வாக்குத்தத்தம்: 2020 ஜூலை 1 புதன்

புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்.


கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். (உபா.31:8)
2நாளாகமம் 21-23; அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 1 புதன்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங்.121:1).


“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்.” (உபா.31:8) . இப்புதிய மாதத்தை தேவன் தாமே நமக்கு ஆசீர்வதித்து இம்மாதம் முழுவதும் நமது குடும்பத்தின் தேவைகளை சந்திக்கவும் எவ்வித கொடிய வாதையும் நம்மை அணுகாதபடி பாதுகாக்கவும் வேண்டுதல் செய்வோம்.

கிருபையின் அழைப்பு

தியானம்: 2020 ஜூலை 1 புதன் | வேத வாசிப்பு: யாத்.19:1-9

“…சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது” (யாத்.19:5).

குழந்தைகள் இல்லத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வந்த ஒரு தம்பதியினரிடம், இத்தனை பிள்ளைகள் மத்தியில் உங்கள் பெயரைச் சொல்ல குறிப்பாக இந்தப் பிள்ளையைத் தெரிந்தெடுத்தது ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுதான் நமக்கும் புரியவில்லை” என்று சொன்னார்கள்.

பூமியெல்லாம் என்னுடையது என்று சொன்ன தேவன், இஸ்ரவேலை மாத்திரம் அவர்களுடைய எல்லாத் தவறுகள் மத்தியிலும் தமக்குச் சொந்த சம்பத்தாகத் தெரிந்தெடுத்தது எப்படி? அதுதான் தேவ கிருபை! உலகம் அவரை அறியவும், அவருடைய வார்த்தைகளையும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவும், உலகுக்கு நற்செய்தி புறப்படும் வழியாகவும் தேவன் இஸ்ரவேலைத் தெரிந்தெடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்குச் சொந்த ஜனமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவர்கள் அவருடைய வாக்கை உள்ளபடி கேட்டு, உடன்படிக்கையைக் கைக்கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்பியதில் தவறு இல்லையல்லவா! பல தெய்வ வணக்கத்தைக் கொண்டிருந்த எகிப்திலிருந்து புறப்பட்டவர்கள், பலவித தெய்வங்களைக் கொண்ட பலவித ஜாதிகள் வாழும் கானானுக்கு போகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையில், தாமே இஸ்ரவேலின் தேவன் என்று கர்த்தர் உடன்படிக்கை பண்ணுகிறார். அவர்களும் ஏகமாய் கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பதில் சொன்னார்கள்.

தேவபிள்ளையே, இன்று நாமும் பலவிதமான தெய்வ வணக்கங்கள், தெய்வங்களாகிவிடக்கூடிய பல உலக காரியங்கள் மத்தியில் வாழுகிறோம். அன்று, ‘செய்வோம்’என்று மனப்பூர்வமாக உடன்படிக்கை செய்த இஸ்ரவேலர் வெகு சீக்கிரமாக விலகிதேவனைத் துக்கப்படுத்தினார்கள். அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்பதைத் தேவன்முன் அறியாமலா இருந்தார்? இல்லை, ஆனாலும், அவர்களை அவர் தெரிந்துகொண்டது, அவருடைய கிருபை!

அப்படியிருக்க, இன்று கிறிஸ்துவின் இரத்தத்தின் மகிமையை அனுபவிக்கிற நாமும் தேவனைத் துக்கப்படுத்தலாமா? அவருடைய கற்பனைகளை உதாசீனம் செய்து, அன்றைய பரிசேயர்போல அவருடைய கற்பனைகளுக்குப் புதிய உருவம் கொடுத்து, கற்பனைகளை உடன்படிக்கையை மீறலாமா? கிறிஸ்துவின் சாட்சிகளாக அவர் நம்மை நம்பி அழைத்தது அவருடைய சுத்த கிருபை! அந்த நம்பிக்கையைக் குலைத்து தேவனைத் துக்கப்படுத்தாமல், வார்த்தைக்குக் கீழ்ப்படிய நம்மை ஒப்புவிப்போமாக.

ஜெபம்: கிருபையின் தேவனே, எவ்வளவு பெரிய ஆச்சரியம்! நீர் என்னை உமக்கென்று தெரிந்துகொண்டீரே, நீர் என்மேல் வைத்த கிருபை மகா பெரியது. இறுதிவரை உமக்காய் வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.

பழிவாங்குதல்

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்ட் 2020)
– Dr.உட்ரோ குரோல்

அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை (1 சாமு. 25:36).


வேதாகமத்தில் காணப்படும் மிக மோசமான மனிதர்களில் ஒருவன் நாபால். அவன் ஒரு பெரிய செல்வந்தனான மேய்ப்பன். அவனுக்கு அநேகம் ஆடுகளும் வேலைக்காரர்களும் இருந்தனர். ஒரு சமயத்தில் தாவீதும் அவனுடைய மனிதர்களும் நாபாலின் வேலைக்காரர்களுக்கு அதிக நன்மை செய்து பாதுகாப்பும் கொடுத்ததாக நாம் அறிகிறோம். தாவீதின் மனிதர்களுக்கு உணவு தேவை ஏற்பட்டபொழுது அவன் சில வாலிபர்களை நாபாலிடத்தில் உதவி கேட்டு அனுப்பினான்.

