Daily Archives: February 23, 2020

ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 23 ஞாயிறு

…தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? (உபா.4:7) கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறபோது நமக்கு சமீபமாய் வந்து ஆசீர்வதிக்கிற தேவன் இருக்க ஆராதனையை அலட்சியமாக்கி உலககாரியங்களில் ஈடுபாடு கொள்கிற கிறிஸ்தவர்கள் மனம்மாற ஆராதனையை கனப்படுத்த ஜெபிப்போம்.

என்றைக்கும் கைவிடாத கர்த்தர்!

தியானம்: 2020 பிப்ரவரி 23 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 14:1-7

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” (யோவான் 14:1).

“…நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்” (யோவா.14:3). ஆண்டவர் திரும்பவும் வரும்போது நம்மைத் தம்மிடமாய் சேர்த்துக்கொள்வார் என்ற இந்த வாக்கு நமக்கு ஆறுதல் தருகிறது. இயேசு, யாருக்கு இதைக் கூறினார்? தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிற, மறுதலிக்கப்போகிற, தம்மைவிட்டுச் சிதறி ஓடப்போகிற தம்முடைய சீஷர்களுக்கே இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆவிக்குரிய வாழ்விலே மேடுபள்ளங்கள், ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். நமது வாழ்விலும் எத்தனையோ ஆவிக்குரிய வீழ்ச்சிகள் வந்திருக்கலாம். ஆனாலும், ஆண்டவரிடம் திரும்பும்போது அவர் நம்மைக் கைவிட மாட்டார். நாம் கலங்காதபடி காத்துக்கொள்வதாக அவர் வாக்களித்துள்ளார்.

ஆனால், நாம் செய்யவேண்டியது ஒன்றுண்டு. “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்றார் இயேசு. அதாவது, நமது வாழ்வுமுறையானது, என்னதான் நேர்ந்தாலும், நம்மைத் தம்மிடமாய் சேர்த்துக்கொள்ள ஆண்டவர் வருவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதாக இருக்கவேண்டும். இவ்வுலகம் நமக்குரியதல்ல; நமது குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. ஆகையால், என்ன நேர்ந்தாலும் நமக்குக் கலக்கம் இல்லை என்பதைச் சாட்சியாக நாம் வாழ்ந்துகாட்டவேண்டும். திரும்பவும் வந்து நம்மைச் சேர்த்துக்கொள்ளும் வரைக்கும் ஆண்டவர் நம்மை திக்கற்றவர்களாக விடவில்லை. ஒரு தேற்றரவாளனை நமக்காக அருளியுள்ளார். இவற்றிற்கும் மேலாக நமக்கு என்ன வேண்டும்!

வாழ்விலே சோர்வுற்று கலங்கிநிற்கும் தேவபிள்ளையே, ஒருவேளை நம்பியிருந்த ஒருவராலே கைவிடப்பட்டு, தனித்துவிடப்பட்டு, வெளியில் சொல்ல முடியாத மனப்பாரத்தோடுகூட நீங்கள் யாராவது இருக்கலாம். மனிதர் கைவிட்டாலும் நம்மை ஒருபோதும் கைவிடாதவரும், நமக்காகத் தம்மையே கொடுத்தவரும், நம்மோடு இருப்பவரும், நம்மைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள வருகிறவருமாகிய ஆண்டவர் நமக்கு உண்டு; ஆகவே, கலக்கம் வேண்டாம்; நாம் எந்த நிலையிலிருந்தாலும், ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சியடைந்திருந்தாலும், அந்த நிலைமையுடன், உண்மைத்துவமான உள்ளத்துடன் இயேசுவிடம் திரும்புவோமாக. அப்பொழுது அவர் நம்மைச் சேர்த்துக்கொள்வார். நம்மைச் சரிப்படுத்துவார். இவ்வுலக வாழ்விலேயே கைவிடாதவர் நித்தியத்தில் நம்மை விட்டுவிலகுவாரா!

“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18).

ஜெபம்: கைவிடாத தேவனே, நீர் இருக்கும் இடத்தில் நாங்களும் இருக்கும்படியாக நீர் மறுபடியும் வந்து எங்களை உம்மிடத்தில் சேர்த்துக்கொள்வேன் என்று எங்களுக்கு அளித்த வாக்குக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். ஆமென்.

சத்தியவசனம்