ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 28 ஞாயிறு

தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசா.29:13) இந்தநாளின் ஆராதனையிலே இவ்வித நிலைமை இராமல் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரைத் துதித்து ஆராதிக்கவும் ஒருமித்து அவருடைய நாமத்தை உயர்த்திடவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

பெலப்படுத்தும் பதில்கள்

தியானம்: 2019 ஜூலை 28 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 8:22-27

‘…நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்…’ (ரோமர் 8:26).

பல வருடங்களுக்கு முன்னர், ‘எனக்குப் பொறுமை வேண்டுமென ஜெபியுங்கள்’ என்று ஒரு தாயார் அடிக்கடி கேட்பார். நாமும் ஜெபித்து அனுப்புவோம். அடுத்த தடவை சந்திக்கும்போது, ‘அன்று வீட்டுக்குப்போனபோது, பொறுமை இழந்துவிடக்கூடிய காரியங்களே காத்திருந்தன. கர்த்தர் என் ஜெபத்தை மாத்திரமல்ல, உங்கள் ஜெபத்தையும் கேட்கவில்லை’ என்பார். ஆனால், சில வருடங்களின் பின்னர், ‘அன்று என்னுடைய உங்களுடைய ஜெபத்தைக் கேட்காத மாதிரி கர்த்தர் செயற்பட்டதற்காய் ஸ்தோத்திரம். அந்த அனுபவங்கள்தான் நான் பொறுமையைக் கற்றுக்கொள்ள ஏதுவாயிருந்ததை இப்போது உணருகிறேன்’ என்றார். அவர் மரிக்கும்போது மிகுந்த சமாதானத்துடனே மரித்தார்.

தேவனை நன்கு கிட்டிச் சேர்ந்திருக்கிறோம் என்று எண்ணும்போது, நமக்கு எல்லாமே விளங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது ஜெபங்களுக்கான கர்த்தருடைய பதிலுத்தரவே நமக்குப் பல தடவைகளிலும் விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பொறுமைக்கு ஜெபித்தால் பொறுமையிழக்கக்கூடிய காரியங்களையே அனுப்புகிறார். தாழ்மைக்கு ஜெபித்தால், கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ளக்கூடிய துன்பங்களையே அனுப்புகிறார். பிறரை நேசிக்கின்ற மனதிற்காக ஜெபித்தால், நமக்குப் பிரியமானதையும் விட்டுக்கொடுக்கின்ற சூழ்நிலைகளையே அனுமதிக்கிறார். விசுவாசத்தைப் பெலப்படுத்துமாறு ஜெபித்தால், நம்மிடம் உள்ளதும் அற்றுப்போகிறது; பிள்ளைகள் வியாதிப்படுகிறார்கள். இதுவரை நமக்கிருக்கும் விசுவாசத்தைப் பயன்படுத்தவேண்டிய கட்டாய சோதனைகள் வந்துசேருகின்றன. நாம் இயேசுவைப் போல மாறவேண்டுமென்று ஜெபித்தால், இருக்கின்ற ஊழியமும் அற்றுப்போய், எல்லாராலும் புரிந்து கொள்ளப்படாத நிலைக்குள்ளாகிறோம். எல்லாரிடமும் அன்பு செலுத்தவேண்டுமென்று ஜெபித்தால் இதுவரை இல்லாத கோபம் வெடிக்கத்தக்கதாக காரியங்கள் நடக்கலாம்.

இவையெல்லாம் கர்த்தர் நம்மை வெறுக்கிறதினால் அனுமதிக்கின்ற பதிலா? இல்லை. பொறுமையிழக்கத்தக்க சூழல் அமைந்தால்தானே பொறுமையைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே அன்பானவர்களே, நமது வெற்றிக்கு ஒரே வழி, தேவகரத்தில் நம்மை விட்டுவிடுவதுதான். நம் பலவீனங்களை அறிந்திருக்கிற கர்த்தர் நமக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். ஆகவே, நம்மையே அவர் கரத்தில் விட்டுவிட்டு இளைப்பாறுவோம். அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றுவார் என்பதே அவரைக்குறித்து நாம் கொண்டிருக்கிற தைரியம்.

‘என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக’ (சங். 66:20).

ஜெபம்: ஜெபத்தை கேட்பவரே, உம்மிடத்திலிருந்து எனக்கு வரும் எதிர்பார்த்திராத பதில்களால் ஏமாற்றமடையாதவாறு பொறுமையைக் கற்பதற்கு கிருபை தாரும். ஆமென்.