தாவீதின் மனிதர்கள் கர்மேலில் இருந்த நாபாலினிடத்துக்கு சென்ற பொழுது அவன் அவர்களைப் பரியாசம் பண்ணி உதவ மறுத்து விரட்டிவிட்டான். நாபால் ஒரு முரடன் எனவும், தீமை செய்கிறவன் எனவும் வேத புத்தகம் வர்ணிக்கிறது. அதாவது அவனுடன் பழகுவதும் பேசுவதும் மிகக் கடினமானதொன்று என்று பொருள்படும். தேவனுடைய அபிஷேகம் தாவீதின் மேல் இருப்பதை உணராத நாபால் “தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?” என்று கேட்டான். அவன் தாவீதை தன்னிச்சையாக செயல்படும் மனிதர்களில் ஒருவனாக எண்ணிவிட்டான். தாவீதின் மனிதர்களை நாபால் வெறும் கையுடன் அனுப்பிவிட்டான். இவர்கள் தாவீதிடம் திரும்பிவந்து நாபால் எவ்வாறு நடந்துகொண்டான் என்றும் அவன் கூறிய வார்த்தைகளையும் கூறியபொழுது தாவீதின் கோபம் உச்சநிலையை அடைந்தது.

நட்பற்ற மனப்பான்மை கொண்ட நாபாலுக்கு எதிராக தாவீதின் போர்ச் சேவகர்களில் நானூறு பேர் பட்டயத்துடன் சென்றனர். கொடுங்கோலன் நாபாலுக்கு விரோதமாய் எழுந்த தாவீதின் சினத்தின் விளைவை, நாபாலின் மனைவி அபிகாயிலின் சமயோசித செயலால் தேவன் அவனைத் தடுத்தார். கோபமாயிருந்த தாவீதுக்கு தேவையான பொருட்களைக் காணிக்கையாகக் கொண்டு வந்து தனது கணவனுக்கு விரோதமாய் செயல்பட வேண்டாம் என்று அவள் ஞானமாய்ப் பேசினாள். தேவமனிதனான தாவீதுக்கு தேவன் அனுப்பிய தூதனாக அவள் காணப்பட்டாள். “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்தவராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக என்று தாவீது கூறினான். நாபாலின் மனப்பான்மை மன்னிக்க முடியாதது. அதற்கு தாவீதின் செயலும் மன்னிக்க முடியாததே ஆகும். ஆனால் அவன் அபிகாயிலின் விண்ணப்பத்துக்கு செவிகொடுத்தான். பவுல் ரோம் விசுவாசிகளுக்கு “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோ.12:19) என்ற ஆலோசனையைப் பின்பற்றினார்.

அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. அதிகாலையில் நாபாலின் வெறி தெளிந்த பொழுது அவனது உயிரைக் காப்பாற்ற தான் செய்தனவற்றையும் தாவீதின் நற்பண்பையும் தெரிவித்தாள். முரடனான நாபால் இதைக் கேட்டபொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப் பின்பு, அவன் செத்தான். அபிகாயிலின் அறிவாற்றல் நாபாலின் துன்மார்க்கத்தை அவன் தலையின் மேல் விழும்படி தேவன் அனுமதித்தார். தாவீது மதியீனமான செயலைச் செய்யாதபடி அவர் தடுத்தார்.

இராபர்ட் ஈ லீ என்னும் தளபதியிடம் நேசக்கூட்டணியைச் சார்ந்த அவருடைய உடன் தளபதிகளில் ஒருவரைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. இந்த தலைவர் தளபதி லீயைப் பற்றி அநேகக் கேவலமான குறிப்புகளைக் கூறியிருந்தார். ஆனால் லீ அவர் ஒரு நல்ல வீரர் என்றும் சிறந்த அலுவலர் என்றும் குறிப்பிட்டார். உடனே ஒருவர், “தலைவரே அவர் உங்களைப் பற்றிக் கூறிய மோசமான காரியங்களை அறியீர்களா?” என்று வினவினார். அதற்கு லீ “அது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துக்களைதான் கேட்டீர்களே தவிர, என்னைப்பற்றிய அவரது கருத்துக்கள் அல்ல” என்று பதிலளித்தார்.

ஆம். மற்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறு மொழிகளையோ பழிச்சொற்களையோ கூறினாலும் நாம் அவ்வாறு செய்யக்கூடாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பையே நாம் அவர்களிடம் காட்டவேண்டும். இன்று உங்களுடைய எதிரிகள் அநேக தவறான காரியங்களைப் பரவச்செய்தாலும் அவர்களுக்கு எதிராக நீங்கள் எவ்விதமான பழிவாங்கும் செயல்களிலும் இறங்கக்கூடாது. அப்பகைவனிடம் அன்பாய்ப் பேசி தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இறங்க இடங்கொடுங்கள். அப்பொழுதுதான் கடினமான சூழல்கள் தேவனுடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டுவரும்.


