Daily Archives: February 14, 2020

ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 14 வெள்ளி

கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே கீதவாத்தியங்களை வாசித்துப்பாடுவோம் (ஏசா.38:20) துதிக்குப் பாத்திரராகிய தேவாதி தேவனை உயர்த்திப்பாடும் பாடல்கள் அடங்கிய சத்தியவசன பாடல் சிடிக்கள் மற்றும் செய்தி சிடிக்கள் திரளான மக்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்படி வேண்டுதல் செய்வோம்.

அறிவும் அக்கிரமமும்

தியானம்: 2020 பிப்ரவரி 14 வெள்ளி | வேத வாசிப்பு: தானியேல் 12:1-4

“…அறிவும் பெருகிப்போம்.” தானியேல் 12:4

இயேசுவின் வருகைக்கு முன்னதாக பூமியிலும், வானத்திலும் மாத்திரமல்ல, மனிதரில் நடக்கும் சில மாற்றங்களையும் அடையாளங்களாக வேதம் தெளிவு படுத்துகிறது. “..முடிவுகால மட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்” (தானி.12:4). இவை தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள். எல்லாக் காலங்களிலும் வாழுகின்ற மனிதர், சரித்திரத்தில் தேவனுடைய செய்கைகளை அறிந்து, நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளவே இந்த வார்த்தைகள் அன்று முத்திரை போடப்பட்டது. இவற்றைக்குறித்து அன்று முழுமையான விளக்கம் தெரியாவிட்டாலும், முடிவுகாலத்தில் வாழுகிற நாம், அவற்றின் நிறைவேறுதலைக் காண்கிறோம். ஆனால், மக்களோ இவற்றின் விளக்கத்தைத் தேடி, தங்கள் அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பது தற்போது நடக்கின்ற காரியம், இல்லையா!

“அநேகர் அங்கும் இங்கும் ஓடி ஆராய்வார்கள்” என்பதில் மக்கள் பிரயாணம் செய்வது அதிகரிக்கும் என்பது விளங்குகிறது. உலக வரலாற்றிலே என்றுமில்லாத அளவிற்கு இன்று மக்கள் பிரயாணம் செய்கின்றனர். விண்வெளிப் பயணங்களும், ஆராய்ச்சிகளும் அதிகரித்துவிட்டது. இதனால் மனிதனின் அறிவும் பெருகிவிட்டது. இது மறுக்கமுடியாத உண்மை.

ஆராய்ச்சிகளும் தேடுதலும் அதிகரிக்க, உறவுகளுக்கிடையே விரிசலும் அதிகரிக்கிறது. அறிவு பெருகப்பெருக தர்க்கங்களும், விவாதங்களும் அதிகரிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் மனிதனைக் கவர்ந்திழுக்க, அவற்றிலுள்ள நன்மைகளிலும் பார்க்க, தீமையினால் மனித மனங்கள் கறைப்படுகின்றன. இதனால் அக்கிரமம் அதிகரிக்கிறது. இன்று எப்பக்கம் திரும்பினாலும் அக்கிரமம் தலைதூக்கியிருக்கிறது. “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” (மத்.24:12) என்ற இயேசுவின் வார்த்தையும் நிறைவேறிவருகிறது. இதற்கு, இன்று அதிக பயன்பாட்டிலுள்ள கைப்பேசி பெரியதொரு உதாரணமாகும். இவை உறவுகளை வளர்க்கிறதைப் பார்க்கிலும். விரோதங்களை உண்டாக்குவதே அதிகம்.

அன்பானவர்களே, இனியும் என்ன சொல்லுவோம்? நாமும் நமது குடும்பமும் காக்கப்பட வேண்டுமானால், செய்யக்கூடியது ஒன்றுதான். நோவா தன் குடும்பத்தைக் காப்பதற்காக கர்த்தருக்கு எப்படி கீழ்ப்படிந்தாரோ, அவ்வாறே நாமும் தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

“அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவுபெருத்தவன் நோவு பெருத்தவன்” (பிர.1:18).

ஜெபம்: எங்களை பாதுகாக்கும் தேவனே, நோவாவும் அவன் குடும்பமும் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பெரும் வெள்ளத்திற்கு தப்பினதுபோல நானும் என் குடும்பமும் வரப்போகும் அழிவினின்று தப்பி உமது வருகையில் காணப்பட கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்