Daily Archives: January 1, 2020

அதிசய வழிகள்

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2020)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: எண்ணாகமம் 22:35


பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய் விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்கு கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான். (எண்.22:13 )


தேவன் தம்முடைய திட்டங்களை அதிசயமான வழிகளில் செயல்படுத்துகிறார்’ என்று பிரபல ஆங்கில பாடலாசிரியர் வில்லியம் கூப்பர் ஒருமுறை எழுதியுள்ளார். மோவாபிய அரசர் பாலாக் மற்றும் மெசெப்பெத்தோமியாவின் பெத்தூரில் இருந்த பிலேயாமின் வாழ்விலும் தேவனுடைய திட்டம் ஒரு வித்தியாசமான வழியில் வெளிப்பட்டது.

எமோரியர்களை வென்ற இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு வாக்கு பண்ணியிருந்த தேசத்தை நெருங்கி விட்டனர். எரிகோவின் அருகில் இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பாளயமிறங்கினார்கள். இஸ்ரவேலரின் இத் துணிச்சலான செயல் மோவாபியருக்கு அதிர்ச்சியை அளித்தது. இஸ்ரவேலரின் திரள்கூட்டத்தையும் பலத்தையும் கண்ட மோவாபிய அரசர் பாலாக் அச்சமுற்று மீதியானிய பிரபுக்களுடன் கூட்டணி அமைத்தான். ஆனாலும் வலிமை மிக்க இஸ்ரவேலருக்கு முன் மோவாபிய – மீதியானியரின் படை பலவீனமாயிருந்தது. எனவே, பாலாக் இயற்கைக்கு அப்பாலான தெய்வீக சக்தியின் உதவியை நாடி, தீர்க்கதரிசி பிலேயாமை அழைத்து வர மூப்பர்களை அனுப்பினான்.

பேயோரின் குமாரனான பிலேயாம் தீர்க்கதரிசி மெய்தேவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். ஆனால், அவர் பின்பற்றின முறை கேள்விக்குரியது. மற்ற தேவர்களைப்போல யேகோவாவும் ஒரு தேவன்; என அவன் நம்பினான். கிழக்கத்திய சமுதாயத்தில் அனைத்து கடவுள்களையும் நம்புவது தனது தொழிலுக்கு சாதகமாயிருக்கும் என அவன் நினைத்தான். மோவாபிய அரசர் பாலாக்கிடமிருந்து வந்த தூதர்கள் ஒரு மாறுபட்ட கோரிக்கையை பிலேயாமிடம் வைத்தனர். எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, மோவாபிய தேசத்தில் இறங்கியிருக்கிறார்கள்; எனவே, தனது நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மோவாபிய அரசன் பயந்து கலங்கினான். இஸ்ரவேல் மக்களை பிலேயாம் சபித்தால் குறிசொல்வதற்குரிய கூலியையும் வெகுமதியையும் அவனுக்குத் தருவதாக மோவாபிய மூப்பர்கள் கூறினார்கள்.

எகிப்திலிருந்து வந்த மக்களை சபிக்க தேவனுடைய ஆலோசனையை பாலாக் நாடினான். ஆனால், அவனுக்கு யேகோவாவின் பதில் தெளிவாக இருந்தது. “நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும்வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார் (எண்.22:12). எனவே பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களிடம் “உங்கள் விரோதியான இஸ்ரவேலை சபிக்கக்கூடாது என்று யேகோவா தடை பண்ணிவிட்டார்” என்று கூறிவிட்டான்.

பிரபுக்கள் கொண்டுவந்த இந்த எதிர் பாராத மறுமொழி மோவாபிய அரசனை பயமுறுத்தவில்லை. மறுபடியும் அவர்களிலும் கனவான்களாயிருந்த பிரபுக்கள் அநேகரை பிலேயாமினிடத்துக்கு அனுப்பினான். பிலேயாமுக்கு அதிக கனத்தையும் செல்வத்தையும் அவனுடைய இருதயத்துக்கு விருப்பமான யாவற்றையும் தருவதாக பாலாக் அரசன் வாக்களித்தான். உன்னதமான தேவனுக்கு உண்மையாயிருப்பதைக் காட்டிலும் பிலேயாமின் பேராசை அதிகமாயிருந்தது. ஆயினும் இஸ்ரவேலை சபிக்கும் காரியத்தைச் செய்யத் தயங்கினான். தேவனு டைய தெளிவான வார்த்தையை நம்புவதைவிட அவன் தன்னுடைய புகழையும் கீர்த்தியையும் அதிகமாக இச்சித்தான். எனவே, தேவன் அவனுடைய இச்சையை நிறைவேற்றி அழிவுக்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய வெளிப்படையான சித்தத்துக்கு விரோதமாய் பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான் (எண்.22:21).

