ரசனை வித்தியாசமானதும், ஆச்சரியமானதாயும் இருக்கும்.

உயர்ரக வாழ்விலும், அதிகார தோரணையிலும், மதிப்பு மரியாதைகள் மத்தியிலும் வாழ்ந்த ஒருவர், துன்பத்திலும் துயரத்திலும் கட்டுகளிலும் தனிமையிலும் சிறைக்கதவுகளின் பின்னே வதைக்கப்படுவதிலும் பிரியப்படுவதாகச் சொல்வது எப்படி? ஒரு யூதனாய், எபிரெயனாய், பெருமைக்குரிய ரோமப் பிரஜா உரிமையை உடையவராய் இருந்த பவுல், அத்தனை தகுதிகளாலும் பெற்றிராத மகிழ்ச்சியை, தனக்கு நேர்ந்த துயரங்களில் அடைந்தார் என்றால், அந்த மகிழ்ச்சியின் இரகசியம் தான் என்ன? ஆம், அந்த இரகசியம் இயேசு கிறிஸ்துவே!

‘இது என்னால் முடியும்’ என்று எண்ணும்போது நாம் நமது பெலத்தில் சார்ந்து விடுகிறோம். அது நமக்குள் பெருமையையும் கொண்டுவந்து விடுகிறது. தேவ ஊழியத்திலும் இதுவே நடக்கிறது. ஆனால், நம்மால் முடியாது என்ற சூழ்நிலை நெருக்கும்போது நாம் தடுமாறுகிறோம். எல்லாராலும் கைவிடப்படும் போதும், யாரும் உதவ முடியாத சூழல் ஏற்படும்போதும் யார் பெலத்தை நாடமுடியும்? அங்கேதான் ஆண்டவரைத் தேடுகிறோம்; அவரைச் சாருகிறோம். நம்மால் முடியும் என்னும்போது, தேவனால் நம்மில் எதுவும் செய்யமுடியாது. மாறாக, கட்டுண்ட நிலையிலும், கைவிடப்பட்ட சூழ்நிலையிலும் தேவனைச் சாரும்போது, அவரால் நம்மை வெடிகுண்டுகளாக மாற்றமுடியும். பிலிப்பு பட்டணத்து சிறையிலே சிறைச்சாலைகள் திறந்தது இப்படித்தான்! (அப்.16:26).

தேவபிள்ளையே, விழித்தெழு! உன் பலவீனத்தில் தமது பெலத்தை விளங்க வைக்க ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். இரண்டு கண்களும் பார்வையற்றிருந்த ஒரு பிரசங்கியார், ‘என் சிலுவையின் மகிமையை எனக்குப் போதியும். என் முள்ளின் மதிப்பை எனக்குக் காண்பியும்’ என்று ஜெபித்தாராம். பெலமிழந்து தவித்திருக்கும் நிலையில் இன்று நாம் என்ன சொல்லி ஜெபிக்கப் போகிறோம்!

‘…ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்’ (2 கொரி. 12:9).

ஜெபம்: என்னைப் பெலப்படுத்தும் தேவனே, என் பெலவீனத்தில் உமது பெலன் பூரணமாய் விளங்க இன்று கிருபை செய்தருளும். ஆமென்.

சத்தியவசனம்