ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 30 செவ்வாய்

அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.106:1) இம்மாதத்தில் கர்த்தர் நம்மோடிருந்து நமது தேவைகளைச் சந்தித்தார். தேவனருளிய பாதுகாப்பிற்காக, சமாதானத்திற்காக அற்புதமான வழி நடத்துதலுக்காக முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நன்றி சொல்லி அவரை மகிமைப்படுத்துவோம்.

கர்த்தர் உண்டுபண்ணின நாள்!

தியானம்: 2020 ஜுன் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 118:15-24

“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங்கீதம் 118:24).

நாட்களை, நல்லநாள் கெட்டநாள் என்று சிலர் தரம் பிரித்துப் பார்ப்பது உண்டு. இந்த நாட்களில் நல்ல காரியங்களைச் செய்யலாம். சில நாட்களில் நல்ல காரியங்களைச் செய்யமுடியாது என்று நாட்களை ஒதுக்கி வைத்துவிடுவோரும் உண்டு. இவ்விதமாக பலவித எண்ணக் கருத்துக்களைக் கொண்ட மக்கள் மத்தியில் வாழுகின்ற தேவபிள்ளைகளாகிய நமது எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறது? ஊரோடு ஒத்துபோய் ஒய்யாரமாய்ப் பாடுவோமா? அல்லது தேவனுக்காய் தைரியமாய் எழுந்து நிற்போமா?

சங்கீதம் 118ஐ எழுதியவர் இதை ஒரு துதியின் சங்கீதமாக வடிவமைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுவது: “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்”. கர்த்தர் ஒவ்வொருநாளையும் உருவாக்கி அதை நல்லது என்று கண்டார். கர்த்தர் நல்லது என்று கண்ட நாட்களை, ஏன் நாம் பார்த்துப் பயப்படவேண்டும்? ஒவ்வொரு நாளையும் தேவ பாதத்தில் வைத்து, அமர்ந்திருந்து, அவரது ஆசீர்வாதத்தோடும், வழிநடத்துதலோடும் ஆரம்பிப்போமானால், அந்த நாள் நமக்கு இனிய நாளாகவே அமையும். ஒவ்வொரு நாளும் கர்த்தர் உண்டுபண்ணின நாள்; அதிலே களிகூர்ந்து மகிழுவதே நம்மீது விழுந்துள்ள பொறுப்பாக இருக்கின்றது.

பாவம் நிறைந்த இந்த உலகிலே வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், பார்த்து விலகி ஓடுவதற்கு எத்தனையோ கெட்ட காரியங்கள் உண்டு. பயங்கர பாவங்கள், பிசாசானவன் தந்திரமாக நம்மை வீழ்த்திப்போட வகைபார்க்கும் சோதனை என்னும் வலைகள், கெட்ட நடத்தைகள், மாம்சத்தின் கிரியைகள் இப்படியாக எத்தனை எத்தனையோ நம்மை அகப்படுத்திக்கொள்ள நம் முன்பே தயாராக இருக்கின்றன. ஆனால் நாம் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, தேவன் உண்டு பண்ணின நாட்களைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தேவையற்ற பயம் நமக்கு வேண்டாம் பிரியமானவர்களே, தேவன் உண்டுபண்ணின ஒவ்வொரு நாளையும், அவருடைய பாதத்தண்டையில் அமர்ந்திருந்து அவருடைய ஆசீர்வாதத்துடனும், வழிநடத்துதலுடனும் ஆரம்பிக்கப் பழகிக்கொள்ளுவோம். அவர் நமக்காக தந்த வாழ்நாட்களிலெல்லாம் அவருக்குள்ளாக களிகூர்ந்து மகிழுவோம். “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14) என்ற வார்த்தையின்படி, கர்த்தர்தாமே இன்றைய நாளிலும் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் (சங்.34:1).

ஜெபம்: “அன்பின் தேவனே, ஒவ்வொரு நாளையும் உமது பாதத்தண்டையில் வைத்து, அமர்ந்திருந்து, உமது ஆலோசனைகளோடு ஆரம்பிக்க எனக்கு அதிகமான வாஞ்சையையும், ஆவலையும் தந்தருளும், ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 29 திங்கள்

“நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோ.8:34) வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்யும் பரிசுத்த ஆவியானவர்தாமே சத்தியவசன அலுவலகத் தேவைகளை சந்தித்து நடத்தவும், சத்தியவசன ஊழியர்கள், முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகள் யாவருடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்க பாரத்துடன் மன்றாடுவோம்.

