ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 27 வெள்ளி

… நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன் (சங்.91:15) சத்தியவசன முழுநேர முன்னேற்றப்பணியில் உள்ள சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோரை கர்த்தர் தொடர்ந்து வல்லமைப்படுத்தி ஊழியத்தைச் செய்வதற்கு கிருபை செய்திடவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

ஒளியாக வந்தார்!

தியானம்: 2019 டிசம்பர் 27 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 12:35-46

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்” (யோவான் 12:46).

குறி கேட்கும்படிக்கு, குறிசொல்லும் ஒரு பெண்ணிடம் ஒருவர் சென்றார். அப்பொழுது அவள் தன்னால் முடியாது என்று மறுத்தாள். அந்த மனிதரிடம் ஒரு ஒளி இருப்பதாகவும், அது தன்னைத் தடுக்கிறது என்றும் சொல்லி, எழுந்து போய்விடும்படி சொன்னாள். தான் கடவுளை நம்பாதவன் என்றும், அப்படியொரு ஒளி இருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லி அவர் அவளை வற்புறுத்தினார். அவளும் எழுந்து அருகில் சென்றபோது, அவள் பின்புறமாகத் தூக்கிவீசப்பட் டாள். ஒன்றும் புரியாத அவர், சட்டைப் பைக்குள் கையைவிட்டார். தனது தாயார் கொடுத்த சிறிய வேதாகமம் அங்கே இருந்தது. “அவள் சொன்ன ஒளி என்னில் இல்லை. இந்த தேவனுடைய வார்த்தையில்தான் இருந்திருக்கிறது” என்று தன் அனுபவத்தைக் கூறிய அவர், பின்நாட்களில், ஒரு தேவ ஊழியராகப் பணிபுரிந்தாராம்.

ஒளிக்கும் இருளுக்கும் சம்பந்தம் ஏது? இருளான அறையிலே, ஒளி வந்தால் அதற்குப் பின் அந்த அறையிலே இருளுக்கு இடமேது? அது இருந்த இடம் தெரியாமலேயே கடந்துபோய்விடும். பாவத்தினால் இருண்டுபோய்க் கிடக்கும் நமது வாழ்வுக்குள்ளும் தேவஒளி வரும்போது அந்த வாழ்வு வெளிச்சம் காண்கிறது. இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள் என்றார் ஆண்டவர்.

இருளில் நடப்பது கடினம். எப்படியாவது ஒரு சிறு ஒளியை என்றாலும் நாம் தேடிச்சென்று எடுத்துத்தான் நடப்பதுண்டு. காரணம், இருளில் எங்கே போகிறோம் என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இருளில் அடுத்த அடியை எடுத்துவைக்கவே முடியாது. எனவேதான் நாம் ஒளியில் நடக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆண்டவரும் இதைத்தான் சொன்னார். “இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். ஒளி உங்களிடத்தில் இருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்றார்.

அருமையானவர்களே, நாம் ஒளியின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு இருளில் நடக்கலாமா? தேவன் ஒளியாய் வந்தார். அவர் ஒளியாகவே இருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளானால் அந்த ஒளியிலே நடப்போம். இருள் நிறைந்த உலகிற்கு வெளிச்சம் கொடுப்போம்.

“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவான் 1:9).

ஜெபம்: மெய்யான ஒளியே, ஒளியின் பிள்ளைகளான நாங்கள் இருளில் நடவாமல் உலகத்திலே ஒளிவீசுகிறவர்களாக திகழ கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 26 வியாழன்

அமெரிக்க தேசத்தில் தேவதரிசனம் பெற்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாள் வரையிலும் நடத்தப்பட்டு வரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைக்கவும், ஊழியத்தலைவர்கள் வேதபாட போதகர்கள் யாவரையும் கர்த்தர் தொடர்ந்து உபயோகப்படுத்த, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

அர்ப்பணி! பணிசெய்!

தியானம்: 2019 டிசம்பர் 26 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 1:26-38

“யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு…” (மத். 1:24).

கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள், தங்கள் சொந்தப் பணிகளைவிட்டு, தேவ பணிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த பல சம்பவங்களை வேதாகமத்திலே வாசிக்கிறோம். மோசேயைத் தேவன் அழைத்தபோது, ஆடுகள் மேய்ப்பதை விட்டுவிட்டு, இஸ்ரவேலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுல், இயேசுவால் தொடப்பட்டபோது, கிறிஸ்துவுக்காய்த் தன்னையே கொடுத்துவிட்டான். அழைப்புப் பெற்ற சீஷர்கள், தங்கள் வலைகளைவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் சென்றனர். அழைப்புப் பெற்றவர்கள் அழைத்தவருக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.

திருமணத்துக்குக் காத்திருந்த யோசேப்பையும் மரியாளையும் தேவன் ஒரு உன்னத பணிக்கு அழைத்தார். அப்படியே, குழந்தையாய் பிறந்த இயேசுவுக்கு அவர்கள் பெற்றோரானார்கள். மாத்திரமல்ல, பொறுப்புள்ள பெற்றோராக இயேசுவைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்க்கின்ற பணியையும் உத்தமமாக நிறைவேற்றினார்கள். இதற்காக யோசேப்பும் மரியாளும் பல ஆபத்துக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டபோதும், தமக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொறுப்பை நிறைவேற்ற அவர்கள் தேவசித்தத்துக்குத் தங்களை முற்றிலும் அர்ப்பணித்திருந்தார்கள். தேவபணியைச் செய்வதில் அவர்களுக்குள் ஒருமைப்பாடு இருந்தது. தேவ சித்தத்தைச் செய்கிறோம் என்றதான அர்ப்பணமும் தேவபயமும் இருந்தது. இவைகளே இவர்களைக் கடைசிவரைக்கும் பெலப்படுத்தி நடத்தியது.

இன்று நாமும் பலவிதங்களில் தேவனுடைய வேலைகளைச் செய்கிறோம். ஆனால், நம்மை நம்பி அவர் கொடுத்த பொறுப்புகளை எவ்வளவுக்கு அர்ப்பணிப்போடு செய்கிறோம் என்பதைச் சற்றுச் சிந்திப்போம். ஏனோதானோ என்றும், தங்கள் சுயலாபத்துக்காகவும் தேவபணியை அசட்டையாகச் செய்வோர் அநேகர். நாம் அவரது கரத்தில் பெற்றுக்கொண்டதான பொறுப்புக்களில் அசதியாய் இருப்பதை தேவன் விரும்பமாட்டார். நாம் அர்ப்பணத்துடனும், ஜெபத்துடனும் காரியங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியம்.

அன்பானவர்களே, நமது பொறுப்புக்களை நாம் சரியாகச் செய்து முடிக்கும் போதுதான், “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்; அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள்ளே பிரவேசி” (மத்.25:23) என்னும் தேவனுடைய சத்தத்தை இறுதி நாளிலே நம்மால் கேட்க முடியும்.

“கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்” (எரே.48:10).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது அழைப்பை உணர்ந்து, அர்ப்பணிப்போடு நீர் எங்களுக்குத் தந்த பணிகளை நான் முன்னெடுத்து செல்ல கிருபை தாரும். ஆமென்.