ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 8 புதன்

நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்கு செவிகொடுப்பேன் (எரேமி.29:12) இம்மாத சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படியாகவும் விண்ணப்பம் பண்ணும்படியாகவும் வந்த பங்காளர்களை கர்த்தர்தாமே அளவில்லாமல் ஆசீர்வதிக்கவும் தேவமகிமை விளங்கவும் வேண்டுதல் செய்வோம்.

பிரதான கற்பனை

தியானம்: 2020 ஜனவரி 8 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 22:34-40

“தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1யோவான் 4:20).

‘அப்பா, நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்’ என்கிறான் மகன். ‘மகனே, அப்படியென்றால், நான் சொல்லுவதை நீ செய்வாயா’ என்று அப்பா கேட்கிறார். “அதை மாத்திரம் என்னிடம் கேட்க வேண்டாம் அப்பா. அது வேறு இது வேறு” என்கிறான். அப்படியானால் மகன், தன் அப்பாவிடம் வைத்திருக்கிற நேசம் எப்படிப்பட்டதாயிருக்கும்?

‘நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக்; கைக்கொண்டிருந்தால், என் அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’ என்றும், ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது’ என்றும் இயேசு சொன்னார் (யோவான் 15:10,12) தேவனிடத்தில் அன்புகூருவது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூருவதும் முக்கியம். இதைத்தான் யோவானும் தன் நிருபத்திலே வலியுறுத்துகிறார்.

கடைசி காலத்தில் அநேகருடைய சுபாவ அன்பு தணிந்துபோகும் என்று வேதாகமம் எச்சரித்துள்ளது. அதேபோல, இன்று குடும்பங்களிலும், சபைகளிலும்கூட அன்பு வெகுவாகவே தணிந்துபோகிறது. ஒவ்வொருவரும் சுய தேவைகளுக்காய் ஜெபித்துக்கொண்டு, பிறரைக் குறித்த கரிசனை அற்றவர்களாய் வாழுவதைக் காண்கிறோம். இந்த நிலைமை மாற்றமடைய நாம் ஆற்றவேண்டிய பங்கு என்ன? குறைச்சலிலுள்ள சகோதரனுக்கு நமது இருதயத்தை அடைத்துக்கொண்டு, தசமபாகத்தை மாத்திரம் ஒழுங்காக செலுத்தி, ஆசீர்வாதத்தை எதிர்பார்த்தல் ஒரு முதல் தரமான சுயநலப் போக்கு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தேவன் இதை விரும்புவாரா?

முதலாம் கற்பனையாக தேவனில் அன்புகூருவதையும், அதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனையாக நம்மை நாம் நேசிப்பதுபோல பிறரிலும் அன்புகூரவேண்டும் என்றும் இயேசு கற்பித்தார். இரண்டும் அவசியம். இப்படியிருக்க, நமது சகோதரனுக்குக் குறைச்சலுண்டு என்று கண்டும், நமது இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டு, நம்மிடத்தில் தேவ அன்பு நிலைகொண்டிருக்கிறது என்று கூறுவது தகுமா?

“தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான் அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை” (1யோ. 2:10).

ஜெபம்: அன்பின் தேவனே, குறைச்சலோடு உள்ள எங்களது சகோதரர்களுக்கு இயன்ற உதவியை எந்தவித எதிர்பார்க்குதலும் இல்லாமல் செய்யும் மனதையும் கிருபைகளையும் தயவாய் எங்களுக்குத்தாரும். ஆமென்.