Daily Archives: January 1, 2020

வாக்குத்தத்தம்: 2020 ஜனவரி 1 புதன்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! – 2020

2020 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சத்தியவசன நேயர்கள், பங்காளர்கள், நிகழ்ச்சி ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் யாவருக்கும் இந்த புதிய ஆண்டு ஓர் ஆசீர்வாதமான ஆண்டாய் அமைய வாழ்த்துகிறோம். இந்நாட்காட்டியிலுள்ள வேதவசனங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாய் அமைய தேவன் கிருபை செய்வாராக!


(சங்.32:8)
நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.
ஆதியாகமம் 1,2 | மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 1 புதன்

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங்.123:1).


“பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (செப்.3:20) இப்புதிய ஆண்டிலும் நன்மைகளின் ஆண்டவர் சகல ஜனங்களுக்கும் முன்பாக கீர்த்தியும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக வைத்து இவ்வாண்டை ஆசீர்வதித்துத் தர மன்றாடுவோம்.

யாரை நான் அனுப்புவேன்!

தியானம்: 2020 ஜனவரி 1 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 6:1-8

“…அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8).

2020ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசகர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். தேவனுடைய சமாதானமும் கிருபையும் ஆசீர்வாதமும் உங்கள் குடும்பங்களில் நிறைந் திருக்க வாழ்த்துகிறோம் (ஆ-ர்).

வெகு சீக்கிரமாக ஒரு வருடத்தைக் கடந்து வந்துவிட்டோம். இந்த ஆண்டும் கடந்துவிடும். நமது, காலங்கள் கடந்தாலும் காலங்களையும் கடந்தவர் நம்முடன் இருக்கிறார் என்ற ஒரே நம்பிக்கைதான் நமக்கு பெலனாயிருக்கிறது. அந்தப் பெலனும் தைரியமும் நம்பிக்கையும் தரும் தேவனை இந்த முதல் நாளிலே மனதார ஸ்தோத்தரிப்போமாக. இந்த ஆண்டில் நமக்காக என்ன வைக்கப்பட்டுள்ளதை என்பதை நாம் அறியாவிட்டாலும், தேவனின் கரத்தில் நம்மை ஒப்படைப்பதே சிறந்தது.

முழுமனதுடன் செய்கின்ற ஒவ்வொரு சேவையையும் தேவன் பாராட்டுகிறார். இதற்கு பட்டம், பதவி அல்ல; உண்மையான இருதயம், அதாவது, தேவனுடைய பரிசுத்தத்திற்கு முன்னால், தான் பாவியென்பதை ஒப்புக்கொள்ளும் இருதயமே தேவை. தேவனுடைய மகிமையால் நிறைந்திருந்த தேவாலயத்தில், ‘சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்று சேராபீன்கள் கூப்பிட்டுச் சொல்லி தேவனை ஆராதித்ததைக் கேட்ட ஏசாயா தன் இயலாமையை உணர்ந்தார். “ஐயோ! அதமானேன்” என்று கதறினார். அங்கேதானே அவருக்குத் தேவனுடைய பரிசுத்தமாக்குதல் கிடைத்தது. “யாரை அனுப்புவேன்” என்ற தேவனுடைய அங்கலாய்ப்பின் அழைப்பைக் கேட்க முடிந்தது. உடனடியாகவே, ‘இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்’ என்று தன்னை ஒப்புக்கொடுத்தார் ஏசாயா.

இந்தப் புதிய ஆண்டின் இந்த முதல் நாளிலும் தேவனுடைய சத்தம் நமது செவிகளில் ஒலிக்கட்டும். நாட்கள் வெகு வேகமாகக் கடந்து செல்லுகிறது. இனிக் காலம் செல்லாது. புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தை அறிவிக்க, தேவனுக்காய் பணி செய்ய தேவன் அழைக்கின்ற சத்தம் கேட்கிறதா? இதற்கு பட்டம் பதவி அல்ல; உண்மையான மனந்திரும்புதல், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், தேவனுடைய அன்பால் உடைந்த உள்ளம் இவைதான் தேவை. வேத அறிவு முக்கியம்; ஆனால் அதிலும் முக்கியம் உண்மையுள்ள இருதயம். ஆகவே, இந்த முதல் நாளிலேயே தேவனுக்காக நம்மை அர்ப்பணிப்போம்!

“தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்.51:17).

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, இப்புதிய ஆண்டை எங்களுக்குத் தந்திருக்கிறீர் உம்மைத் துதிக்கிறோம். தேவ அழைப்பின் சத்தத்தைக் கேட்டு உடைந்த உள்ளத்தோடு உம்மிடம் திரும்புகிறோம், எங்களை ஏற்றுக் கொள்ளும். ஆமென்.

சத்தியவசனம்