ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 28 செவ்வாய்

சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் (மத்.10:42) ஆண்டவராகிய இயேசு திருவுளம் பற்றினபடி விசுவாச பங்காளராக, ஆதரவாளராக ஜெபத்தினால் உதாரத்துவமாய் சத்தியவசன ஊழியத்தை தாங்கின அனைவரையும் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

விளிம்பில் நிற்பவர்களை…

தியானம்: 2020 ஏப்ரல் 28 செவ்வாய் | வேத வாசிப்பு: ஏசாயா 25:1-8

“…நீர் ஏழைக்குப்பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும்,பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசா. 25:4).

எப்போதாவது தனித்து நின்றதுபோன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? “அழைக்கப்பட்டிருந்த ஒரு விருந்துக்குப் போயிருந்தபோது, அங்கே யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. பெரிய பெரிய புள்ளிகள் அநேகர் அங்கே கூடியிருந்தார்கள். மெதுவாக அந்த இடத்தைவிட்டுத் திரும்பினேன். அப்போது என் பெயரை யாரோ அழைத்தார்கள். அவர்தான் எனக்கு அழைப்பு விடுத்தவர். “உங்களைத்தான் தேடுகிறேன்” என்று சொல்லி, என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்னர்தான் நானும் கூச்சமின்றி அந்த விருந்தில் பங்குகொண்டேன்” என்று ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தள்ளப்பட்ட, நொருங்குண்ட, கைவிடப்பட்ட, ஒதுக்கிடம் அற்றது போன்ற சூழ்நிலைகள் நம்மை உயிரோடே சாகடித்து விடுகின்றன. இதனால் இன்னும் அதிக தனிமைக்குள் தள்ளப்பட்டு விடுவதுமுண்டு.

ஆனால், இயேசு இவ்வுலகில் அப்படிப்பட்டவர்களையே நாடிச் சென்று நம்பிக்கை கொடுத்தார். எந்த சமுதாயம் அவர்களை விலக்கியதோ, அதே இடத்துக்கே அவர்களை தலைநிமிர்ந்தவர்களாக அனுப்பிவைத்தார். அவரிடம் சொஸ்தமடைய வந்த குஷ்டரோகிகளைக் குணப்படுத்தி அவர்களுடைய ஊருக்கே அனுப்பி வைத்தார். சீஷர்கள் துரத்திவிட எத்தனித்த சிறுவர்களை தம்மிடம் தாமே வரவழைத்து ஆசீர்வதித்து அனுப்பினார். சமுதாயம் தள்ளி வைத்த பாவிகளுடனும் ஆயக்காரருடனும் பந்தி அமர்ந்து சாப்பிட்டார். பிசாசுகள் பிடித்திருந்த மனுஷன் குணமடைந்ததும், அவன் இயேசுவுடன் இருக்கவே ஆசைப்பட்டான். ஆனால் அவரோ, அவன் தன் குடும்பத்துடன் இணைந்து வாழவென அவனது ஊருக்கே அனுப்பி வைத்தார். வாழ்வின் நுனியில் நின்று போராடினவர்களையெல்லாம் இயேசு தேடிச்சென்றார். ஒரு பெண்ணுக்கு விடுதலையளிப்பதற்கென்றே சமாரியாமட்டும் இயேசு நடந்தார் அல்லவா!

இன்றும் வாழ்வின் விளிம்பில் எத்தனையோ நபர்கள் தத்தளிக்கிறார்கள். பெரியவிருந்தில் பங்குகொள்ள முடியாதபடி ஒதுங்கி நிற்கிறார்கள். ஏன் நாம் சென்று அவர்களை அடையாளங்கண்டு அழைத்துவரக்கூடாது? நமது தேவன் ஏழைக்குப் பெலனும் எளியவனுக்குத் திடநம்பிக்கையுமானவர். அந்த நம்பிக்கையைப் பிறருக்குக் கொடுக்கவேண்டிய உத்தரவாதம் இன்று நம்மிடம்தானே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தநாட்களில் விசேஷமாக நொருங்குண்டவர்களை தேவனிடம் கொண்டுவரும் பணிக்கு அதிகமுக்கியம் கொடுப்போமா?

“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங். 34:18).

