Daily Archives: January 26, 2020

ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 26 ஞாயிறு

அண்ட சராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்திவருகிற தேவன் தாமே நமது இந்திய தேசத்தின் 71வது குடியரசுதினத்தை கொண்டாடிவரும் இந்நாளில் தேசத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்வதற்கான உயர்ந்த பல நலத்திட்டங்கள் உருவாகுவதற்கு அருள் செய்திடவும், தேசத்தின் செழிப்பு பாதுகாக்கப்படவும் மன்றாடுவோம்.

நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு!

தியானம்: 2020 ஜனவரி 26 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 8:19-25

“…சிருஷ்டியானது …மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” (ரோமர் 8:21).

குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் நம் தேசத்திற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். தேசத்தின் நன்மையை நாம் அனுபவிக்கும்படியாகவும் பாரத தேசத்திலே நாம் விடுதலையோடு தேவனை ஆராதிக்கும்படியாகவும் கிருபைகளை தேவன் தந்திருக்கிறபடியால் நாம் அவரைத் துதிக்க வேண்டும். இருப்பினும் இன்னும் அறியாமையின் இருளில் மூழ்கிக்கிடக்கும் மக்கள் ஜீவ ஒளியாகிய இயேசுவைக் காணவேண்டும். இக்கடைசி நாட்களில் வாழ்கின்ற நாம் தேசத்தின் சமாதானத்திற்காகவும், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொள்ளவும் ஊக்கமாய் ஜெபிப்போம். தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு மாபெரும் எழுப்புதலைத் தருவார். (ஆ-ர்).

பிரசங்கி நூலில் குறிப்பிடப்பட்ட ‘மாயை’ என்ற சொல்லின் பொருள், ‘குளிர் காலத்தில் தென்பட்டு மறையும் சுவாசம்’ என்பதாகும். நமது கடந்த காலங்களைச் சற்று சிந்தித்துப் பார்த்தால், எல்லாமே தோன்றி மறைந்துவிட்ட மாயையாகத்தானே தெரிகிறது! ஏன் இந்த நிலைமை? இதற்கு ஒரே பதில், ‘பாவம்’. தேவன் சிருஷ்டித்த பூரண நிலைமையிலிருந்து சகல சிருஷ்டியையும் பாவமானது கீழே தள்ளிவிட்டது. அதனால் முழு உலகமும் தன் மீட்புக்காக தவிப்புக்குள்ளாகியிருக்கிறது என்று பவுல் விளக்குகிறார். உலகமே தன் மீட்புக்காகத் தவிக்கும்போது, அதே உலகம் நமது தேவையைப் பூர்த்தியாக்குவது எப்படி? ஆவியானவருக்குள்ளான சகல ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட பாவ உலகின் வேதனைகளிலிருந்து வெளிவரவும், ஆவியின் நிறைவை அடைந்து, கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கைக்காகவும் தவிக்கிறோம். இந்தத் தவிப்பானது நமது உள்ளுணர்வில் கலந்திருக்கும்போது இந்த உலகம் மாயையாகத் தோன்றாமல் வேறு எவ்விதத்தில் நமக்கு தோற்றமளிக்கக்கூடும்?

கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலகையும் அதன் காரியங்களையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதிலேதான் நமது வாழ்வின் வெற்றி தோல்வி தங்கியிருக்கிறது. தோற்றத்தில் அழிவுக்குள்ளான, ஆவிக்குரிய விதத்தில் பாவத்தால் கறைப்பட்டதான இந்த உலகைப் பார்த்து நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. ஏனெனில் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. எதையும் நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகினோமானால் அந்த நம்பிக்கை தெரியும். தேவனுடைய அநாதி திட்டம், புதிய வானம், புதிய பூமி, பாவம், துன்பம், வியாதி, கண்ணீர், தீமை எதுவுமற்ற ஒரு புதிய வாழ்வு நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் கிறிஸ்துவைக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகில் வாழும் வரைக்கும், என்றும் கிறிஸ்துவோடு வாழுவோம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு வாழவும், நம்பிக்கையற்ற நமது தேச மக்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்து, தீமை யோடு எதிர்த்துப் போராடவும் நாம் கிருபை பெற்றிருக்கிறோம்.

“நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” (நீதி-23:18).

ஜெபம்: “பிதாவே, நித்திய நம்பிக்கையை நினைத்து, இவ்வுலக வாழ்விலேயே உமக்குள் உறுதியோடும் அர்த்தத்தோடும் வாழ கிருபை செய்யும். ஆமென்.”

சத்தியவசனம்