Daily Archives: February 11, 2020

ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 11 செவ்வாய்

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் (யாக்.1:6) படிப்பிலே ஞாபகசக்தி மற்றும் ஞானத்தில் குறைவுள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்காகவும் விசுவாசத்தோடே ஜெபிப்போம். ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய கர்த்தர்தாமே பிள்ளைகளோடு கூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்

தியானம்: 2020 பிப்ரவரி 11 செவ்வாய் | வேத வாசிப்பு: மாற்கு 13:3-8

“…பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்” (லூக்கா 21:11).

ஏறத்தாழ இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சீனிக்கும் மாவுக்கும் மக்கள் காத்து நின்றதை மறக்கமுடியாது. பஞ்சம் வந்துவிட்டது என்று அப்போது நாம் பேசிக்கொண்டதுண்டு. ஆனால், அது பஞ்சமல்ல. வரிசையில் காத்திருந்தாலும் ஏதோ நமக்குக் கிடைத்தது. நாம் பட்டினி கிடக்கவில்லை. பஞ்சம் என்று சொல்லும்போது, வானத்தின் கதவுகள் அடைபடும், பூமி காயும்; விளைச்சல் நிற்கும். இந்நிலை நீடிக்கும் போது குடிநீரும் உணவும் கிடைக்காது. முழுதேசமும் பாதிக்கப்படும். வேதாகமத்திலே பஞ்சம் ஏற்பட்ட பல சம்பவங்களைப் படித்திருக்கிறோம். இன்று, விஞ்ஞானம் பெருகி, ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் மனிதன் முன்னேறிவரும்போது பஞ்சம் ஏற்படுமா? அணைக்கட்டுகளில் நீரைத் தேக்கிவைத்து, கடல்நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறோம்; பெரிய விளைச்சல்களைத் தரும் விவசாய சாகுபடிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியிருக்க பஞ்சத்திற்கு வாய்ப்பு ஏது என்று நாம் நினைக்கலாம். பஞ்சம் என்றால் அது சோமாலியாவிலும், எத்தியோப்பியாவிலுமேதான் என்று எண்ணினோம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் வடகொரியாவிலே பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தது. இது நாளை நமக்கும் வராது என்று சொல்லமுடியாது.

அடுத்தது, ‘கொள்ளை நோய்கள்’. நாளுக்கு நாள் இதுவரை கேள்விப்படாத பலவித புதுப்புது நோய்கள் மனித உயிர்களைக் காவு கொண்டுவருகிறது என்பதும் உண்மைதான். சில வருடங்களின் முன்னர், ஒரு பத்திரிகையிலே, இனி வரும் ஆண்டுகளில், மருத்துவ சிகிச்சைகளையும், விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் மீறுமளவுக்கு நோய்கள் அதிகரிக்கும் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதுவரை சாதாரண வைரஸ் காய்ச்சலதானே என்ற விஷயம் மாறி, வைரஸ் காய்ச்சல் இன்று நம் எல்லோரையும் கலங்கடிக்கிறது. டெங்கு நோயினால் ஏற்படுகின்ற மரணம்தான் எத்தனை?

இப்படியாக, சொல்லப்பட்ட அடையாளங்கள் நிறைவேறிவரும்போது நாம் என்ன சொல்லுவோம்? கிறிஸ்துவின் வருகைளைக் கணக்கெடுக்காமல் வாழுகிறோமா? இந்த ஆரம்ப அடையாளங்களே நம்மைக் கலங்கடிக்குமானால் முடிவை எதிர்கொள்வது எப்படி? ஆனால், நாம் இன்று கலங்குவது ஏற்படுகின்ற நோய்களினிமித்தமா? அல்லது, இவை கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் என்பதாலா? அன்பானவர்களே, என்றும் இயேசுவையே சார்ந்து வாழப் பழகிக்கொள்வோம். அப்பொழுது அவரது வருகை நிச்சயம் நமக்கு மகிழ்ச்சி தரும்.

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என்ன வந்தாலும், உமக்குள் திடமாய் ஸ்திரமாய் தினமும் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்