பெலனில்லாதவர்கள்

தியானம்: 2020 ஜுன் 29 திங்கள் | வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 3:1-11

“நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங் கொடாமல், பாலைக் குடிக்கக் கொடுத்தேன்” (1கொரிந்தியர் 3:2).

யாராவது நம்மைப் பார்த்து, ‘நீங்கள் பெலனில்லாதவர்கள். அதிக மெலிவாக இருக்கிறீர்கள்’ என்று சொன்னால் நமக்குப் பிடிக்குமா? ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் பல தடவைகளிலும் நம்மையறியாமலேயே நாம் ஆவிக்குரிய பெலவீனராய் ஆகிவிடுகிறோம். எனது சபையென்ன? எனது போதகர் யார்? நான் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டேன், என்று இவைகளைக் குறித்து பெருமையாய்ப் பேசுவதிலேயே நமது கால நேரங்களை வீணடித்து விடுவதுண்டு. நம்மைத் தேவனுக்குள்ளாக வழிநடத்தும் வழிகாட்டிகள் எத்தனை பேர் இருந்தாலுங்கூட, நமக்கு முன்னுதாரணமான ஒரே வழிகாட்டி கிறிஸ்துவே! அவரையே நாம் முழுமையாகப் பின்பற்றவேண்டும். ஆனால், இன்று நாம், சபையையும், ஊழியர்களையும், முன்னுதாரணமாகக்கொண்டு பின்பற்றுவதால், அவர்கள் விழும்போது கூடவே நாமும் விழுந்துபோவதுண்டு. நான் பவுலைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் என்று கூறிய கொரிந்து சபை மக்களைப் பார்த்து, “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங் கொடாமல் பாலைக் குடிக்கக் கொடுத்தேன்” என்கிறார் பவுல்.

நமது ஆவிக்குரிய ஜீவியத்தில், குழந்தைத்தனமான பேச்சுக்களையும், செயல்களையும் தள்ளிவிட்டு, பெலனுள்ளவர்களாய், கிறிஸ்துவுக்காய் எழுந்து பிரகாசிக்க பிரயத்தனப்படுவோமாக. ஊழியர்களை எழுப்புகிறவர் கர்த்தர். ஊழியங்களை நடப்பிப்பவரும் அவரே. எனவே, ஊழியத்தின் எல்லா மகிமையும் அவர் ஒருவருக்கே உரித்தானதாகும். வித்தியாசமான ஊழியங்களை நம் ஒவ்வொருவர் கைகளிலும் கொடுத்த கர்த்தருக்கே மகிமையுண்டாக நாம் அவரின் திருப்பணியைச் செம்மையாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

தேவனுடைய ஊழியங்களைச் செய்கின்ற நம் ஒவ்வொருவர் மத்தியிலும் நாம் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் காத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அதுவே நமக்கு மிகப் பெரிய பெலனாயிருக்கிறது. இதைக் குறித்து பவுல் கூறும்போது, “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், விளையச் செய்தவர் கர்த்தரே” என்கிறார். நாம் செய்யும் ஊழியத்தின் விளைச்சல் எப்படிப்பட்டதாய் அமைந்துள்ளது? விளைச்சலை விளைவிக்கிறவரிடம் கொடுத்துவிட்டு, நமது பங்கை, சேர்ந்து ஒற்றுமையாக செயலாற்ற நம்மை ஒப்புக்கொடுப்போம். நமது கைகளில் தேவன் தந்துள்ள பொறுப்புக்களை இனங்கண்டு, அதைச் சரிவர நிறைவு செய்ய தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1பேதுரு 2:3).

ஜெபம்: அன்பின் தேவனே, பெலனில்லாதவனாக, ஆவிக்குரிய வாழ்வில் குழந்தையைப் போல இருக்கும் என்னை உமது வார்த்தையால் போஷித்து, உமக்காக எழும்பிப் பிரகாசிக்க உதவி செய்தருளும். ஆமென்.