ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 30 புதன்

தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:16). இந்த மாதம் முழுவதும் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்தித்து வழிநடத்தின தேவனைத் துதிப்போம். சத்திய வசன ஊழியத்தின் தேவைகளை சந்தித்து அவர் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.


அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக்.18:7). – இயேசு கிறிஸ்து

உயர்ந்த பெறுமதிப்பு

தியானம்: 2020 செப்டம்பர் 30 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 6:1-7

…ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் (ஏசாயா 6:5).

“நான் என் சொந்த வீட்டிலே திருடுகிறேன். என் கணவனின் அடி உதைக்குப் பயந்து பொய்யும் கூறுகிறேன்” என்று ஒரு சகோதரி வேதனையோடு சொன்னாள். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “கணவனும் சரி, உழைக்கின்ற பிள்ளைகளும் சரி, கணக்குப் பார்த்துத்தான் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆகவே, நான் அவர்களில்லாத நேரங்களில் திருடுகிறேன்” என்றாள் அத்தாய். என்ன பரிதாபம்!

தேவ கட்டளைகள் நம்மைக் குற்றவாளிகளாக்கி நியாயந்தீர்க்கும் நோக்கத்தோடு கொடுக்கப்படவில்லை. நமது வாழ்வின் பெறுமதிப்பை நமக்கு விளக்குவதற்காகவும், நம்முடைய தேவனுடைய பரிசுத்தத்தை ஞாபகப்படுத்தவும், எது சரி – எது தவறு என உணர்த்தவுமே அவை தரப்பட்டுள்ளது. ஆகவே நாம் நமது பெறுமதிப்பைப் பாதுகாக்க வேண்டும், ‘என் தேவன் யார் என்பதை இவ்வுலகம் காணவேண்டும்’ என்ற வாஞ்சை நமக்கு அவசியம். நாம் உண்மை பேசுவதன் நோக்கம், நான் பொய் சொல்லுவதில்லை என்று பெருமை பாராட்டுவதற்காக இருக்கக்கூடாது; மாறாக, என் தேவன் உண்மையுள்ளவராகையால் நானும் உண்மை உள்ளவனாயிருக்க வேண்டும் என்பதே நம் நோக்கமாகட்டும். இது எல்லாக் கட்டளைகளுக்கும் பொருந்தும். நமது அன்றாட வாழ்விலே நமக்கு வரும் சோதனைகள் யாவும் தேவனை கிட்டிச் சேருவதாகவே. அதே சமயம் இது நமக்கு ஒரு பெரிய போராட்டம்தான். எனினும், நமது காரியங்களை தேவ சமுகத்தில் மனதார அறிக்கை செய்து விட்டோமானால் அவரே நம்மை நடத்துவார்.

அந்த உன்னதமான தரிசனத்தைக் கண்ட ஏசாயா, மகிழ்ச்சியால் துள்ளவில்லை. மாறாக, தேவ சமுகத்தில் தன் பாவ நிலைமையை உணர்ந்து கதறினார். தேவன் அவர் அக்கிரமத்தை நீக்கி பாவத்தைப் போக்கினார். இல்லாவிட்டால், “இதோ அடியேன்” என்று ஏசாயா தன்னை அர்ப்பணித்திருக்க முடியாது. தொடர்ந்து, ஏசாயா கர்த்தருடைய வார்த்தையைத் துணிகரமாக உரைத்திருக்கவும் முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படிய ஒரே வழி அவரிடம் சரணடைவதுதான்.

தேவன் தமது பிள்ளைகளைக் குறித்து வைத்திருக்கிற மதிப்பு மிகவும் உயர்ந்தது. இல்லையானால் தம்மையே பலியாகத் தந்திருப்பாரா? ஆக, தேவ கட்டளைகளை நாம் பாரமாக எண்ணக்கூடாது. அவற்றைக் கைக்கொள்ள வேண்டிய பெலனை கர்த்தர் தருகிறார். இன்றே நமது பாவ நிலையை உணர்ந்து, அறிக்கையிட்டு, மனந்திரும்பி தேவனுக்காக வாழ்வோம்!

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை (சங்.16:8).

