ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 4 செவ்வாய்

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். (சங்.119:18) இம்மாத தியானங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்கவும் வாசிக்கின்ற ஒவ்வொருவருடனும் தேவன் பேசவும் அவர்களது வாழ்வில் மாறுதல் அடையவும் தியானங்களை எழுதிய சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவும் வல்லமையாய் எடுத்து உபயோகிக்கவும் மன்றாடுவோம்.

சூழ்நிலைகளுக்கும் அப்பால்

தியானம்: 2020 ஆகஸ்ட் 4 செவ்வாய் | வேத வாசிப்பு: வெளி.1:1-3

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும்,… வெளி.1:3

விசுவாசத்தினால் 2000 பிள்ளைகளைப் போஷித்து வளர்த்தவரும், உல கெங்கும் சுவிசேஷத்தை எடுத்து சென்றவருமாகிய ஜார்ஜ் முல்லர் அவர்கள், ஒருமுறை கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, மூடுபனி அதிகமாக இருந்ததால், மாலுமி கப்பலை நிறுத்திவைத்தார். முல்லர் அவர்கள், தான் சனிக்கிழமை மதியம் குறித்த இடத்திற்கு சென்றே ஆகவேண்டும் என்றார். மாலுமியோ, அது சாத்தியமில்லை என்றார். “உமது கப்பல் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்க முடியாது போனால் தேவன் வேறு வழியைக் காட்டுவார். கடந்த 57 வருடங்களில் நான் தவறியதில்லை. உள் அறையில் போய் ஜெபிப்போம் வாரும்” என்றார் முல்லர். மாலுமியோ, மூடுபனியின் ஆபத்தைக் காட்டி எரிந்து விழுந்தார். “என் கண்கள் மூடுபனி எவ்வளவு அடர்த்தியாயிருக்கிறது என்பதைக் கவனிக்காது. மாறாக, என் வாழ்வின் சூழ்நிலைகளை ஆண்டு நடத்தும் ஜீவனுள்ள தேவனையே அவை நோக்கும்” என்று கூறிய முல்லர் முழந்தாளிட்டு ஒரு சாதாரண ஜெபம் செய்தார். அதன்பின், மாலுமியும் ஜெபிக்க ஆரம்பித்தார். அப்போது முல்லர் மாலுமி தலைவனை தடுத்து, “முதலாவது, தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை உமக்கு இல்லை. அடுத்தது, நான் இயேசு பதிலளித்துவிட்டார் என நம்புகிறேன். ஆகையால் மேலும் ஜெபிக்க வேண்டாம்” என்று தடுத்துவிட்டார். மாலுமியோ திகைத்தார். மேலும் முல்லர், “கடந்த 57 வருடங்களாக என் ஆண்டவரை அறிவேன். ஒரு நாளாகிலும் என் இராஜாவின் சமுகத்தில் என் ஜெபம் கேட்கப்படாமல் இருந்ததில்லை. நீர் எழுந்து கதவைத் திறவும்” என்றார். என்ன ஆச்சரியம்! மூடுபனி நீங்கியிருந்தது. ஜார்ஜ் முல்லர் அவர்களும் சரியாக சனிக்கிழமைதான் சேரவேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்தார்.

தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும், வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் அந்த சங்கதிகளால் பயப்படவோ, பயத்தினால் மனந்திரும்ப வேண்டும் என்றோ இவை பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் அன்று விசுவாசிகள் ரோமாபுரி ராயனால் மிகுந்த உபத்திரவங்களுக்கு ஆளானார்கள், உயிரோடே எரிக்கப்பட்டார்கள், சிலுவையில் அறையப்பட்டார்கள். உயிரோடே சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில், கண்களை ஏறெடுத்து, தேவன் சூழ்நிலைகளுக்கும் மேலானவர் என்பதை உணர்ந்து, மரணத்திலும் மகிழ்ச்சியுடன் மரிப்பதையே அவர்கள் எதிர்நோக்கினார்கள். இன்று நாம், எந்தவொரு எதிர்ப்புமின்றி வாழ்ந்தாலும், சூழ்நிலைக் கிறிஸ்தவர்களாக வாழுவது எப்படி?

“மரணமானாலும், ஜீவனானாலும், நிகழ் காரியங்களானாலும் வருங்காரியங்களானாலும்… நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38,39).

ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் சந்திக்கும் பாதகமான சூழ்நிலைகளிலும் உமது அன்பில் நிலைத்திருக்கிற உறுதியை எங்களுக்குத் தாரும். ஆமென்.