ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 19 சனி

நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா.10:10) சத்தியவசன வெப் சைட், வெப் டிவி, வாட்ஸ் அப், குறுஞ்செய்தி ஆகிய ஊழியங்கள் ஆயிரக்கணக்கான மக்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமுள்ளதாக இருப்பதற்கும், அநேகர் ஆண்டவரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

ராஜாதி ராஜா

தியானம்: 2019 அக்டோபர் 19 சனி | வேத வாசிப்பு: யோவான் 12:12-15

…அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13).

பண்டிகை நாட்களில் எல்லா யூதரும் எருசலேமில் கூடுவதுண்டு. இவர்களுடன் இயேசுவும் பண்டிகைக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தது ஒரு கூட்டம். பெத்தானியாவில் லாசருவை உயிரோடு எழுப்பியதைக் கண்டும் கேள்வியுற்றும் அவரைக் காணச்சென்றது இன்னொரு கூட்டம். இவர்களைவிட, எப்படியாகிலும் இயேசுவைக் குற்றப்படுத்தி, கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடிருந்த பரிசேயர், ஆசாரியர் கூட்டமும் அங்கே இருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமது பணி முடிவடைவதையும், இதுவே தான் உலகில் கடைசியாகப் பங்குகொள்ளப்போகும் பஸ்காப் பண்டிகை என்பதையும் அறிந்திருந்த இயேசு, அடுத்து என்ன செய்தார் என்பதை யோவான் அழகாக விவரித்திருக்கிறார். “எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சகரி.9:9) என்று உரைக்கப்பட்டபடி அவர் ஒரு கழுதைக் குட்டியில் ஏறி, எருசலேமுக்குள் ராஜ பவனியில் உட்பிரவேசித்தார். பரிசேயரால், ஆசாரியரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தீர்க்கதரிசனங்களை மறந்துவிட்டார்கள். தாங்கள் எதிர்பார்த்திருக்கும் ராஜா கழுதைக்குட்டியில் ஏறி வருவதா? இயேசுவைப் பிடித்து, பிலாத்துவிடம் கொண்டு சென்றனர். இவர்களுடைய குற்றச்சாட்டைக் கேட்ட பிலாத்து, “நீ ராஜாவோ” என்று இயேசுவிடம் கேட்டான். அதற்கு இயேசு, “நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்: சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்” (யோவான் 18:37).

ஆம், இயேசு இவ்வுலகத்திற்குரிய ராஜா அல்ல. ரோம ராஜ்யத்தை மேற்கொள்ள வந்தவரும் அல்ல. யூதரை மாத்திரமல்ல, முழு உலகத்தாரையும் பிசாசின் பிடியிலிருந்து மீட்க வந்த ராஜாதி ராஜா. அவருடைய யுத்தம் இந்த உலகப் போர் போன்றது அல்ல. அது சிலுவைப் போர். அவருடைய ராஜரீகம் இம்மைக்குரியது மாத்திரமல்ல; அது நித்தியத்திற்குரிய ராஜரீகம் (வெளி.19:16). அவருடைய ஆளுகையில் நாமும் வாழலாமே!

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர். அவரே மகிமையின் ராஜா (சங். 24:10).

ஜெபம்: ராஜாதிராஜாவாகிய இயேசுவே, முழு உலகத்தையும் பிசாசின் பிடியிலிருந்து மீட்கவந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். கிறிஸ்துவின் நித்திய ஆளுகைக்குள் பிரவேசிப்பதற்கும் எங்களை பாத்திரவான்களாக்கும். ஆமென்.