Daily Archives: December 17, 2019

ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 17 செவ்வாய்

கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக (ஏசா.42:12) இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், மேலாண்மை இயக்குநர் மற்றும் எழுத்துப்பணியில் தேவன் பயன்படுத்தி வரும் சகோதர சகோதரிகளை கர்த்தர் திரள் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த ஜெபிப்போம்.

மணல் வீடு!

தியானம்: 2019 டிசம்பர் 17 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 12:22-34

“உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (லூக்கா 12:34).

கடற்கரையிலே பிரயாசப்பட்டு அழகான மணல்வீடு கட்டி மகிழ்ந்தாலும், அலை திரண்டு வந்து ஒரு நொடியில் அதை அழித்துப்போடுகிறது. இப்படித்தான் நம் அநேகருடைய உலக காரியங்கள் அமைந்திருக்கின்றன. இப்படியிருக்க, நண்பர் ஒருவர் சொந்தமாக ஒரு வீடு வாங்கி, “தேவன் தந்த கூடாரம்” என்று பெயரிட்டார். கேட்டபோது, நாம் இந்த உலகில் கூடாரவாசிகள் போலவே வாழுகிறோமல்லவா என்றார்.

பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேகரித்து வைப்பதைக்குறித்து இயேசு சொன்ன காரியங்களை இன்றைய வேதப்பகுதியில் வாசித்தோம். அன்றாடம் உணவுக்காகவும், உடைக்காகவும் அதாவது அன்றாட உலக தேவைகளுக்காகக் கவலைப்படுவதில் என்ன பயன்? “இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்” என்றார் இயேசு. நாம் தேட வேண்டியது, அழிந்துபோகாத பொக்கிஷமாகிய தேவ ராஜ்யத்துக்கு அடுத்தவைகளையே! அப்போது, நமக்குத் தேவையானதும் கொடுக்கப்படும். மாறாக, எதை நாம் நமது பொக்கிஷமாய்க் கருதுகிறோமோ, எதற்கு நமது வாழ்வில் அதிமுக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதைச் சுற்றியே நமது மனதும் ஓடிக்கொண்டிருக்கும். அதிகமாக தேவ ராஜ்யத்துக்குரியவைகளைச் சிந்தித்து அதைத் தேட வாஞ்சிக்கும்போது, நமது இருதயமானது உலக ஆசைகளை விட்டோய்ந்து, தேவனுடைய காரியங்களையே வாஞ்சிக்கும். அதையே ஆண்டவரும், “உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்றார்.

சிலர் எப்போதும் பணம் சம்பாதிப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்; அதைக் குறித்தே நாள்முழுவதும் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். பணம் தேவையான ஒன்று. அதற்காக, அது நம்மை ஆளுகை செய்ய இடமளித்தால், அதுவே நமது வீழ்ச்சிக்கு முதற்படியாக அமையும். இப்படியான உலக காரியங்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருப்போம். இயேசுவை நமக்கு ஒரு கொடையாக ஈந்த தேவ அன்பை உணர்ந்து, நமக்குரிய உலக ஆஸ்திகளிலிருந்து பிறருக்கு உதவி செய்யலாமே! இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமே! அது பெரிய கிறிஸ்மஸ் பரிசாக அமையும். கிறிஸ்துவுக்கு மகிமை கொண்டு வரும். இதனால் ஒருவராவது மகிழ்ச்சி அடைவார் அல்லவா! உலகத்தில் கிறிஸ்துவினிமித்தம் நாம் இழப்பதைக் குறித்துக் கவலை தேவையில்லை. அவையெல்லாம் பரலோகில் கணக்கு வைக்கப்படும். பண ஆசையை வெறுத்துப் பிறருக்கு உதவுவோம். இல்லாதவர்களை மகிழ்விப்போம்.

“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1தீமோத்தேயு 6:10).

ஜெபம்: பரலோக பிதாவே, இக் கிறிஸ்துமஸ் நாட்களில் இல்லாதவர்களுக்கு என்னுடைய பொக்கிஷத்திலிருந்து எடுத்துக்கொடுக்க கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்