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் என்னைக் குறித்து வைத்திருக்கிற மேன்மைக்கும் கனத்திற்கும் ஏற்ப நான் உண்மையாகவும் பரிசுத்தமாகவும் வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 29 செவ்வாய்

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது (சங்.19:8). SMS வாயிலாக அனுதினமும் அனுப்பப்படும் வேத வாக்கியங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவும், அவ்வசனங்கள் அவர்கள் வாழ்க்கையில் கிரியை செய்யவும் ஜெபிப்போம்.

பரலோகவாசியே….

தியானம்: 2020 செப்டம்பர் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: 1பேதுரு 4:1-7

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டுவிலகி… (1பேதுரு 2:11).

பயணம் செய்யும்போது, பொதுவாக பேருந்து நடத்துனர்கள் உரிய ரசீது (டிக்கட்) தருவதில்லை. ஆனால் தூரத்தில் பரிசோதகரை கண்டதும், டிக்கட் புத்தகத்தை கையிலெடுத்து எல்லோரிடமும் டிக்கட்டைத் திணிப்பார்கள். குறிப்பிட்ட இடத்தைக் கடந்ததும் டிக்கட் கொடுப்பதை மீண்டும் நிறுத்திவிடுவார்கள். மனுஷர் காணும்படி நடித்துவிட்டு, பின் மறுபடியும் தவறைச் செய்வது பாவ செயல் அல்லவா! இப்படிப்பட்ட இரட்டை வாழ்வு ஒரு விசுவாசிக்கு அழகல்ல. கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் உண்மையாக ஒற்றை வாழ்வு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கு இந்த உலகம் நிரந்தர இருப்பிடம் அல்ல. விசுவாசி என்பவன் பரலோகவாசி. பரலோகத்தில் தேவன் இருக்கிறார். அங்கே அவரது ஆளுகையும் பெறுமதியுமே காணப்படும். அதற்கேற்பவே பரலோகவாசி வாழுவான். நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் போது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உலகிற்கு அந்நியரும் பரதேசிகளுமாகவே மாறுகிறோம். நாம் இப்பூமிக்கு சொந்தமானவர்களல்ல. அப்படியிருக்க பூமிக்குரிய காரியங்களில் நமது இருதயம் ஆசை வைக்கலாமா? நாம் இவ்வுலகில்தானே வாழுகிறோம் என்று நாம் நினைக்கலாம். ஆம், அது உண்மை. ஆனால் இவ்வுலகில் வாழும்வரை ஆண்டவர் நமக்குப் போதுமானவராகவே இருப்பார், இருக்கிறார். அவரிடம் நமக்கு விசுவாசம் இருக்குமானால் நமது தேவைகளை அவர் நிச்சயம் சந்திப்பார். பின்னர் எதற்கு இந்த இச்சை? ‘போதும் என்ற மனது’ இருக்குமானால், வாழ்ந்திருக்கவும் தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொண்டு, நமது ஆத்துமாவோடு போர் செய்கின்ற இந்த மாம்ச இச்சைகளை நாம் வெகு இலகுவாக வெட்டி வீழ்த்திவிடலாமே.

பிரியமானவர்களே, இச்சைப்பட்டு மாண்டுபோன அநேகரை வேதாகமத்திலே காண்கிறோம். மேலோ கீழோ எங்கே நிறுத்தப்படுகிறோமோ, கொஞ்சமோ அதிகமோ எவ்வளவு நமக்குக் கொடுக்கப்படுகிறதோ அதிலே திருப்தியாயிருந்து, பிறருக்கு நன்மையாகவும் நமக்குத் திருப்தியாகவும் கடமைகளை நிறைவேற்றுவோமாக. அடுத்தவன் மனைவி, அடுத்தவன் சொத்து, அடுத்தவன் பொருள் இவை நமக்கு வேண்டாம். நமது இருதயம் எப்போதும் தேவனோடு இசைந்து நிறைந்திருக்கட்டும். பாவம் பொல்லாதது. அது நம்மையும் குடும்பத்தையும் வேரோடு அழித்துப்போடும். தெளிந்த சிந்தனையோடு ஜெபத்தில் தரித்திருப்போமாக. உலகம் நம்மை உதறித்தள்ளட்டும்; நாம் தேவனுடைய பிள்ளைகளல்லவா!

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக் கடவோம் (எபி.12:28).

ஜெபம்: வல்லமையின் தேவனே, இச்சை என்ற கொடிய அரக்கன் எங்களை நெருங்காதபடி எப்பொழுதும் உமது பிரசன்னத்தில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.