அதிகாலைப் பாடல்:

நீர் எனக்கு வைத்திருப்பதை நான் அறிய உதவும்;
என்னை விடுதலை செய்யும்; அற்புத சாவியை என்னிடம் தாரும்.
அமைதியாய் ஆயத்தமாய்க் காத்திருக்கிறேன்.
உம் சித்தம் செய்ய என் கண்களைத் திறந்தருளும்.
தேவ ஆவியானவரே என்னை ஒளிரச்செய்யும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்ட் 2020)

[01]
அன்புள்ள சகோதரருக்கு அன்பின் ஸ்தோத்திரம், எங்கள் வாழ்வில் உங்கள் அனுதின தியானம், ஞாயிறு ஆராதனை, ரேடியோ நிகழ்ச்சி, திங்கள் குருத்தோலை பிரசங்கம், மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. சகோதரி சாந்தி பொன்னு எழுதும் ஒவ்வொரு செய்தியும், எங்களை ஆறுதல்படுத்துகிறது. ஆலயம் செல்லமுடியாத எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதம் உங்கள் ஊழியம்தான். கர்த்தரோடு ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம்.

Sis.A.Leelabai, Madurai.


[02]
I appreciate very much your Ministry, you are doing the gospel work with dedication and devotion. I thank the Lord for your dedicated spiritual service which you are rendering to Christian brothers and sisters.

Mr.P.Vincent, Srivilliputhur


[03]
ஞாயிறு அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். Prof.Edison அவர்களின் செய்தி மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. நான் ரோம கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவன்.

Mr.Stephen, Coimbatore


[04]
14-06-2020 அன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் எடிசன் அவர்களின் வருகையைப் பற்றிய செய்திகள் ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.

சகோதரி ரெபேக்காள், சென்னை


[05]
மதிப்பிற்குரிய சத்தியவசன ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, தாங்கள் எங்கள் மீது அன்பு வைத்து தவறாமல் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் மற்றும் காலண்டர் அனைத்துக்கும் மிகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் மனதுக்கு தேனிலும் இனிமையாக உள்ளது, வேதவினாப்போட்டி சத்தியத்தை அறிந்துகொள்ள பயனுள்ளதாகவுள்ளது நானும் பதில் எழுதி வருகிறேன் நன்றி.

Mrs.S.சுந்தரி, மதுரை.


[06]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை என்னுடைய மாமா மூலம் எனக்கு கிடைத்தது. அதை படித்தபோது எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. எனக்காகவும் எனது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், எனது எதிர்காலத்திற்காகவும் எனது பாதுகாப்பிற்காகவும் ஜெபித்துக்கொள்ளவும், மிக்க நன்றி.

Sis.கி.எப்சிபா, மதுரை.


[07]
வாட்ஸ் ஆப்பில் நீங்க அனுப்புற தேவ சேதி ரொம்ப பிரயோஜனமாக இருக்குதுங்க. ரொம்ப நன்றிங்க. நல்லா புரிகிற மாதிரி இருக்குங்க. உணர்வடைய செய்யதுங்க வாழ்க்கையில கடவுளுக்கு பிரியமா வாழனும் ஆசையை உண்டாக்குதுங்க. ஆண்டவரோட அன்ப புரிய வைக்குதுங்க. வாழ்க்கையில மாற்றத்த வரவைக்குதுங்க. நிறைய நேரம் உங்க மெசேஜை கண்ணீரோட படிக்குறோம்ங்க, ரொம்ப நன்றிங்க.

(Bro.Francis Antony)

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்ட் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

வாதை நம் கூடாரத்தை அணுகாமல் பாதுகாக்கும் அன்பின் தேவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது நமது தேசத்திலும் உலகமெங்கும் நடைபெற்று வரும் காரியங்களை பார்க்கும்போது தேவன் ஒருவர்மட்டுமே நமக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்க முடியும். அவரது நித்திய புயங்கள் நமக்கு ஆதாரமாயிருக்கிறது. பரவிவரும் கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து நமது தேசத்தையும் குடும்பங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கவும் சபை கூடிவருவதற்கு தற்போது இருக்கின்ற தடைகள் நீங்கவும் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம்.

தற்போதுள்ள தடை காலத்தை ஆவிக்குரிய விதத்தில் குடும்பமாய் ஆராதிப்பதிலும் தனி ஜெபத்திலும் வேதத்தை வாசிப்பதிலும் தேசத்திற்காக மன்றாடுவதிலும் செலவழிப்போம். அவருடைய வருகைக்கு ஆயத்தமாவதில் அதிக ஜாக்கிரதையாய் செயல்படுவோம். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபே-5:16).

இவ்விதழில் ஜூலை மாதத்தில் முதல் 17 நாட்களுக்குரிய தியானங்களை சகோதரி சாந்திப் பொன்னு அவர்கள் பல தலைப்புகளிலும் மீதமுள்ள நாட்களுக்குரிய தியானங்களை சகோதரர் தர்மகுல சிங்கம் அவர்கள் கிறிஸ்து நமக்காக ஏற்றுக்கொண்ட பாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் குறித்தும் எழுதியுள்ளனர். மேலும் ஆகஸ்டு மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து விசேஷித்த தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்