பழைய ஏற்பாட்டின் இப்பகுதியில் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பேசாத ஒரு மிருகம் தன்னுடைய எஜமானனிடத்தில் பேசும் அதிசய நிகழ்வை நாம் வாசிக்கிறோம். இதைவிட தேவன் தம்முடைய அற்புதத்தைச் செய்வதற்கு அநீதத்தின் கூலியை விரும்பி, தன்னை உயர்வாக எண்ணிய ஒரு கள்ளத் தீர்க்கதரிசியைத் தெரிந்துகொண்டார் என்பதும் அதிசயமே. பேயோரின் குமாரனாகிய பிலேயாம் பழைய ஏற்பாட்டின் மிகச்சிறந்த மேசியாவைப் பற்றிய ஒரு தீர்க்க தரிசனத்தை உரைத்தார். எண்ணாகமம் புஸ்தகத்தில் கிறிஸ்துவின் செய்தியை அவர் கூறியுள்ளார். “அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (எண். 24:17).

பரிசுத்த வேதாகமத்தில் மேசியாவின் இராஜ்யத்தைக் குறித்த இத்தகைய தீர்க்க தரிசனத்தை வேறெங்கும் காணமுடியாது. கூலிக்காக வஞ்சகத்திலே விரைந்தோடி, சுய மகிமையைத் தேடிய தீர்க்கதரிசி ஒருவரிடமிருந்து இந்த தீர்க்கதரிசன உரை வந்தது தேவனுடைய அற்புதமான திட்டமாகும். தேவனுடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நம்மால் முழுவதும் அறிந்துகொள்ள இயலாது. நாம் அதை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. அவரை நாம் முற்றிலும் நம்பவேண்டும். இதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.


அதிகாலைப் பாடல்:

போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டுவது எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2020)

[01]
திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் 7 மணிக்கு ஒலிபரப்பாகும், சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். டாக்டர் சாம் கமலேசன் பேசினார். தற்போது Prof.Edison பேசிக்கொண்டிருக்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர் அருமை, பாடல்களும் அருமை, சத்தியவசன நிகழ்ச்சிகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mr.J.A.Judson, Salem.


[02]
Praise the Lord, I am mind depression due to family circumstances. But Today (10.8.19) meditation words written by Bro. Vashini Earnest encoura ged me. The Lord has strengthen me, thro’ the words. Thanks be to the Lord.

Sis.Kamala Robert, Coimbatore


[03]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழை, படித்து பயனடைந்து வருகிறேன். ஊழியம் மேன்மேலும் சிறப்புறவும், பன்மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் இறைவனை வேண்டுகிறேன்.

சகோ.தங்கராஜ், கொட்டாரம்.


[04]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு தங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்தும் வாட்ஸ்அப் மூலம் அனைத்து ஜெபக் குறிப்புகளையும் வாசித்து வருகிறேன். என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது. எனது பேரப்பிள்ளைகளுக்காக ஜெபித்து வருகிறீர்கள் தங்களுக்காகவும் ஊழியத்துக்காகவும் அன்றன்று செய்திகளை தயாரித்துக் கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்காகவும் தினந்தோறும் ஜெபித்துவருகிறேன்.

சகோ.ஞானக்கண் செல்வராஜ், மதுரை


[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய பெலனையும், விசுவாசத்தில் வளர்ச்சியையும் கொடுக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

Mr.K.Immanuel Gideon Inbadas, Vellore


[06]
Praise the Lord, I refer your Programme in Nambikkai TV on 22nd September. I have heard your programme in Feba, then now in Nambikkai TV long break. The Message about inferiority complex and God’s Chossing was good, A blessed Message. Please pray for me, and my well being Thanks.

Mr.Mathew


[07]
உங்களுடைய TV நிகழ்ச்சியை பார்த்தேன் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தேன். உங்களுடைய செய்தி (கர்த்தர் கொடுத்த வார்த்தை) என்னைத் தொட்டது, தேற்றியது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சகோதரி மெர்லின்தாஸ், நாகர்கோவில்


[08]
அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற இதழை நாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறோம். அதிலுள்ள இறை வார்த்தைகளும், விளக்கங்களும், எங்கள் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. தங்களோடு இணைந்து பணியாற்றும் அத்தனை ஊழியர்களுக்காகவும், பணிகள் மேலும் சிறப்புடன் நடைபெறவும் எங்களது அன்றாட ஜெபத்தில் வேண்டி வருகிறோம்.

Mrs.Janet George, Madurai.

ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று வாக்குப்பண்ணின தேவாதி தேவனின் இனிய நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தர் நம்மேல் வைத்த இரக்கத்தினாலே இன்னுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக நாம் பிரவேசிக்க அவர் உதவி செய்துள்ளார். வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற தேவன் இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளையும் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதமாய் நடத்துவார். நமது அன்றாட வாழ்க்கைக்குரிய அனைத்து தேவைகளிலும் கர்த்தர் நம்மோடிருப்பார். ஆகவே, நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்வோம். இப்புதிய ஆண்டிலே நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர வேண்டுதல் செய்கிறோம்.

2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டில் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் புதுப்பித்துக்கொண்டு இவ்வூழியத்தைத் தாங்க அன்புடன் நினைவூட்டுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாத தியானங்களை சகோதரி தர்ஷ்னி சேவியர் அவர்கள் புத்தாண்டுக்குள் பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரும் பிரயோஜனமடையும்படியாக தியானங்களை எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் இரண்டாம் வருகைக்கு நாம் ஆயத்தமாகுபடியாக அருமையான தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்