ஜெபம்: ஏழைக்கும் பெலனும் எளியவனுக்கு திடநம்பிக்கையுமானவரே, என் தனிமையில் நீர் என்னைத்தேற்றிய தருணங்களை எண்ணி உமக்கு நன்றி செலுத்துகிறேன். பிறரின் வாழ்வுக்கு நம்பிக்கை அளிக்க என்னை பயன்படுத்தும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 27 திங்கள்

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவா.15:!6) தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடம் ஒன்றை கிடைக்கச் செய்து ஆசீர்வதித்திடவும், ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் பரலோகத்தின் தேவன்தாமே ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

எனக்குள்ளுமா?

தியானம்: 2020 ஏப்ரல் 27 திங்கள் | வேத வாசிப்பு: ஏசாயா 57:15-21

“…உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், …நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).

“வெளிநாட்டிலுள்ள மகன் பேரப்பிள்ளைகளுடன் வருகிறான் என்று கேள்விப் பட்டதும் எனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்படியே அவன் வந்தான். ஆனால், எங்கள் வீடு தன் பிள்ளைகளுக்கு வசதியில்லை என்று சொல்லி, பெரியதொரு விடுதியில் தங்க சென்றுவிட்டான். என் உள்ளம் உடைந்துவிட்டது.” பெரியவர் அடக்கமுடியாது அழுதேவிட்டார். ஆனால், மகா பரிசுத்த தேவன், பாவிகள் நம்முள்ளேயும் வாசம் பண்ண வந்தாரே, எப்படி!

கடவுள் என்பது பெயர் அல்ல; அது ஒரு உருவகப் பெயர். “அந்தந்த பாஷைக்காரரால், அந்தந்த மொழிகளில், ‘கடவுள்’ சொல்லர்த்தப்படுகிறது. ஆனால், தமிழில் சொல்லப்படுகிற ‘கடவுள்’ என்ற பதத்தைப்போல அர்த்தம் பொதிந்த பதம் வேறெந்தப் பாஷையிலும் காணமுடியாது” என்று ஒரு குருவானவர் ரசித்து சொன்னார். உண்மைதான், கடவுள் என்ற தமிழ்ச்சொல் அவரை புரிந்துகொள்ள வெகு இலகுவான விளக்கத்தைத் தருகிறது. ஒன்று, அவர் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறவர்; எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்; “உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான்…” என அவரே தம்மை குறித்து பிரகடனப்படுத்தியிருக்கிறார். அப்போ, அவரை நாம் அணுகமுடியுமா? முடியாது என்பதால்தான், கடந்து நிற்கிற அவர், அதேசமயம் நம்மிடத்திலும் வாசம் பண்ணுமளவுக்கு தம்மைத் தாழ்த்தினார். இன்று அவர் நம்முடனும் நமக்குள்ளேயும் இருக்கிறார். நமக்குள்ளாகவா? ஆம், அவரது பிள்ளைகளுடன் அவர் வாசம் பண்ணுகிறவர். இவர்தான் ‘கடவுள்’. அதாவது, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரிசுத்தர், நமக்குள்ளும் வாசம் பண்ணுகிறார். இது சாதாரண விஷயம் அல்ல. நமக்குள் வாசம் பண்ண நிபந்தனை உண்டு. “…நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுவேன்” என்று தாமே கூறியுள்ளார். அவர்களுடைய இருதயத்தையும் ஆவியையும் உயிர்ப்பிப்பதாக வாக்குப் பண்ணியுள்ளார். உன்னதத்தில் வாசம் பண்ணினாலும், நொறுங்குண்டவர்களிடத்திலும் அவர் வாசம் செய்வது எத்தனை ஆச்சரியமானது!

ஆம்,பெருமைக்கும் அகங்காரத்துக்கும் தேவனிடத்தில் இடமில்லை. எவன் தன்னைத் தாழ்த்துகிறானோ, அவர் தயை நாடி ஓடுகிறானோ, அவனை அவர் ஒருபோதும் தள்ளமாட்டார். மாத்திரமல்ல, அவனுடனே கூடவே அவர் இருக்கி றார் என்பதுதான் தேவனைக்குறித்து நாம் கொண்டிருக்கிற தைரியம்.

தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங். 51:17).

ஜெபம்: பரலோக தேவனே! நீர் வாசம்பண்ண ஏற்ற இடமாக என் இருதயத்தை மாற்றும். எனக்காக தம்மையே தாழ்த்திய உமக்கு முன்பு என்னை தாழ்த்துகிறேன், எனக்குள்ளும் வாசம் பண்ணி என்னை உயிர்ப்பியும், ஆமென்.