Daily Archives: September 22, 2019

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 22 ஞாயிறு

அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் (லூக்.9:6) இந்நாட்களில் கிராமங்கள் சந்திக்கப்பட தரிசனம் பெற்ற ஊழியர்கள் எழும்பவும், இவ்வூழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்கி சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்பட கர்த்தர்தாமே அநுகூலங்களை தந்து தேவைகளையும் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.

மரணத்தைச் சுமந்து…

தியானம்: 2019 செப்டம்பர் 22 ஞாயிறு | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 4:6-15

…இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம் (2கொரி. 4:10).

“நாம் பரலோகம் சென்றபின், இயேசுவுக்காகச் சிலுவை சுமப்பதற்கு இரண்டாவது வாய்ப்பு ஒருபோதும் கொடுக்கப்பட மாட்டாது. நாம் இப்போது நமது சிலுவையை உதறித் தள்ளிவிடலாம். ஆனால் இயேசு நடந்து சென்ற குருதி படிந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றும் வாய்ப்பு நித்தியத்தில் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது”- சாது சுந்தர்சிங்.

நாம் சரீரத்தில் எதைச் சுமந்து நிற்கிறோமென்று கண்ணாடிக்கு முன்னே நின்று பார்த்து அறிந்துகொள்ளலாம். கண்ணாடி நமது சரீரக் கண்களுக்குத் தெரியக்கூடியதையே காட்டும். தேவனுடைய வார்த்தை என்ற கண்ணாடியோ நமது உள் வாழ்விலே எதைச் சுமந்து திரிகிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்துவிடும். உள்ளும் புறமும் நாம் எதை சுமந்து திரிகிறோம்? மறுபுறத்தில் ஆடை அலங்காரங்களும், பகட்டான வாழ்வின் அடையாளங்களும்; உள்ளேயோ ஆசைகளும் அகங்காரங்களும் மாயையான கிறிஸ்தவ வாழ்வும், இவைகள் தானே! ஆனால் பவுலடியார், “எப்பொழுதும் நாங்கள் எங்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று மரணத்தையே தான் சுமந்துதிரிவதாக எழுதுகிறார். அதாவது எந்த நேரம் மரணம் நேரிட்டாலும் அதைச் சந்திக்க அவர் தயாராயிருந்தார். இது பவுலுக்கு துக்கத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகாத, கலக்கமடைந்தும் மனமுறிவடையாத, துன்பப்பட்டும் கைவிடப்படாத, இப்படியாக, எப்பொழுதும் வெற்றி சிறக்கப்பண்ணுகிற கிறிஸ்துவினாலே முழுமையான மகிழ்ச்சியைப் பவுல் பெற்றுக்கொண்டிருந்தார். ஆம், மரணத்தை வெற்றிகொண்ட கிறிஸ்துவினாலே, மரணத்தைச் சுமந்து திரிந்த அவர், தனது அன்றாட வாழ்வில் துன்பங்களின் மத்தியிலும் வெற்றியையே அனுபவித்தார். இதுதான் மெய்யான சந்தோஷம்!

இன்று நாம் எதையெதையோ சுமந்து திரிகிறோம். அது அவரவர் பிரச்சனை. ஆனால், அவற்றில் ஏதாவது நமது வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்தாவிட்டால், அது வீணே. நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல என்பதை மறந்துவிடுவதனால் தான், உலக வாழ்வில் ஆசை ஏற்படுகிறது. சிலுவை பாதை ஒன்றே பரலோகப் பாதை! அதுவே ஜெயத்தின் பாதை!! அதைத் தடுப்பதற்கென சாத்தான் பல சூழ்ச்சிகளைச் செய்வான். உலக காரியங்களால் நம்மை மயக்குவான். இவற்றையும் தாண்டி நமது வாழ்வில் கிறிஸ்துவுக்குள்ளான மரணத்தை, இவ்வுலகத்துக்கு மரித்தவர்களாக, கிறிஸ்துவுக்கே சாட்சியாக ஜீவிக்கிறோமா?

ஆதலால், அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம் (ரோமர் 6:5).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இவ்வுலக வாழ்வில் சாத்தானுடைய சூழ்ச்சிக்கும் தந்திரங்களுக்கும் நாங்கள் தப்பி உமக்கே சாட்சியாய் வாழ, நீர் அருளும் மெய்யான சந்தோஷத்தை பெற்று அனுபவிக்க எங்களுக்கு கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்