Daily Archives: February 12, 2020

வாக்குத்தத்தம்: 2020 பிப்ரவரி 12 புதன்

நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன். (வெளி.3:16)
லேவியராகமம் 8,9 | மத்தேயு 27:1-26

ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 12 புதன்

ஏனெனில் இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:20) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை தமது மகிமையின் பிரசன்னத்தால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.

இருதயம் சோர்ந்துபோகும்!

தியானம்: 2020 பிப்ரவரி 12 புதன் | வேத வாசிப்பு: லூக்கா 21:23-28

“ஆதலால், பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” (லூக்கா 21:26).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்களில் இயற்கையில் நிகழும் காரியங்கள் மாத்திரமல்ல; மனுஷனுடைய வாழ்விலும் பல காரியங்கள் நிகழும் என்று ஆண்டவர் சொல்லிவைத்துள்ளார். அதாவது, நடைபெறும் தொடர் சம்பவங்களினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போய்விடும். 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி இரவு, இந்தோனேஷியாவுக்கு அருகில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு, அதனால் மீண்டும் ஒரு சுனாமி எழும்பலாம் என்ற அச்சத்தின் காரணமாக இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கடலோரத்தில் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்கள் இரவோடு இரவாக பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றதை மறக்கமுடியுமா?. ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் மாறும் முன்னர் இன்னுமொன்றா என்று எல்லாரும் மனம் சோர்ந்துபோயினர்.

‘மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்’ என்பது, ‘மனுஷருடைய இருதயம் பயத்தினாலே பாதிக்கப்பட்டிருக்கும்’ என்பதைக் குறிக்கிறது. “மனித உணர்வுகளில் மேலோங்கி நிற்பது எது” என்று ஒரு பத்திரிகை நிருபர் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டாராம். அதற்கு விஞ்ஞானி, எந்தவித தயக்கமுமின்றி, “பயம்தான்” என்று கூறிவிட்டு, “இந்த உலகம் எங்கே போய் முடியுமோ என்ற பயம் இன்றைக்கு சாதாரண மனிதருக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற விஞ்ஞானிகளுடைய உள்ளத்தையும் கவ்வியிருக்கிறது” என்று தொடர்ந்து கூறினாராம்.

அன்பானவர்களே, இன்று நமது நிலைமை என்ன? அடுத்தடுத்துப் பிரச்சனைகள் தாக்கும்போதே சோர்ந்துவிடுகிற நாம், இயேசுவின் வருகையின் அடையாளங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தாக்கும்போது என்ன செய்வோம்? ஆனால் நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நமது ஆண்டவர் நம்மோடிருக்கிறார். அவரைப் பற்றிக்கொண்டிருக்கும் மனது இருந்தாலே போதும், கர்த்தர் பூரண சமாதானத்தைத் தந்துவிடுகிறார். அப்படியிருக்க, நாம் மனம் சோரலாமா? ஏராளமான வாக்குகள் நமக்கிருக்க, இன்னமும் சோர்ந்து போகிறோம் என்றால், நாம் கர்த்தரை இன்னமும் உறுதியாய் பற்றிக்கொள்ளவில்லை என்றுதான் எண்ணவேண்டும். எல்லாப் பாரங்களையும் தேவ பாதத்தில் விட்டெறிந்துவிட்டு, நடுவானத்தில் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமாவோமாக.

“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).

ஜெபம்: இரக்கத்தின் தேவனே, உலகத்தில் நடைபெறும் காரியங்களை எண்ணி மனசோர்வ டையாதபடிக்கு தைரியத்தோடு உமது வருகைக்கு ஆயத்தமாக கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்