Daily Archives: December 15, 2019

ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 15 ஞாயிறு

பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக (1இரா.8:45) அகில உலகமெங்கும் நடைபெறும் அனைத்து ஆராதனை வேளைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் பற்பல பிரச்சனைகளோடு, பாடுகளோடு வந்து மன்றாடுபவர்களுக்கு கர்த்தரே நீதியும் நியாயமும் செய்தருள வேண்டுதல் செய்வோம்.

வருகையின் காலம்!

தியானம்: 2019 டிசம்பர் 15 ஞாயிறு | வேத வாசிப்பு: 1பேதுரு 1:3-5, 13-21

“…தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின் மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்” (1பேது.1:13).

டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ் எண்ணம்தான் எல்லோருடைய மனதிலும் உண்டாகிறது. ஆனால், கிறிஸ்தவ கலண்டரின்படி, இந்த மாதத்தில் வரும் எல்லா ஞாயிறு தினங்களும் அட்வென்ட் ஞாயிறாகவே அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, கிறிஸ்து பிறந்தது சரித்திர உண்மை; அதேபோல அவருடைய இரண்டாவது வருகையும் நிகழப்போகும் உண்மை. இவை இரண்டையும் இணைத்தே நாம் சிந்திக்கவேண்டும்.

தேவனுடைய அநாதி திட்டப்படி, இயேசு உலகில் வந்து பிறந்தார். அவருட னேகூட நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் எல்லாமே உலகில் வெளிப்பட்டது. மேலும், நமது பாவங்களுக்காக இயேசு தம்மைத் தாமே மரணத்திலூற்றி, மூன்றாம் நாள் சாவை வென்று உயிர்த்தெழுந்ததினாலே என்றைக்கும் ஜீவனுள்ள நம்பிக்கை நமக்குண்டாயிற்று என பேதுரு தெளிவுபடுத்தியுள்ளார். ஆக, இயேவின் பிறப்பு அருளிய நம்பிக்கையை, அவரது மரணம் நமக்கு பூரணப்படுத்தி தந்துள்ளது. ஆகவே, நமக்கு என்ன பாடுகள் சோதனைகள் நேரிட்டாலும், ஆண்டவர் அருளிய சந்தோஷம் சமாதானத்தை நம்மை விட்டு எதனாலும் பறித்துக்கொள்ளவே முடியாது. பாடுகள் வரலாம், வரட்டும்; ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும்போது புகழ்ச்சியும், கனமும், மகிமையும் உண்டாக அதுவே காரணமாகும். அதனால் வரும் மகிழ்ச்சி ஒப்பற்றது. கிறிஸ்து மறுபடியும் வரும்போது நாம் அவரை முகமுகமாய் சந்திப்போம் என்ற நிச்சயமும் நமக்குண்டாகிறது.

இன்று நடைபெறுகின்ற சம்பவங்கள் யாவும், பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி, உலகம் கடைசி நாட்களை நெருங்கிவிட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது. நாமும் அதைக்குறித்து அறியாமல் இல்லை. ஆனால், அந்த உணர்வு உண்டா என்பதுதான் கேள்வி. கேளிக்கைகளும் பாரம்பரியங்களும் நம்மை இறுகக்கட்டி வைத்திருக்கின்றன. அதை எப்போது நாம் உடைத்துக்கொண்டு வெளியேறப்போகிறோம்? கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் கொண்டாடி மகிழும் இந்த நாட்களில், நிகழவிருக்கும் அவரது இரண்டாம் வருகைக்கும் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அத்தோடு பிறரையும் ஆயத்தப்படுத்தும் பொறுப்பும் நமது கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தித்துச் செயல்படுவோமாக.

“கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேதுரு 3:9).

ஜெபம்: அன்பின் தேவனே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்பொழுது நிகழுமாயினும் நான் அவரைச் சந்திக்க ஆயத்தப்பட எனக்கு உதவியருளும். ஆமென்.

சத்தியவசனம்