ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 24 திங்கள்

கடந்த ஆண்டில் சத்தியவசன வானொலி தொலைகாட்சி ஆதரவாளர் காணிக்கையாக தாங்கின அனைவருக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரித்து 2020 ஆம் ஆண்டிலும் புதிய ஆதரவாளர்கள் எழும்பவும் இவ்வூழியங்கள் கர்த்தர் நாமம் மகிமைப்பட தடையின்றி செய்யப்பட வேண்டுதல் செய்வோம்.

பலனளிக்கின்ற கர்த்தர்

தியானம்: 2020 பிப்ரவரி 24 திங்கள் | வேத வாசிப்பு: ஏசாயா 40:6-12

“அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது” (ஏசா. 40:10).

நற்செய்திப் பணியாளர் ஒருவர் பல கிராமங்களாகத் திரிந்து ஊழியத்தை முடித்துவிட்டு, பசி தாகம் எடுக்க களைப்பு மேலிட்டவராக தன் ஊருக்குத் திரும்பி வந்தார். அப்போது, ஊருக்குள்ளே அலங்காரங்கள், மேளதாளங்கள், வாத்திய இசை முழங்க ஆர்ப்பாட்டமாய் ஒரு பெரிய வரவேற்பு ஆயத்தம் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு, ஒருவரை அணுகி, விசாரித்தார். அதற்கு அவர், “நம்முடைய ராஜா காட்டில் வேட்டையாடி, வெற்றிகரமாகத் திரும்பி வருகிறார். அவருக்குத்தான் இந்த வரவேற்பு” என்று சொன்னாராம். இந்த ஊழியருக்கு ஒரு பெரிய மனச்சோர்வு ஏற்பட்டது. “ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமானவரைச் சேவித்துவிட்டு வருகிற எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுக்க ஒருவரில்லை. மிருகங்களை வேட்டையாடிக் கொன்றுவிட்டு வருகிற இவனுக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு” என்று தனக்குள்ளே முணுமுணுத்தார். அப்பொழுது அவருக்குள்ளே ஒரு குரல் பேசியது. “மகனே! நீ இன்னும் உன் சொந்த வீட்டுக்குத் திரும்பி வரவில்லையே. நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பி வரும்போது உனக்கு அங்கே மகத்தான வரவேற்பு காத்திருக்கிறது” என்றது அந்தக் குரல்.

அன்பானவர்களே, நமக்கு இப்பூமி சொந்தமல்ல; நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கேயிருந்து நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து வர நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அவர் வந்து நம்மைத் தம்மிடம் கூட்டிச் சேர்ப்பார். வருகிறவர் வெறுங்கையோடே வரமாட்டார் என்பதெல்லாம் நமக்குப் புதிய விஷயங்கள் அல்ல. “இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது” என்றார் இயேசு. இப்படியிருக்க அடிக்கடி நமக்குள் சோர்வு ஏற்படுவது ஏன்? இந்த உலகம் நம்மையும், ஊழியத்துக்கான நமது பிரயாசங்களையும் கணக்கெடுக்காமற் போகலாம். ஆனால் எல்லாக் கணக்கும் ஆண்டவரிடம் உண்டு. அவர் நம்மை ஏமாற்றமாட்டார்.

அதற்காக, ஆண்டவர் பலன் தருவார் என்று சொல்லி அவருக்கு நாம் சேவை செய்வதில்லை. அவர் நம்மில் கொண்டுள்ள அன்புக்காக, நாம் மீட்கப்பட்டதினிமித்தம் அவருக்காய் உழைப்போம். சோர்வைக் களைந்து விடுவோம். ஆண்டவர் நம்மைச் சேர்த்துக்கொள்ள மாத்திரமல்ல, நமக்குரிய பலன்களையும் சுமந்து வருவார்.

“நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ. 3:23,24).

ஜெபம்: பிரதிபலன் அளிக்கும் தேவனே, நீர் எங்களுடைய பிரயாசங்கள், உழைப்பு, பாடுகள் ஆகிய யாவற்றையும் கணக்கில் வைத்திருக்கிறீர். அதற்கேற்ற பிரதிபலனோடு நீர் சந்திக்க வரப்போகிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.